ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் முதலிடம் தரும் அடிசில்!

நாம் அதிகம் சுவைக்காத இலங்கைத் தமிழர் உணவு வகைகளை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் ‘அடிசில்’ உணவகம் அளிக்கிறது.

“எங்க உணவு வகைகளில் 90% தேங்காய்பால் சேர்த்துச் சமைக்கப்படுகிறது” என்கிறார் இங்கு பணியாற்றிவரும் கௌரி நாதன்.

இவருடன் பிரதீபா, விஜிதா ஆகியோர் இணைந்து இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

அடிசில் உணவகத்தில் பணியாற்றும் 12 பேரும் புழல் அகதிகள் முகாமில் வசிப்பவர்கள். காலை 6 மணிக்குத் தொடங்கும் இவர்களது பணி இரவு 8 மணி வரை தொடர்கிறது.

கட்லெட், ரோல் என நாம் கேள்விப்பட்ட சிலவற்றில் தொடங்கி, முட்டை அப்பம், மஞ்சள் தோசை எனப் பலர் கேள்விப்படாத உணவு வகைகள் வரை இவர்களின் பட்டியலில் இருக்கின்றன.

”தமிழர்களின் காலை உணவு இட்லி, தோசை அல்ல; இடியாப்பம், புட்டுதான். இவற்றுக்குச் சிவப்பு அரிசியைப் பயன்படுத்துகிறோம்” என்கிறார் கௌரிநாதன்.

தேங்காய்பாலில் செய்யப்படும் சொதி, சம்பல் ஆகியவற்றுக்குத் தமிழகத்தில் ரசிகர்கள் கணிசம்.

பருப்பு சேர்த்துச் சமைக்கிற சொதி மட்டுமல்லாமல் மீன், கருவாடு, கணவாய் சொதிகளும் கிடைக்கின்றன.

இரவு நீர் ஊற்றி வைத்த சோற்றுடன் தேங்காய்ப் பால் ஊற்றி எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துச் செய்யப்படும் தேங்காய்ப்பால் கஞ்சி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இனிப்பு வகைகளைப் பொறுத்தவரை, பாசிப்பயறு கொண்டு சமைக்கப்படும் சுசியம், தொதல் ஆகியன நாவில் எச்சிலூற வைப்பவை.

“தொதல், அல்வா போலிருக்கும். ஒரு கிலோ அரிசி மாவுக்கு 30 தேங்காயின் பாலைக் கலந்து வெல்லம், ஏலக்காய் சேர்த்து, விறகடுப்பில் நான்கு மணி நேரம் கிண்டிக் கொண்டே இருந்தால் ருசியான தொதல் தயார்.

மாலையில் விற்கும் லெவரியா, வாழை இலையில் இடியாப்பம் பிழிந்து, அதனுள் பாசிப்பயறு, தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து வேக வைப்போம். அதற்கும் நல்ல வரவேற்பு” என்கிறார் கௌரி நாதன்.

நொறுக்குத் தீனி பட்டியலில் பருத்தித்துறை வடை நம் கவனத்தைக் கவர்கிறது.

இவையனைத்தையும் கடந்து, இலங்கையின் புகழ்பெற்ற ஒடியல் கஞ்சி, புட்டு ஆகியனவும் இங்கு கிடைப்பது சிறப்பு. 

ஒடியல் மாவு என்பது பனங்கிழங்கைக் காய வைத்து, மூன்று நாள்கள் கழித்து உரலில் போட்டு இடித்து, சலிக்கும்போது கிடைப்பது. அதில் புட்டு செய்யலாம்.

இவை போக, இங்கு கிடைக்கும் நெய்சோறு, கோழிக்கறி / மீன் / இறால், கணவாய் பிரட்டலுக்கும் உணவுப் பிரியர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில்லாமல் அடிசில் சென்றால், ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைப்பது உறுதி.

செயற்கைச் சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்காமல் வீட்டுச் சமையலைப் போல இருப்பது சிறப்பு.

“ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம், தென்னிந்திய வர்த்தகச் சபை, சென்னை மாநகராட்சி, சென்னை மிஷன் அறக் கட்டளை, ஹாப்ரெட்ஸ் மகாதேவன், OfERR தன்னார்வத் தொண்டு நிறுவனம் எனப்பலரது ஆதரவு, வழிகாட்டுதல், உதவி யோடு உருவானது அடிசில்” என்கிறார் கௌரிநாதன்.

“கடந்த நாற்பதாண்டுகளாகத் தமிழகத்தில் வசித்துவரும் அகதிகள், தற்சார்புடன் சுயமாகச் செயல்படுவதற்கான திட்டங்களைத் தமிழக அரசு மேற்கொண்டு முகாம்களில் பணிமனை அமைத்தல், தொழில் நடத்துவதற்கான கடன்வசதி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் இப்போது ‘அடிசில்’ ஒரு முகாமில் உள்ள 15 குடும்பங்களுக்குப் பலனளிக்கிறது.

பல முகாம்களில், பல குடும்பங்களுக்குப் பலனளிக்கும் வகையில் இதனை முன்னெடுக்க வேண்டும்” என்கிறார் ஐ.நா. அகதிகள் உயர் ஆணைய அலுவலகத்தில் கள அதிகாரியாகப் பணியாற்றும் சச்சிதானந்த வளன் மைக்கேல்.

-உதயசங்கரன் பாடகலிங்கம்

  • நன்றி : இந்து தமிழ் திசை இதழ்
     
You might also like