பரவ ஆரம்பித்துவிட்ட கரப்பான் பூச்சிகள்!

மனதின் குரல்:

கடந்த மே மாதத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், முகநூல் பக்கங்களை மட்டுமே இயக்கியபடி இருக்கும் இளைஞர்கள் கூட்டத்தைக் குறிவைத்து அவர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார், அவர் எந்த இளைஞர்களைக் குறிவைத்து அப்படி அழைத்தாரோ, அந்தக் கரப்பான் பூச்சிகள் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன.

‘கரப்பான் பூச்சிகள் மக்கள் கட்சி’ அதாவது ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்கிற பெயரில், சில தினங்களுக்குள் சமூக வலைத்தளம் துவக்கப்பட்டு மிகக் குறைவான காலத்திற்குள்ளேயே ஏறத்தாழ ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், பாஜகவின் சமூக வலைத்தளப் பக்கங்களைவிட தாண்டிவிட்டன இந்த கரப்பான் பூச்சியின் பக்கம்.

இப்படி ஒரு கரப்பான் பூச்சியின் படையெடுப்பை, அந்த அடைமொழியைச் சொன்ன நீதிபதியும் எதிர்பார்த்திருக்கமாட்டார். பாஜக போன்ற ஆளுங்கட்சியும் எதிர்பார்த்திருக்காது.

ஆனாலும், கரப்பான் பூச்சிகள் அந்த மக்கள் இயக்கம் துவக்கப்பட்டதோடு அது சில நிபந்தனைகளையும் முன்வைத்திருக்கிறது.

அதில், முக்கியமாக நீதிபதிகள் ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கு எந்தவிதமான அரசியல் பொறுப்பும் கொடுக்கப்படக் கூடாது என்பதில் துவங்கி சில நிபந்தனைகளை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவையெல்லாம் சட்டென்று அரசியலில் நிகழக்கூடிய மாற்றங்களாக இருக்கின்றன.

எப்படி தேசிய அரசியலில் குறிப்பாக டெல்லியில் ஆம் ஆத்மி என்கிற கட்சி மிகக் குறுகிய காலத்தில் துவக்கப்பட்டு, அது பரவலான அங்கீகாரத்தையும் பெற்று, எப்படி ஆட்சி பொறுப்புக்கு குறுகிய காலத்தில் வந்ததோ,

அதைப்போலவே தற்போது வேலையின்மையால் பரவலாக பாதிக்கப்பட்டிருக்கிற இளைஞர்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது இந்த ‘கரப்பான்பூச்சி மக்கள் இயக்கம்’.

இத்தகைய நிகழ்வு தேசிய அளவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டை மையமாக வைத்து மெரினா உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடந்திருக்கிறது.

அதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக எந்த அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாமல் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய போராட்டம் எந்த அளவிலும் ஒழுங்கு மீறாமல் மிகக் கறாரான முறையில் எப்படி நடந்தது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

அந்தப் போராட்டம் ஆரம்பித்து இரண்டு நாட்களுக்குள் சில அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மெரினா கடற்கரைக்குள் வந்தபோது, அந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் ஒரு பையில் 10 லட்சம் ரூபாய் பணத்தை அந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களிடம் கொடுக்க முற்பட்டபோது,

“யார் அதைக் கொடுத்திருக்கிறார்கள்” என்று கேட்ட இளைஞர்கள், “எந்த விதத்திலும் அதை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்” என்று சொல்லியிருப்பது அரசியல் கட்சிகள் மீது அந்த இளைஞர்கள் வைத்திருந்த மதிப்புக்கு ஒரு உதாரணம்.

ஆக, எந்த அரசியல் இயக்கங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் தங்களைத் தாங்களே எந்த செல்போனை வைத்து இளைஞர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்களோ அதே செல்போனை வைத்து அவர்கள் மெரினா கடற்கரையில் ஒருங்கிணைந்தார்கள்.

ஆண், பெண் பால் பேதமற்று ஒருங்கிணைந்து வலுவான முழக்கத்தை முன்வைத்து, அந்த முழக்கம் டெல்லி வரை சென்று நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட்டன.

ஆனால், நிறைவாக அந்த இளைஞர்களின் ஒருங்கிணைப்பை குலைக்கும் விதத்தில் கடுமையான தடியடி பிரயோகம் அதே இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்டதெல்லாம் இதே தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது.

டெல்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலங்களிலும் தற்போது வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

தற்போது மேற்காசியப் போரின் விளைவாக பல வெளிநாடுகளிலிருந்து வேலையில்லாமல் திரும்பி வருகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது.

அப்படி இங்கிருக்கிற இளைஞர்களில் பெரும்பாலான ஒரு எந்த ஆளுங்கட்சியாக இருந்தாலும், அந்த ஆளுங்கட்சியினர் ஒழுங்கீனங்களையும், அவர்களுடைய அதிகார வரம்பு மீறல்களையும், ஊழலையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த இளைஞர்களைத்தான் வடநாட்டில் கரப்பான் பூச்சிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்குறிகள் என்கிறார்கள்.

ஆக, இத்தகைய அடைமொழிகளை வீசுகிறவர்கள் தவறு செய்யாதவர்களா?

இயேசு சொன்னபடி, “உங்களில் யார் தவறு செய்யாதவர்களோ, அவர்கள் என் மீது கல்லெறியுங்கள்” என்று சொன்னபடி, இன்றைய இளைஞர்கள் மீது கல்லெறியக் கூடிய தகுதி யாருக்கு இருக்கிறது என்பது தான் இன்றைய காலகட்டம் எழுப்பும் முக்கியமான கேள்வி.

– அகிலன்

 
You might also like