குறைந்த பட்ஜெட்டில் கோடையைக் கொண்டாடலாம்!

ஆர்ப்பரித்து விழும் அருவி நீரைக் கண்டு ரசிப்பதும், அதில் குளிப்பதும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.

அந்த வகையில் எல்லோரும் எளிதில் செல்லக்கூடிய இயற்கையின் அழகை பறைசாற்றும் அருவிகள் சிலவற்றை பற்றி பார்ப்போம்.

கோனே அருவி

சென்னையிலிருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் பசுமை கண்ணைப் பறிக்கும் மலைப்பகுதியில் ‘சோ’வென கொட்டுகிறது கோனே அருவி.

போகிற வழி எல்லாம் சூரியகாந்தி பூக்கள் நிறைந்திருந்து உற்சாகத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும்.

கனிமச் சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படும் இந்த அருவி காண்போரை வியக்க வைக்கிறது.

தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லை பகுதியில் அமைந்திருப்பதால், இரு மாநில மக்களும் ஒன்றாகக் கூடும் இடமாகவும் உள்ளது.

குளிப்பதற்கு ஏதுவான, பாதுகாப்பான, ஆழமற்ற நீர்நிலைகள் உள்ளது இதன் சிறப்பு. கவலைகளும் சுமைகளும் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய இனிய இடமாக இது திகழ்கிறது

குரங்கணி அருவி

வெறும் கேளிக்கை மட்டுமல்லாமல் அமைதியும் ஆரோக்கியமும் மனதை நிறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களை, கை நீட்டி அழைக்கிறது குரங்கணி மலை.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தமிழகத்தை ஒட்டி நிற்கும் மலைச்சரிவில் இருக்கிறது இந்த குளுமையான பகுதி.

அவ்வப்போது சில்லென சாரலை மட்டும் தூவி விட்டுப்போகும் மேகத்தால் மலையைச் சுற்றியுள்ள மூலிகைகளின் நறுமணம் நாசியை துளைத்துச் செல்கிறது.

மலைகளில் உருவாகும் பல சிற்றோடைகள் மொத்தமாக சேர்ந்து கொட்டுவதால் இங்கு உற்பத்தியாகும் நதியை “கொட்டக்குடி ஆறு” என்கிறார்கள்.

பல இடங்களில் குகைக்குள் நுழைந்து வெளிப்படும் இந்த ஆறும் மூலிகைகளின் மணத்தை சுமந்தே ஓடுவதால் தண்ணீர் சுவைக்கிறது.

எங்கெங்கு காணினும் வரை ஆடுகள், காட்டு மாடுகள், சிங்கவால் குரங்குகள் என பல வனவிலங்குகள் தலை காட்டுகின்றன.

மலைகளில் உள்ள மூலிகைகளை அடையாளம் காண வனத்துறையினரின் உதவியையும் நாடலாம். இயற்கையைக் கண்டு களிக்கக்கூடிய சிறந்த சுற்றுலாத் தலமாக இது உள்ளது.

சின்ன சுருளி அருவி

தேனி மாவட்டம் வருசநாட்டில் அமைந்திருக்கிறது சின்ன சுருளி அருவி. ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பது இந்த அருவியின் சிறப்புத் தகுதி மேகமலையில் உற்பத்தியாகி கள்ளர் பகுதியில் பொழிவதால்,

இந்த அருவி சிறியது என்றாலும் பார்ப்பதற்கு சுருளி அருவி போன்று அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பதால் சின்ன சுருளி என்று அழைக்கப்படுகிறது.

இங்கு நிலவும், வெப்பமும் இல்லாத குளிர்ச்சியும் இல்லாத சூழல், வேறெங்கும் கிடைக்காத ஆரோக்கிய பொக்கிஷம்.

குளித்து மகிழ்வதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் சிறந்த இடமாக உள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழக்கூடிய ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும்.

– எஸ். வாணி

You might also like