தமிழகத்தின் மூலை முடுக்களில் அலறிய ஒலிபெருக்கிகள் மவுனமாகி விட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக, மாநிலம் முழுவதும் சுழன்று வந்த தலைவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு பரப்புரையை முடித்து விட்டு, வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.
விடியலுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நாளை காலை 7 மணிக்கு வாக்குச்சாவடிகளுக்கு சென்று, ஜனநாயகக் கடமையை மேற்கொள்ளும் தலைவர்களுக்கு, அடுத்த மாதம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4 ஆம் வரை உறக்கம் இருக்காது.
நமது தலைவர்களின் கடைசி நிமிட பிரச்சாரங்கள் எப்படி இருந்தன. பார்க்கலாம்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
அங்கு அவர் பேசியவை:
“சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரிந்தது அரசியல்… அரசியல்… அரசியல் மட்டும்தான் – தலைவர் கருணாநிதியைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்கள் வருவார்கள்.
அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்ததால் மக்கள் பணி செய்யும் ஆர்வம் சின்ன வயதினிலேயே ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர். கூட என்னைப் பார்த்து, ‘நீ என்ன இந்த சின்ன வயதினிலேயே கட்சி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஒழுங்காகப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன்’ என எனக்கு அட்வைஸ் செய்துள்ளார்” என பழைய நினைவுகளை மக்களிடையே பகிர்ந்தார் ஸ்டாலின்.
திமுகவுக்கு 20 சீட் :
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
“கருணாநிதி குடும்பத்துக்கு மற்ற கட்சிகளை உடைப்பது தான் வேலை. அதையெல்லாம் உடைத்து அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்தோம்.
எங்களை வீழ்த்த ஸ்டாலினால் மட்டுமல்ல, அவர் அப்பாவாலும் முடியவில்லை. பத்து தோல்வி பழனிசாமி என்கிறார் ஸ்டாலின். 2021 தேர்தலில் சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் 10-ல் வென்றோம்.
2011-ல் நீங்கள் எதிர்க்கட்சியாக வந்தீர்களா..? கருணாநிதி இருக்கும்போதே எதிர்க்கட்சியாக வரமுடியவில்லை.
திமுகவினர் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கின்றனர். ஆனால் அவர்கள் 20 இடங்களில் வெற்றி பெற்றாலே ஆச்சரியம்தான்” என முழக்கமிட்டார் இபிஎஸ்.
நந்தனத்தில் கர்ஜித்த விஜய் :
சென்னை நந்தனத்தில் தவெக தலைவர் விஜய், தனது பிரச்சாரத்தை முடித்தார்.
அவர் பேசியது:
என்னை நடிகர் நடிகர் என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் நடிகன் தான். நான் அரசியலுக்கு வந்து நடிக்கவில்லை.
மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப் போகும் தேர்தலில் கடைசி பிரச்சாரம்.
மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது.
ஏதாவது ஒரு பிரச்சினையென்றால் விஜய் வெளியே வர மாட்டார் என 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார்.
உங்களால் சேலத்தைத் தாண்டி வேறு இடத்தில் போட்டியிட முடியுமா? தோற்று விடுவோம் என்று பயந்துகொண்டு, சொந்தத் தொகுதியிலேயே நம்முடைய தவெக சின்னத்தைத் திருடியவர்’ என இபிஎஸ்சை வறுத்தெடுத்தார் விஜய்.
பிரச்சாரம் மாலை 6 மணிக்குத்தான் முடிந்தது. ஆனால் விஜய், 4 மணிக்கெல்லாம் பரப்புரையை முடித்து விட்டு, நீலாங்கரை இல்லத்துக்கு சென்று விட்டார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் போட்டியிடும் காரைக்குடியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.