வாக்காளரை நோக்கி நீளும் 4 கைகள்: தொடப்போவது எதை?

தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடந்தாலும் பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது மே 4-ம் தேதி அன்று எப்படிப்பட்ட முடிவு வெளியாகும் என்பதைத்தான்.

தமிழகத்தில் இப்போது திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம் இன்னும் பலதரப்பட்ட சிறு கட்சிகளின் கூட்டணியுடன் வலுவான தோற்றத்துடன் போட்டியிடுவது, திமுக கூட்டணிக்கு ஒரு முக்கியமான ‘பிளஸ் பாயிண்ட்’.

கூட்டணிக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில், பல நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தாலும், முணுமுணுப்புகளும் புலம்பல்களும் வெளிப்படையாக தெரிந்தாலும்கூட தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் இறங்கிவிட்ட பிறகு, அந்த உணர்வுகள் பின்தங்கிப் போய் விடுகின்றன.

மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையை ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் திமுகவினரே புகழ்ந்து பேசினாலும் கூட, அதில், பிரதானமானது இல்லத்தரசிகளுக்காக திமுக முன்வைத்த 8000 ரூபாய் கூப்பன்.

ஏற்கனவே, தேர்தலுக்கு முன் கணிசமானவர்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாயை திமுக ஆட்சி வரவு வைத்த நிலையில், தற்போது அறிவித்திருக்கும் 8000 ரூபாய்க்கான கூப்பனுக்கு பொதுமக்கள் மத்தியில், போதுமான ஆதரவு இருக்கும் என்று நம்புகிறது திமுக கூட்டணி. 

இனி நடக்க இருக்கிற தேர்தல் பிரச்சாரத்தில் அது எந்தளவுக்கு தீவிரமாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்து திமுக கூட்டணிக்கான வாய்ப்பு உருவாகலாம்.

2-வதாக, அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக, அமமுக,  தமக என்று கூட்டணிக் கட்சிகள் இருந்தாலும், இந்தக் கூட்டணிகட்சிகளுக்கு இடையே போதுமான ஒத்துழைப்பும் ஒற்றுமை உணர்வும் இல்லை என்பது முதல்கட்ட பிரச்சாரத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை விஷயத்தில் அதிமுகவும் சளைக்கவில்லை. பலதரப்பட்ட விலையில்லா அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

முக்கியமாக, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் தொடர்ந்து மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை 2000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும்

அதோடு பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் பல குளிர்ச்சியான அறிவிப்புகளை அதிமுக வெளியிட்டது என்றாலும்,

அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதில், அதிமுக இதுவரை போதுமான அளவு அக்கறை காட்டவில்லை என்பதும் நடைமுறை எதார்த்தமாக இருக்கிறது.

பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறித்தே அதிமுகவின் தேர்தல் காலத்திய விளம்பரங்கள் அமைந்தாலும் கூட தங்களுடைய முக்கியமான அறிவிப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் அவர்கள் தற்போதைக்கு பின்தங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தின் தென் பகுதிகளிலிருந்து எடப்பாடி பழனிசாமி துவக்கியிருக்கும் பிரச்சாரத்திற்கும், அதில், அவர் முன் வைக்கும் புள்ளி விவரங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மக்கள் மத்தியில், ஓரளவு ரெஸ்பான்ஸ் இருந்தாலும்,

அதிமுக கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த உணர்வும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கின்ற உணர்வும் சற்று பின்தங்கியே காணப்படுகிறது இதுவரை.

அதே கூட்டணியில் இருக்கும் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டாலும் தாங்கள் எதிர்பார்த்த பல தொகுதிகள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்கின்ற ஆதங்கமும் பாஜகவினருக்கு இருக்கிறது.

பிரதமரான மோடி இதுவரை தொடர்ந்து 3 முறை தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்து அந்தப் பிரச்சாரத்தில் திமுக மீது வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் கூட, அதற்கு பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது என்பதே பொதுமக்களிடையே இயல்பாக எழும் கேள்வியாக இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்பில் இருந்துகொண்டு எந்த நடவடிக்கையுமே எடுக்காமல், வெறும் குற்றச்சாட்டை மட்டும் பாஜக முன்வைப்பது, பொதுமக்களின் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

3-வதாக ஏற்கனவே 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்கு வங்கியை கைவசம் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் பாலின சமத்துவத்தோடு வேட்பாளர்களை நிறுத்தி, களம் காண்கிறது.

