காட்டிலிருந்து ஒருவன்…!

நேரடியான வன அனுபவம்

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 11

அதிர்ச்சியாக இருந்தது, உள்ளடங்கிய காட்டுக்குள் வாழ்ந்து வந்த அந்த மலைவாழ் மக்களைப் பார்த்தபோது.

தனியாருக்குச் சொந்தமான பெரிய காட்டில், பளியர் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற தகவல் தெரிந்து கொடைக்கானலிலிருந்து பழனி செல்லும் சாலையில் இருக்கிற காட்டுப்பகுதிக்குள் போக முடிவானது.

சோகோ அறக்கட்டளை நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர் மஹபூப் பாஷா, பிரான்சிஸ் மற்றும் அவரது குழுவினரை அழைத்துக் கொண்டு கேமரா சகிதமாக காட்டிற்குள் சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் பயணப்பட்டபோது, தென்பட்டது அந்தப் பெரிய காடு.

ஏராளமான மலைவாழ் மக்களைப் பார்க்க முடிந்தது. எல்லோருமே எளிய கூரை வேய்ந்த குடிசையில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

வயதான ஆண்கள், பெண்களிலிருந்து சிறு வயது பையன்கள்கூட, அங்கு கொத்தடிமைகளாக காட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அங்கு போனபோது, அவர்களைக் கண்காணிக்கிற கண்காணி அங்கு இல்லை. அதனால், எல்லோரையும் ஓரிடத்திற்கு வரவழைத்துப் பேசினோம். 

பேச ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் கதறி அழுகிற நிலைக்குச் சென்றார்கள் அங்கிருந்த பெண்கள். 1000 ரூபாய் அட்வான்ஸ் பணம் கொடுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மாதச் சம்பளம் என்று எதுவுமே இல்லை.

தினமும் விடியற்காலை துவங்கி மாலையில் வெளிச்சம் மங்குகிற வரை வேலை பார்த்தால், அவர்களுக்குக் கிடைப்பது அரைப்படி குருணை அரிசி. சிறு பையன்களுக்கு கால்படி குருணை அரிசி.

கூடவே, மிளகாய் உள்ளிட்ட சில பொருட்கள். இவற்றை வைத்துதான் அவர்கள் காட்டு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. 

உடம்புக்கு என்ன பிரச்சனை என்றாலும், கை வைத்தியம்தான். பிரசவம் நடப்பது கூட காட்டுப் பகுதியில்தான் என்பதை வேதனையுடன் சொன்னார்கள்.

அவர்களிடம் குடியுரிமைக்கான எந்த அடையாளமும் இல்லை. ரேசன் கார்டும் இல்லை. வாக்குரிமையும் இல்லை.

அங்கேயே சில கண்காணிகள் தங்கியிருக்க, அந்தக் காட்டின் முதலாளிகள் எப்போதாவது வருவதாகச் சொன்னார்கள். 

அந்தக் காட்டில் பல்வேறு உயர்ந்த மரங்கள், காட்டுச் செடிகள் என்று பசுமை படர்ந்த பகுதியாக இருந்தது அந்தக் காடு.

நிமிர்ந்தால் மேலே வானத்தில் சுற்றி அலைகிற பறவைகளைத் தவிர வேறெந்த சத்தமும் அங்கு இல்லை. 

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அங்கிருந்த பெண்கள் பாலியல் ரீதியாகவும் தாங்கள் பயன்படுத்தப்படுவதை உலர்ந்தக் குரலில் சொன்னார்கள்.

சொல்லும்போதே சங்கடப்பட்டார்கள். அவர்கள் பேசும்போது, சுற்றியிருந்த அவர்களுடைய குடும்பத்தினர் தலை குனிந்த நிலையில் அமர்ந்திருந்தார்கள்.

“நாதியத்தவங்க மாதிரி அந்தக் காட்டுக்குள் எங்களை வைச்சிருக்காங்க.. எப்படியாவது இங்க இருந்து விடுவிச்சிங்கன்னா, உங்களுக்குப் புண்ணியமா போகும் சாமீ” என்றபடி கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

மொத்தமாக சுமார் 236 பேர் காட்டிற்குள் இப்படிப்பட்ட அவலநிலையில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, பேரதிர்ச்சியாக இருந்தது. 

