சாகித்ய அகதமி – சில குறிப்புகள்!

சாகித்ய அகதமி பற்றி இன்னும் சிறிது விவாதிக்க வேண்டியிருக்கிறது. 24 இந்திய மொழிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

8 கவிதை நூல்கள், 4 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், 2 கட்டுரைகள், 1 இலக்கிய விமர்சனம், 1 சுயசரிதை மற்றும் 2 நினைவுக் குறிப்புகள் என 2025-ம் ஆண்டுக்கான 24 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலோட்டமாக கவனிக்கும்போது கவிதைக்கு அதிகம் கிடைத்திருப்பதுபோல் தோன்றும். நாவல், சிறுகதை இரண்டுமே புனைவிலக்கியங்கள்தாம்.

அவ்வகையில் 10 விருதுகளை புனைவிலக்கியங்கள் பெற்றிருக்கின்றன.

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற 22 மொழிகளோடு,

இந்த அட்டவணையில் இல்லாத ஆங்கிலம் மற்றும் ராஜஸ்தானி மொழிகளுக்கும் சாகித்ய அகதமி விருது வழங்கப்படுகிறது.

போஜ்புரி, துளு, மற்றும் பல பழங்குடி மொழிகளுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை. போஜ்புரி மலையாளத்தைவிட பழமையான மொழி. மைதிலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைவிட அதிக அளவிலான மக்களால் பேசப்படும் மொழி.

24,821 (0.002%) பேர் மட்டுமே தங்கள் தாய் மொழியாக சமஸ்கிருதத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். 35 மில்லியன் பேர் மைதிலி மொழியைப் பேசுகிறார்கள்.

இந்த மொழிகளுக்கு சாகித்ய அகதமி தருகிறார்கள். அதேவேளை 52 மில்லியனுக்கு அதிகமானோர் போஜ்புரி பேசுகிறார்கள்.

பீகார், ஒடிசா, உ.பி, நேபாள் பகுதிகளில் இம்மொழி பேசப்படுகிறது. மனோஜ் பாவுக், ரபீந்தரநாத் ஸ்ரீவத்தசவா, டாக்டர் அர்ஜூன் திவாரி, ஜலஜ்குமார் அனுபம், ஷுப் நாராயண் சிங், இப்படி பல சமகால போஜ்புரி எழுத்தாளர்கள் இந்திய இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்கிறார்கள்.

ஆனால் போஜ்புரி மொழிக்கு சாகித்ய அகதமி விருது வழங்குவதில்லை.

திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது துளு. கர்நாடகாவின் சில பகுதிகள் பேசப்படுகிறது. 5 மில்லியன் பேரால் பேசப்படும் மொழி.

ஆனாலும் UNESCO-வின் அழிந்துவரும் மொழிகள் பட்டியலில் இம்மொழி இடம் பெற்றுள்ளது.

தர்பே கிருஷ்ணானந்தா சௌதா, அம்ருத சோமேஸ்வரர், கிஷோர் குமார் ராய் ஷேனி, புஷோத்தமா பிலிமாலே போன்றோர் துளு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இம்மொழி இலக்கியங்களுக்கும் சாகித்ய அகதமி வழங்கப்படுவதில்லை.

அதிகம் புழக்கத்தில் இல்லாத, வேதம் உபநிடதம் போன்றவற்றோடு மட்டுமே சம்பந்தப்பட்ட சமஸ்கிருதத்துக்கு சாகித்ய அகதமி வழங்கப்படும்போது,

அடித்தட்டு மக்கள் வாழ்வை எழுதும் போஜ்புரி, துளு போன்ற மொழிகளை இந்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.

போலவே சாகித்ய அகதமி விருதுப் பட்டியலில் பெண்கள், சிறுபான்மையினர் மிகக்குறைவாகத் தென்படுகின்றனர்.

இலக்கியத்தில் பாலினம்/மதம் பார்க்கக்கூடாது, எனும் தூய்மைவாதக் குரல்களின் யுகம் முடிந்துவிட்டது.

கால மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, எல்ஜிபிடி சமூகங்களை ஊக்குவிக்கும் வகையில் சில முயற்சிகளை சாகித்ய அகதமி முன்னெடுத்தது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் சாகித்ய அகதமி, நூல் நிலையங்களை உருவாக்கியிருக்கிறது.

இவை பாராட்டப்பட வேண்டியவை. போலவே, வரும் காலங்களில் மேற்சொன்ன குறைகளையும் களைய சாகித்ய அகதமி முயன்றால் நல்லது.

நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு

You might also like