‘நெல்’ ஜெயராமன் எனும் விவசாயப் போராளியைப் பின்பற்றுவோம்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையாக விளங்குவது உணவு. அல்லும் பகலும் அயராது பாடுபடுவது இதன் பொருட்டே ஆகும்.

உணவு உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழும் விவசாயம் மூலம், உலகின் பசிப்பிணியைப் போக்கும் அரும்பணியை செய்து வருகின்றனர் விவசாயிகள்.

மண்வளம் காக்கும் இயற்கை விவசாயத்திற்கு நாட்டில் ஊக்கமளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சியை நிகழ்த்திச் சென்றிருப்பவர் தான் ‘நெல்’ ஜெயராமன்.

வழக்கொழிந்து போன பல நூறு நெல் ரகங்களை மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்த மாமனிதர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கட்டிமேடு கிராமத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார்.

பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும் விஞ்ஞானமும் கற்று உணர்ந்தவர்.

வயற் காடுகளையும் விவசாயிகளையும் தேடிச் சென்று பெற்ற அனுபவங்களைக் கொண்டு அதை விளைநிலத்தில் பயிராக்கிக் காட்டிய பெருமைக்குரியவர்.

பாரம்பரிய அரிசி வகைகளின் முக்கியத்துவம் அறியப்படுவதற்கு முக்கிய காரணியாக விளங்கியவர்.

மாப்பிள்ளை சம்பா அரிசி – இரத்த சர்க்கரையை தடுக்கும் திறன் உள்ளதாகவும்,
கவுனி அரிசி – நாள்பட்ட புண்ணை ஆற்றும் அருமருந்தெனவும்,
கருங்குருவை அரிசி – யானைக்கால் வியாதியை குணப்படுத்த கூடியது என்றும்,
பால் குடவாலை அரிசி – குழந்தை பெற்ற பெண்களின் பால் சுரப்பிற்கு உதவுவதாகவும்,
தங்கச்சம்பா அரிசி – உடலை உறுதியுடன் வைக்கும் தங்க பஸ்பம் எனவும்,
இப்பயிர்களின் பயன்களை எல்லாம் அனைவரும் உணரச் செய்து இதன் மகசூலை பன்மடங்காக்கியதில் முக்கிய பணியாற்றியவர்.

எந்த மண்ணில், எந்த நெல்லை, எந்த காலத்தில் விதைக்க வேண்டும் என்ற கணக்குகளை விவசாயிகள் அறிந்து செயல்பட வேண்டும் என்றவர், விதை வங்கி ஒன்றையும் நடத்தி வந்தார்.

புயல், மழை, வெள்ளம், வறட்சி ஆகியவற்றை தாங்கி வளரும் ரகங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவின் வழிகாட்டுதலின் பேரில், பொதுநல அமைப்பை தொடங்கியவர், அதன் மூலம் பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், மூலிகை பூச்சிக்கொல்லி, மீன் அமிலம் போன்ற இயற்கை சாகுபடிக்கு தேவையான பொருட்களைத் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தார்.

திருவாரூர், நாகை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களின் பல பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களுக்கு வேளாண் இடுபொருள் தயாரிக்க பயிற்சியும் அளித்துள்ளார்.

எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் விவசாயி பெரும்பாலும் நஷ்டத்தை அடைவதற்குக் காரணம் குறைவான விளைச்சலே என கண்டறிந்தவர் இதைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோதுதான் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய புரிதல் அவருக்கு ஏற்பட்டது.

ஜெயராமன் செய்த விவசாயம் எல்லோருக்கும் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

என்றைக்கு விவசாயி, காசு கொடுத்து விதையை வாங்கும் நிலை ஏற்பட்டதோ, அன்றைக்கே விவசாயம் நலிவடையத் தொடங்கியது என்ற தன் வருத்தத்தை பதிவு செய்தவர்.

இந்த நிலையை மாற்றுவதற்கு ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் கடைசி வார இறுதி நாட்களில் ‘நெல் திருவிழா’வை நடத்தினார்.

உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கு பெற்ற ஒவ்வொரு விவசாயிக்கும் 2 கிலோ பாரம்பரிய விதைகள் வழங்கப்பட்டன. இதனை மறுவருடம் நான்கு கிலோவாக திருப்பித் தர வேண்டும் என்ற விதிமுறையும் வகுக்கப்பட்டது.

இத்திட்டம் மூலம் பல்லாயிரம் விவசாயிகள் பயன் பெற்றனர். இவ்வாறு, பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க பாடுபட்ட இவரது சேவைக்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து பாராட்டுதல்கள் கிடைத்தன.

2012 ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த விவசாயி விருதும், இந்திய குடியரசு தலைவரிடமிருந்து சிறந்த மரபணு பாதுகாவலர் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இவர் காலமானார்.

‘நெல்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட ஜெயராமன், காற்றில் கரைந்து போனாலும் அவர் வகுத்துக் கொடுத்த நெறிமுறைகளும், மீட்டுத் தந்த நெல் மணிகளும் என்றென்றும் அவரின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும்.

S. வாணி

You might also like