முக்குலத்தோர் வாக்கு யாருக்கு?

2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சாதி ரீதியாகப் பிரித்து, அந்தந்த மண்டலத்தில் அதிகமாக இருக்கும் சாதிப் பிரிவினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்கின்ற விவாதம் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.

தென் தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு கணிசமாக இருக்கும் முக்குலத்தோரின் வாக்கு வங்கி மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மட்டுமல்லாது தஞ்சை, நாகை என்று பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்திருக்கிறது.

முக்குலத்தோரின் வாக்கை மையமாக வைத்து உருவான ஃபார்வர்ட் பிளாக் கட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் உருவாக்கப்பட்டபோது அதற்கு போதுமான ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்தது.

அதன் பிறகு மூக்கையா தேவர் போன்றவர்கள் பொறுப்பேற்று வழிநடத்திய போதும் அவருக்கும் முக்குலத்தோரின் கணிசமான ஆதரவு கிடைத்தது.

அதற்குப் பிறகு ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைமை மாறினாலும் கூட, துவக்கக் காலத்திலிருந்த பெரும்பான்மையான ஆதரவு நீடிக்கவில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் பொறுப்புக்கு வந்த பிறகு, அதன் கட்சிப் பொறுப்புகளிலும் ஆட்சிப் பொறுப்பிலும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றது நடந்தது.

அதேசமயம் பெரியகுளம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அதிகபட்சமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.

ஆனால், அதன் பிறகு முக்குலத்தோரின் வாக்குகள் பல்வேறு கட்சியினருக்குப் பிரிந்து, பல்வேறு தரப்பினருக்கு ஆதரவு கொடுப்பது என்கிற நிலையைப் பார்க்க முடிந்தது.

முக்குலத்தூர் சமூகத்தைச் சேர்ந்தவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்கின்ற கட்சியைத் துவக்கி, தமிழகத்தில் 50 தொகுதிகளில் போட்டியிட்டார்.

ஆனால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு தொகுதியில் அவர் போட்டியிட்ட போதும் அவரால் அதிகபட்சமான முக்குலத்தோரின் வாக்குகளைப் பெற முடியவில்லை.

இதற்கு அடுத்த கட்டமாக, ஒரு காலத்தில் திமுகவில் இருந்தபோது அதிகபட்சமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரான எஸ்.எஸ்.ராஜேந்திரன், தனித்து அவர் பெயரிலேயே ஒரு கட்சியைத் துவக்கினார்.

அவருடைய சொந்தத் தொகுதியான சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட போதும் அவரால் வெற்றியைப் பெற முடியவில்லை.

அதன்பிறகு இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். முக்குலத்தூர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான நடிகர் முத்துராமனைச் சிலர் அரசியலில் இறங்க வற்புறுத்தியபோது, அவர் பிரபல வார இதழில் “நான் அரசியலுக்கு வரலாமா?” என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதற்குப் பெரும்பான்மையான வாசகர்கள் “நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம்” என்று அளித்த பதிலுக்கு மதிப்பளித்து அவர் அரசியலில் இறங்கவில்லை.

ஆனால், நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் சினிமாவில் பிரபலமானதும் அவருக்கும் அதேவிதமான அரசியல் தூண்டுதல் உருவாக்கப்பட்டது.

அவரும் ஒரு கட்சியைத் துவக்கி தனித்து தென் தமிழகத்தில் உள்ள பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டபோது அவருக்கு அது வெற்றியைத் தரவில்லை என்பது எதார்த்தம்.

கார்த்திக்கின் பாப்புலாரிட்டியும் அவர் சார்ந்த சமூக அடையாளமும் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறுவதற்குத்தான் உதவியதே தவிர, வெற்றி பெறுவதற்கு உதவவில்லை.

இன்னொரு விதத்தில் சொன்னால் எதிரணியின் வாக்குகளைப் பிரிப்பதற்கு அவர் பயன்பட்டிருக்கிறாரே ஒழிய அவர் தனித்து வெற்றிபெறும் சூழல் இல்லை.

இத்தகைய சூழ்நிலைக்கிடையில் முக்குலத்தோர் புலிப்படை என்கிற பேரில் கட்சியைத் துவங்கி திருவாடனைத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கருணாஸால் வெற்றியைச் சந்திக்க முடிந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அதாவது, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்கின்ற அடையாளத்தினால் மட்டுமே அதை மையப்படுத்தி உருவாக்கப்படுகிற கட்சிகளுக்குப் போதுமான செல்வாக்கு பெற முடியவில்லை என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

தற்போதும் அதே முக்குலத்தூர் வாக்கை மையப்படுத்தித் தான் சில முயற்சிகள் இந்தத் தேர்தலிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான ஓ.பி.எஸ் (ஓ.பன்னீர்செல்வம்) திமுகவில் இறுதிக்கட்டத்தில் சேர்ந்த வேகத்தில், தென் தமிழகத்தில் முக்குலத்தோர் அதிகமாக இருக்கக்கூடிய பல பகுதிகளில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அதே மாதிரி முக்குலத்தூர் செல்வாக்குள்ள கமுதிக்குச் சென்று தன்னுடைய கட்சிக் கொடியை அறிவித்தவரான சசிகலா, அதைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் தனது கட்சிப் பெயரையும் அறிவித்திருக்கிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென் தமிழகத்திலும் முக்குலத்தோர் அதிகம் உள்ள வெவ்வேறு தொகுதிகளிலும் அந்த சமுதாயத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

ஆனால், அரசியல் பற்றி நன்றாக உணர்ந்தவர்கள் ஒன்றே ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வெறும் சாதிய அடையாளத்தை மட்டுமே வைத்து தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தனக்குப் பிடித்தவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கிற இயல்பு தமிழகத்தில் இல்லை.

1967-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் அவர் சார்ந்த சமூகத்தினர் அதிகம் இருக்கும் தொகுதியிலேயே தோல்வியடைய நேரிட்டது.

சமீபத்தில் மறைந்த பொதுவுடைமை கட்சித் தலைவரான ஆர். நல்லகண்ணு முக்குலத்தூர் சமுதாயத்தில் பிறந்தவராக இருந்தாலும், அவர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டபோது அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆக, ஒரு சாதிய அடையாளம் மட்டுமே இங்கு ஒரு கட்சியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வேட்பாளரையோ வெற்றிபெற வைத்துவிடாது என்பதே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள எதார்த்தம்.

ஒரு சில வேட்பாளர்களுக்கு அவர்கள் சார்ந்திருக்கிற சாதி அடையாளம் என்பது ஓரளவு வலுச்சேர்த்து அவர்கள் வெற்றியடைவதற்கான சூழலை உருவாக்கி இருக்கலாம்.

ஆனால், அதை வைத்துப் பொதுமைப்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று விடலாம் என்ற கணிப்பைத் தமிழக வாக்காளர்களே பலமுறை முறியடித்திருக்கிறார்கள்.

தற்போது முக்குலத்தோர் சமூகத்தினரின் வாக்குகளை மையப்படுத்தி வாக்குச் சேகரிக்க முயலும் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது எந்த ஒரு வேட்பாளருக்கும் மேலே சொன்ன அனுபவங்கள் ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

–  ரா. செந்தில்குமரன்

You might also like