எப்போதுமே நாடளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ நெருங்கும் வேளையில் அரசியல் பேச்சுக்களின் தரம் பற்றிய கேள்விகள் எழுப்பப்படுவது தமிழகத்தைப் பொறுத்தவரை அடிக்கடி நடந்திருக்கிறது.
அரசியல் தட்பவெட்ப நிலையையொட்டி அந்தப் பேச்சுக்களின் தரமும், தரமின்மையும் இங்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
தற்போது, அத்தகைய தரமில்லாத பேச்சுக்கள் பொதுவெளியில் பல்வேறு தரப்பினரால் பேசப்பட்டு, அவை ஊடக வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு தொடர்ந்து அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய உஷ்ணமான பேச்சுக்கள் அதிகமாகவே எழுந்திருக்கின்றன.
யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது பண்பற்ற ஒன்று என்றாலும், தற்போது தேர்தல் நேரத்தில் அத்தகைய தரமற்ற பண்பு அதிகரித்திருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்கள் தரமானவை அல்ல. அரசியல் நாகரிகத்திற்கும் உகந்ததல்ல.
தேசியக் கட்சிகளும் இதே விஷயத்தில் எத்தகைய அளவில் எல்லை மீறி இருக்கின்றன?
தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன், விஜய் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, ஒரு நடிகையைப் பற்றி வெளிப்படையாகப் பேசி அது ஊடகங்களில் சர்ச்சையானது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேச வேண்டுமா? என்கின்ற கடுமையான விமர்சனமும் எழுந்தது.
இதையடுத்து அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகமும், தமிழக முதலமைச்சரின் ‘கனவு காணுங்கள்’ என்கின்ற திட்டத்தைப் பற்றி பேசும்போது, தரம் தாழ்ந்து பேனினார்.
இதையடுத்து ஒரு வாரத்திற்கு முன்பு, தவெக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, போகிற போக்கில் ரஜினி பற்றிப் பேசிய பேச்சு பலத்த சர்ச்சைக்குள்ளானது.
1996 காலகட்டத்தில் அன்றைய அரசியல் சூழலில் கடுமையானபடி சில விமர்சனங்களை முன்வைத்தவரான ரஜினி, காலப்போக்கில் அரசியலை விட்டு தான் ஒதுங்கிக் கொள்வதாக, படு இயல்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அரசியலைவிட்டே ஒதுங்கி, தற்போது திரைப்படத்ததுறையில் மட்டும் கவனம் செலுத்தும் நிலையில் இருக்கிறார்.
அப்படிப்பட்டவரை சீண்டும் விதத்தில் இருந்தது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு.
இதையடுத்து தமிழகத் தொலைக்காட்சிகளில் கடந்த ஐந்து நாட்களாக இதுதான் பெரிய அளவில் பேசு பொருளானது.
உலக அளவில் பெரும் போர்ச் சூழல் எழுந்து கொண்டிருக்கிற நிலையில், அதைப்பற்றி கவனம் எதுவுமே இல்லாத நிலையில், ரஜினி பற்றி ஆதவ அர்ஜுன்வின் பேச்சு பற்றிய விவாதமே பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அதையடுத்து ரஜினி ஒரு அறிக்கை விடுத்தபிறகு, மிகவும் சாவகாசமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
இதே மாதிரியான பேச்சைப் பேசி சமீபத்தில் சர்ச்சையில் மாட்டியிருப்பவர் அதே தவெக கட்சியை சேர்ந்தவரான நாஞ்சில் சம்பத்.
முதல்வரைப் பற்றி, நாகரிகமற்ற ஒரு பேச்சை ஊடகத்தில் பேச, அதற்கு மிக கடுமையானபடி கொச்சையானபடி அவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
இத்தகைய கேவலமான பேச்சுக்கள் முன்பு இருந்ததை விடவும் தற்போது அதிகப்பட்டிருக்கின்றன.
அரசியலில் தலைவர்களின் செயல்பாடுகளை விட, அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கைக் குறித்த அநாகரியமான கேள்விகள் பொதுவெளியில் எழுப்பப்பட்டு அவை சர்ச்சைக்குரிய ஒன்றாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய அவலம் தமிழக அரசியலில் நிகழ்வது பண்புக்குரிய ஒன்றல்ல.
அதேநிலையில், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் நீங்கள் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ, உங்களுடைய விமர்சனங்களை நாகரிகமாக தெரிவியுங்கள்.
அத்தகைய விமர்சனங்களுக்கு நாகரிக எல்லை என்ற ஒன்று இருக்கிறது.
இதை உணர்ந்து ஒரு பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பது என்பது, தொடர வேண்டும் என்பதுதான் பொதுவாக தமிழக வாக்காளர்களின் கருத்து.
அதே நேரத்தில் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பேசக்கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.
தமிழக மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன.
உலக அளவிலும் தற்போது ஒரு போர்ச்சூழல் எழுந்து, அதனால் உலக சர்வதேச அளவில் பொருளாதார சிரமங்களை பல்வேறு நாடுகள் எதிர் கொண்டிருக்கும் நிலையில், நாம் பேச வேண்டிய பரப்பு சர்வதேச அளவில் விரிந்திருக்கிறது.
ஆனால், அதை மிகவும் சுருக்கி தனிப்பட்ட முறையில் ஒற்றை நபரை நோக்கி சுருங்கி, அத்தகைய பேச்சுக்கள் கொச்சையாக பொதுவெளியில் விரிவது நமது தமிழ்ச் சமூகத்திற்கு எந்த விதத்திலும் பெருமையைத் தராது என்பதை எந்த அரசியல் கட்சியில் இருக்கின்ற நபர்களும் உணர வேண்டும் என்பதை 23-ம் தேதி வாக்களிக்க இருக்கும் மக்களின் கருத்தும் கூட.
அந்தக் கருத்தை போட்டியிடும் எந்தத் தலைவரும் அல்லது எந்தக் கட்சியும் மதிப்புக் கொடுக்கட்டும்.
– அகில் அரவிந்தன்