நாம் தமிழர் சீமானும் தமிழகம் முழுக்கச் சென்று, பிரச்சாரத்தை அவரது வழக்கமான ஆக்ரோஷத்தோடு முன் வைத்து வருகிறார். அவரது பிரச்சாரத்தின் மையமாக திமுக எதிர்ப்பே பிரதானமாக இருக்கிறது.

தற்போது, தவெகவின் வருகையால், நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே கிடைத்த வாக்குவங்கிக் கிடைப்பது குறித்த சந்தேகங்கள் பொதுவெளியில் இருக்கத்தான் செய்கின்றன.

4-வதாக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக துவக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்தில் விஜய்யால் முன்வைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி என்கின்ற கருத்தாக்கத்திற்கு அப்போது ஊடகங்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு இருந்தாலும் கூட,

அதை முன்வைத்து எந்தக் கட்சியும் அவருடைய கட்சியில் கூட்டணி சேரவில்லை என்பதே அவர்கள் காணும் எதார்த்தமாக இருக்கிறது.

காங்கிரஸ் அல்லது பாஜக அதிமுக கூட்டணியில் விஜய் சேர்வார் என்கின்ற யூகங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகப்பட்ட நிலையில் கூட, அதைத் தாமதமாக மறுத்து தனித்துப் போட்டி என்கின்ற தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்தார் விஜய்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், அனைத்துத் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு என்று இரண்டு தொகுதிகளிலும் தானே வேட்பாளராக போட்டியிடுகிறார். 

“திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி” என்றும் “தமிழகத்தில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி“ என்று அதிமுகவையெல்லாம் புறந்தள்ளி அவர் திமுகவை எதிர்த்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்வதால்,

அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளையே பெரும்பாலும் பிரிப்பார் என்பதால்,

தனித்து எத்தனை சதவீதம் வாக்குவங்கியைப் பெற்று, அவர் நினைத்தபடி ஆட்சியைப் பிடிப்பார் என்கின்ற கணக்குகளெல்லாம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்களர்களுக்கும் சொந்தமானதல்ல.   

ஊடகங்கள் உருவாக்குகிற மாயத்தோற்றத்திற்குள் சிக்கிப் பல கட்சிகள் போட்டியிடத் துணிந்து, ஒருவழியாக தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அதிர்ந்து தங்களுடைய அசாலன எடையை உணர்ந்திருக்கின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே தீவிரமான சினிமா பின்புலம் இருந்தாலும், தேர்தலில் அதிரடியான முடிவைச் சந்தித்த ‘தமிழக முன்னேற்ற முன்னணி’யை ஆரம்பித்த சிவாஜி கணேசனும் மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்த கமல்ஹாசனும் நினைவிற்கு வந்து போகிறார்கள்.

ஊடகங்கள் உருவாக்குகிற மாயயை வாக்காளப் பெருமக்கள் தேர்தல் முடிவின் மூலம் தெளிய வைப்பார்கள் என்பதே இங்கு நடைமுறை உண்மை.

இதே அனுபவம் தவெகவிற்குக் கிடைக்கப் போகிறதா அல்லது விஜயகாந்த்தின் தேமுதிக பாணியில், அவர் சில தொகுதிகளை மட்டும் பெறப்போகிறாரா? என்பதை அதே வாக்காளப் பெருமக்கள் தங்களுடைய விருப்பப்படி முடிவு செய்வார்கள்.

இதைத் தவிர புதிய தமிழகம் எஸ்.கிருஷ்ணசாமியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகனும் தனித்துப் போட்டியிடுவதால் அவரவர் செயல்பாட்டிற்கு ஏற்ப வாக்கு சதவீதத்தைப் பெறுவார்கள்.

அதே மாதிரியே பாமகவின் நிறுவனரான மருத்துவர் ராமதாசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாகச் சொல்லியிருக்கும் திருமதி சசிகலாவின் தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்

இந்தத் தேர்தலில் களம் கண்டாலும், அந்தக் கூட்டணியால், சிறிய அளவிலேயே அதிமுகவிற்கான ஓட்டுகளையும் பாமகவிற்கான ஓட்டுகளையும் பிரிக்க முடியலாம்.

ஏப்ரல் 21 வரை நீடிக்க இருக்கிற தேர்தல் பிரச்சாரத்தில், எந்தக் கூட்டணி முந்தப் போகிறது அல்லது தமிழக வாக்காளர்கள் நம்பிக்கையைப் பெற போகிறது என்பதையெல்லாம்

ஒட்டுமொத்தமாக இந்தக் கட்சிகளின் செயல்பாட்டை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்வார்கள்.

– யூகி

You might also like