வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ள தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று 6 தொகுதிகளில் போட்டியிட்டது. 4 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.
அந்த தேர்தலில் சுமார் ஒரு சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிடுவதில் திருமாவளவன் உறுதியாக இருந்தார்.
பல கட்டங்களாக திமுக தலைமையுடன் பேச்சு நடத்தப்பட்டது. அவர் கேட்ட தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வரவில்லை. பாஜக அணி வென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், கொஞ்சம் இறங்கி வந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை, திமுக கூட்டணியில் எட்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதிகளை வாங்கியதும் எட்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் திருமா.
யாரும் எதிர்பாராத விதமாக திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் தான் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 2016 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்திருந்தார்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு, விசிக தொண்டர்களிடையே மட்டுமின்றி, தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
அவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஹேஸ்யங்களை உருவாக்கிது. சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இதனால் தனது முடிவை திடீரென மாற்றிகொண்டார்.
திடீரென செய்தியாளர்களைச் சந்தித்து, “சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என அறிவித்து, நீண்ட விளக்கத்தையும் அளித்தார்.
அதன் சுருக்கம்:

“சட்டமன்றத்துக்குள் போகலாம் என நான் ஆசைப்பட்டேன். 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறும் என நான் கருதுவதாக எங்கள் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தேன்.
அப்போது நான் சட்டமன்றத்தில் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். இதன் பின்னணியில் வேறு எதுவும் இல்லை.
யுத்த காலத்தில் முன்னே செல்வதும், பின் வாங்குவதும் ஒரு யுக்தி. எனக்குப் பதவி ஆசை கிடையாது.
கூட்டணி ஆட்சியை நான் கோரமாட்டேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.
எனது நோக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சிலர் கருத்து பரப்பினர்” என்று விளக்கம் தந்தார்.
அதோடு, “நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக, மறைந்த தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதர 7 தொகுதிகளில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:
வன்னி அரசு – திண்டிவனம் (தனி)
ஆற்றல் அரசு – பெரியகுளம் (தனி)
மாலதி – கள்ளக்குறிச்சி (தனி)
அப்துல் ரகுமான் – பண்ருட்டி
எழில் கரோலின் – அரக்கோணம் (தனி)
பன்னீர் தாஸ் – திருப்போரூர் (தனி)
சிந்தனைச் செல்வன் – செய்யூர் (தனி)
பெரியகுளம் தவிர, விசிக போட்டியிடும் தொகுதிகள் அனைத்தும் வட மாவட்டங்களில்தான் உள்ளது.
இங்கு பாமகவுக்கு தனி செல்வாக்கு உள்ளது. அந்தக் கட்சி, இப்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விசிக வேட்பாளருக்கு சாதகமான சூழல் காணப்படுகிறது.
எஞ்சிய தொகுதிகளில் அவர்கள் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளனர் என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.