கிராமத்து வாழ்க்கையும் அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது!

எழுத்தாளர் சோ.தர்மன் ஆதங்கம்

எங்கள் தாத்தா, எங்கள் ஊரை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார். எங்கள் அய்யா 50 ஊர்களுக்குப் போயிருப்பார்.

டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என நான் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். என் மகனோ சர்வசாதாரணமாக ஸ்பெயின், ஜெர்மன், அமெரிக்கா போய்க்கொண்டிருக்கிறான்.

இவையெல்லாம் உடையிலும் பேச்சிலும் பிரதிபலிக்கும். இலக்கியத்திலும் அந்தத் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

இரண்டு கிளிகள் வைத்து ஒரு கதை எழுதினேன். வனம் அழிக்கப்பட்ட நான்குவழிச் சாலையில், கூடுகட்டிக் குஞ்சு பொரித்த பின்பாகத் தனது குஞ்சுகளுக்குக் கத்தச் சொல்லிக்கொடுக்கிறது தாய்ப் பறவை.

ஆனால், வண்டியின் ஹாரன் சப்தம் கேட்டுப் பழகிய அந்தக் கிளிகள், ஹாரன் போலவே கத்தத் தொடங்கிவிடுகின்றன. சமகாலப் போக்கும் இப்படித்தான் இருக்கிறது.

மாடு கமலையில் இரைக்கும்போது அங்கே இரண்டு பக்கத்திலும் பூவரசு மரங்கள்தான் வைத்திருப்பார்கள். மரங்களிலேயே அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடக்கூடிய மரம் பூவரசுதான்.

மாடுகள் தெவங்கி தவித்துப் போவதிலிருந்து ஆசுவாசம் கொள்ள இப்படிச் செய்திருக்கிறார்கள். இது எப்படி நமது முன்னோர்களுக்குத் தெரிந்தது?

இதையெல்லாம் உரைநடைக்குக் கொண்டுவர வேண்டும். இன்றைய தலைமுறைக்கு இதையெல்லாம் சொல்ல வேண்டியது கடமை.

முன்பெல்லாம் பாவைக்கூத்து, காவடியாட்டக்காரர்கள், மரக்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், பொலிப் பாட்டுக்காரர்கள் என அறுவடைக் காலத்தைக் கணக்கிட்டு, பத்துப் பதினைந்து நாடோடிக் கூட்டங்கள் கிராமத்துக்கு வந்துவிடும்.

பூம்பூம் மாட்டுக்காரர்கள், இராப்பாடிகள், சாமக்கோடாங்கிகள் இப்போது அபூர்வமாகிவிட்டார்கள். வாழ்க்கையே கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இப்போது கிராமப்புற வாழ்க்கையிலும் நகைச்சுவை அற்றுப்போய்விட்டது.

கி.ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம் ஆகியோர் ஓரளவு பதிவு செய்திருக்கிறார்கள். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன.

  • எழுத்தாளர் சோ. தர்மன் 
You might also like