வலிகளைக் குறைக்க உதவும் மருத்துவக் கருவிகள்!

நவீன உலகில் பல்வேறு காரணங்களினால் உடலில் நோய்த் தாக்குதல் உண்டாகிறது.

மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் தொற்று நோய்கள் உலகம் முழுவதும் பெருகி வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியும் நாகரிகமும் வாழ்க்கையை எளிதாக்கியுள்ள அதே வேளையில் நோய்கள் தரும் வலிகளின் பிடியில் பெரும்பாலானோர் சிக்கித் தவிக்கின்றனர்.

நோயின் தன்மையை நாமே கண்டறிவதற்கும் அதனால் ஏற்படும் வலிகளைக் குறைப்பதற்கும் உதவும் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

நம்முடைய நாள்பட்ட மற்றும் திடீர் வலிகளை நிர்வகிக்க மருத்துவ வலி மேலாண்மை முறைகள் நமக்கு பெரும் உதவி புரிகின்றன.

நவீன மருத்துவ உபகரணங்கள் மருந்துகளை சார்ந்து இருப்பதைக் குறைத்து பக்க விளைவுகள் இல்லாத நிவாரணத்தை வழங்குகின்றன.

எனினும் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை பயன்படுத்த வேண்டும்.

TENS இயந்திரம்:

இது நரம்புகளுக்கு மென்மையான மின் தூண்டுதல்களை அளித்து முதுகுத் தண்டு மற்றும் மூளைக்கு செல்லும் வலி சமிக்ஞைகளை தடுத்து நிறுத்துகின்றன.

இதனால் என்டோர் பின்கள் எனப்படும் இயற்கை வலி நிவாரணிகள் உற்பத்தி செய்ய தூண்டப்படுகின்றன.

பயன்படுத்த மிகவும் இலகுவானது மற்றும் சிறியதானது என்பதால் வீட்டிலோ வேலை இடத்திலோ அல்லது பயணத்தின்போதோ எளிதாக இதனை பயன்படுத்த முடியும்.

முதுகு வலி மற்றும் தசைப் பிடிப்பு, கழுத்து வலி, மாதவிடாய் வலி, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி ஆகியவற்றுக்கு இது பெரிதும் உதவுகிறது.

அக்கு பிரஷர் மேட்கள்:

இதன் மேல் காலை வைத்து அழுத்தம் தரும்போது உடம்பில் இருக்கும் செல்கள் அனைத்தும் சுறுசுறுப்பு அடைவதால் ரத்த ஓட்டம் சரியாகும்.

கால் வலிக்கு தீர்வு கிடைக்கும். அலுவலகத்திலும் கார் பயணத்தின் போதும் இதனை காலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம்.

வீட்டிலும் இதன் மேல் நின்றபடி வேலை பார்க்க முடியும்.

மேக்னடிக் தலைவலி பேண்ட்:

தாங்க முடியாத தலைவலிக்கு சிறந்த தீர்வை அளிக்க வல்லது. இதில் பிரஷர் பாய்ண்ட் இருப்பதால் தேவையான அழுத்தத்தை தந்து தலைவலியை எளிதாக போக்க செய்யும்.

மேலும் எலாஸ்டிக் பிடி உள்ளதால் எவர் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.

வெப்பப் பைகள்:

இவை தசை இறுக்கத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன.

குளிர்ந்த பைகள்:

வீக்கத்தைக் குறைத்து வலியுள்ள பகுதியில் உள்ள ரத்தக் கட்டுகளை விடுவிக்கின்றன.

மூட்டு வலிக்கான ஆதரவு சாதனங்கள்:

இவை மூட்டுகளை உறுதிப்படுத்தி காயங்கள் மேலும் மோசம் அடைவதை தடுக்கின்றன.

அக்குப் பிரஷர் காலணிகள்:

இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி மூட்டு வலி, பாத வலி மற்றும் முதுகு வலியை அறவே நீக்குகின்றன.

ரோலர் கருவிகள்:

கை மற்றும் கால்களில் வலி அல்லது வீக்கம் இருந்தால் அந்த இடங்களில் இந்த ரோலரை வைத்து உருட்டும் பொழுது உடனடி நிவாரணம் கிடைக்கும். எங்கு வேண்டுமானாலும் இதனை எடுத்துச் செல்லலாம்.

ரிப்லெக்ஸாலஜி காலணிகள்:

உடம்பில் இருக்கும் எல்லா நாளமில்லா சுரப்பிகளையும் தூண்டிவிடும் ஆக்டிவேட்டர்கள் இதில் இருப்பதால் இதை அணியும் பொழுது பாதத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது மட்டுமல்லாமல் உடம்பின் எல்லா சுரப்பிகளையும் சீராக வேலை பார்க்கச் செய்யும். காலை நேர நடை பயணத்திற்கு மிகவும் ஏற்றது.

மசாஜ் இருக்கைகள் மற்றும் கருவிகள்:

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதால் வரும் முதுகு வலிக்கு இது சிறந்த தீர்வளிக்கும்.

கார் பயணத்தின் பொழுதும் வீட்டில் உள்ள பொழுதும் இதனை எளிதாக பயன்படுத்த முடியும்.

பேட்டரியின் உதவியோடு செயல்படும் இது, தசைகளில் ஏற்படும் சோர்வு மற்றும் வலியை உடனடியாக போக்கும்.

கம்ப்ரஷன் சாக்ஸ் மற்றும் டயாபடிக் சாக்ஸ்:

கால்களில் அணியப்படும் மருத்துவ குணமிக்க இந்த உறைகள் கால்களில் சீரான அழுத்தத்தை உருவாக்குகின்றன.

ரத்த நாளங்களைச் சுற்றி உள்ள திசுக்களில் அழுத்தம் தருவதால் ரத்த ஓட்டம் சீராகிறது.

நீண்ட நேரம் நிற்பதால் ஏற்படும் கால் வலி மற்றும் கணுக்கால் வீக்கத்தை இவை குறைக்கின்றன.

நரம்புகள் சுருண்டு போகும் வெரிகோஸ் வெயின் பிரச்சினைக்கும் இவை தீர்வளிக்கின்றன.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உபயோகப்படுத்தக்கூடிய பிரத்தியேக கால் உறைகளும் வடிவமைக்கப்படுகின்றன.

இவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நரம்பு பாதிப்பு உள்ள கால்களில் ஏற்படும் காயங்கள், கொப்பளங்கள் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க உதவுகின்றன.

இது ஒரு மருந்தில்லா சிகிச்சை முறை என்ற போதிலும் கர்ப்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் தோல் உணர்வு திறன் குறைபாடு உள்ளவர்கள் போன்றோர் இவற்றை பயன்படுத்துதல் கூடாது.

அவரவரின் உடல் நிலைக்கு ஏற்ற கருவிகளை மருத்துவர் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

எனவே உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இவற்றைப் பயன்படுத்தி நலம் பெறுவோம்.

S. வாணி

You might also like