இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா நீண்ட காலமாக அறியப்பட்டது. ஆனால், சமீபத்திய ULLAS திட்டத்தின் அடிப்படையில் மிசோரம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.
இயற்கையும், கல்வி சாதனையும் ஒன்றாக இணைந்த இந்த மாநிலத்தின் கதை மிகவும் சுவாரசியமானது.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிசோரத்தின் பெரும்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.
உயரமான மலைகள், அழகான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கை எழில் நிறைந்த பகுதிகள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன.
இதனால், சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவரும் மாநிலங்களில் ஒன்றாக மிசோரம் திகழ்கிறது.
இம்மாநிலத்தின் தலைநகரம் அய்சால். “மி” என்பது மக்கள் என்றும், “சோ” என்பது மலை என்றும் பொருள்படுவதால், மிசோரம் என்றால் “மலை மக்களின் நிலம்” என்று அர்த்தம்.
இன்றைய மிசோரம் கல்வியில் சாதனை படைத்த மாநிலமாக இருந்தாலும், அதன் வரலாறு பல சவால்களை எதிர்கொண்டதாக இருந்தது.
ஒரு காலத்தில் இந்தப் பகுதி அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் 1987-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது.
மிசோரத்தின் வரலாற்றில் “மவுதம்” என்ற பஞ்சம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் செடிகள் பூக்கும்.
இதன் காரணமாக எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து விவசாய பயிர்கள் அழிந்ததால் மக்கள் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டனர். ஆனால், அந்த சவால்களை கடந்து இன்று மிசோரம் வளர்ச்சியின் புதிய பாதையில் பயணித்து வருகிறது.
சமீப ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்லும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
அந்த வகையில் “உல்லாஸ்” திட்டத்தின் மூலம் படிப்பறிவு இல்லாத பெரியவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது.
பள்ளிகள், சமூக அரங்குகள், நூலகங்கள் மற்றும் வீடுகளில்கூட அவர்களுக்கு வசதியான நேரங்களில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த முயற்சிகளின் விளைவாக மிசோரம் தற்போது 98 சதவீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவு விகிதத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்த மாநிலம், இன்று நாட்டின் மிகவும் உயர்ந்த கல்வியறிவு கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது
மிசோரத்திற்கு மற்றொரு தனிச்சிறப்பும் உள்ளது. நீண்ட காலமாக பைராபி என்ற முக்கிய ரயில் நிலையம் மட்டுமே மாநிலத்தின் முக்கிய ரயில் இணைப்பாக இருந்து வந்தது.
தற்போது புதிய ரயில் பாதைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மிசோரம் அமைதியான வாழ்க்கை முறை, இயற்கை அழகு மற்றும் தனித்துவமான கலாச்சாரம் ஆகியவற்றால் இந்தியாவின் மிகவும் சிறப்பான மலை மாநிலமாகவும் கல்வியின் மூலம் நாடு முழுவதற்கும் முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– சங்கீதா