காட்டு எல்லைப் பகுதிகளில் மனிதர்-யானை எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காடுகளுக்கு அருகிலுள்ள வேளாண் நிலங்கள் யானைகளின் இயற்கை வழித்தடங்களை ஒட்டியுள்ளதால், அவை உணவு தேடிக் கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது.
இதனால் பயிர்ச் சேதம், பொருளாதார இழப்பு, மனித உயிருக்கு அபாயம் போன்ற பல பிரச்சினைகள் உருவாகின்றன.
இத்தகைய சூழலில் பாதுகாப்பான, நிலையான தீர்வாகச் சூரிய ஆற்றல் வேலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சூரிய ஆற்றல் வேலி என்பது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி குறைந்த மின்னழுத்த அதிர்ச்சியாக வேலியில் செலுத்தக்கூடிய ஓர் அமைப்பு.
இந்த வேலியை யானைகள் தொடும்போது, அவற்றுக்குத் தீங்கு இல்லாத அளவிலான மின் அதிர்வால், அவை பின்வாங்குகின்றன.
இதனால் பயிர் நிலங்களுக்குள் அவை நுழைவது குறைக்கப்படுகிறது. இந்த நடைமுறை யானைகளைக் காயப்படுத்தாமல் தடுக்கிறது.
சூரிய வேலிகளில் ஒற்றைக் கம்பி, பல கம்பி அமைப்புகள் உள்ளன. ஒற்றைக் கம்பி வேலி குறைந்த செலவில் அமைக்கப்படக் கூடியது. ஆனால், பல கம்பி வேலி அதிகப் பாதுகாப்பை அளிக்கிறது.
மேலும், சமூக அடிப்படையிலான பராமரிப்பு முறையில், கிராம மக்கள் இணைந்து வேலியைப் பராமரிப்பது, அதன் செயல்திறனை நீண்ட காலம் நிலைநிறுத்த உதவுகிறது.
இந்த வேலிகளின் தனிச்சிறப்பு என்னவென்றால், மின் கம்பிகள் மூலம் மின்சார விநியோகம் இல்லாத பகுதிகளிலும் இயங்கும் திறன் கொண்டது.
சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்குப் பெரிய பாதிப்பு இல்லை.
எரிபொருள் தேவை இல்லாததால் செலவினமும் குறைகிறது. யானைகளுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தாமல் அவற்றைத் தடுப்பது இதன் முக்கிய அம்சம்.
சூரிய வேலிகள் மனிதர்-யானை எதிர்கொள்ளலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வயல்களுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கின்றன.

இதனால் உழவர்களின் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான நேரடி எதிர்கொள்ளலைக் குறைகின்றன.
இதன் மூலம் யானைகளுக்கு எதிராக மனிதர்கள் தாக்குதல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் குறைகின்றன.
இருந்தாலும், சரியான பராமரிப்பு இல்லையென்றால் இந்த அமைப்பின் செயல்திறன் குறையலாம். எனவே அரசு ஆதரவு, சமூகப் பங்களிப்பு மிகவும் அவசியம்.
சூரிய வேலிகள் யானைகளை வேறு பாதைகளுக்குத் திருப்பிவிடும் பட்சத்தில், அங்கு சூரிய வேலி அமைக்க வசதி இல்லாத பின்தங்கிய ஏழை உழவர்களின் பயிர்கள் யானைகளால் பாதிக்கப்படுகின்றன. இதற்கும் தீர்வுகான வேண்டிய தேவை உள்ளது.
– செந்தில்குமரன், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
artsenthil@gmail.com
நன்றி: தி இந்து தமிழ் திசை