பெரும்பாலும் அங்கிருந்த சிறு பையன்கள் ஆடைகளற்றும், சிறுமிகள் சிறு கோவணம் போன்ற துணியை மட்டும் கட்டியிருந்தார்கள்.

கண்காணிகள் எங்கோ வெளியே போயிருந்ததால், அவர்களைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் தரப்பையும் கேட்க முடியவில்லை.

கையில் கொண்டு போயிருந்த பிஸ்கட் போன்ற உணவுகளை அங்கிருந்த குழந்தைகளிடம் கொடுத்த போது, ஒருவித பரவசத்தை அந்த எளிய முகங்களில் பார்க்க முடிந்தது.

ஒருவழியாக அவர்களிடமிருந்து விடைபெற்று அவர்கள் பேசியதையெல்லாம் பதிவு பண்ணி புகைப்படமும் எடுத்து, மதுரைக்குத் திரும்பி, அந்தக் கொடுமையான சூழல் பற்றிய கட்டுரையைத் துக்ளக் இதழில் எழுதியிருந்தேன். 

கட்டுரை வெளிவந்ததும், ஓரளவு கவனிக்கப்பட்டது. அந்தக் கட்டுரையை அப்படியே ஒரு ‘ரிட்’ மனுவாக உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது சோகோ நிறுவனம்.

டெல்லியில் வழக்கறிஞராக இருந்த சமூக சேவகர் வெங்கட் ரமணி அந்த ரிட் மனுவுக்காக வாதாடி, உச்சநீதிமன்றம் அதைப் பரிசீலித்து தமிழக அரசுக்கு ஓரு உத்தரவைப் பிறப்பித்தது. 

அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில், ஆய்வு செய்து உடனே அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி பல்வேறு தினசரிகளில் வெளிவந்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு ஒருவிதத்தில், நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

காட்டில் நாங்கள் பார்த்த அந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்கின்ற எண்ணமும் இருந்தது.

ஆனால், நடந்ததோ வேறு.

உச்சநீதிமன்ற உத்தரவுபடியே ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டார். அவர் விசாரணைக்காக அந்த காட்டிற்குள் செல்கிற வழியில் அந்த மலைவாழ் மக்கள் புதுப்புது ஆடைகளுடன் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். 

ஓய்வுபெற்ற நீதிபதியைப் பார்த்ததும் அந்த மலைவாழ் மக்கள் கும்பிட்டு தாங்கள் ரொம்பவும் சிறப்பானபடி நடத்தப்படுவதாக காட்டிலுள்ள எஜமானர்கள் தங்களை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் ஒருமித்தக் குரலில் சொன்னார்கள். 

உங்களைப் பற்றிய செய்தி கட்டுரையாக வெளிவந்து, உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குச் சென்றிருப்பது உங்களுக்குத் தெரியுமா? என்று ஓய்வுபெற்ற நீதிபதி கேட்டதும், அவர்கள் எல்லோரும் சொல்லிவைத்தது மாதிரி,

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்கய்யா, காட்டுக்குள்ள எங்களுக்கு நல்ல கூலி கொடுக்குறாங்க. வீடு கட்டிக் கொடுத்திருக்காங்க. நாங்க நல்லா வசதியாதான் இருக்கோம். உங்களுக்குத்தான் யாரோ தவறா தகவல் சொல்லியிருக்காங்க” என்று சொன்னதும்

அவர்களை அங்கேயே விசாரித்த அந்த நீதிபதி அவர்கள் சொன்னவற்றை அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையை அனுப்பினார்.

அந்த அறிக்கையும் பரபரப்பாக ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்ததும், ஏற்கனவே அங்கு சென்றிருந்த நாங்கள் பதறிப்போனோம்.

சிலரை அனுப்பி விசாரித்தபோது, அந்தக் காட்டின் உரிமையாளர்களின் உத்தரவின்பேரில், புதிய உடைகள் உடுத்தப்பட்ட நிலையில், அவர்களை வற்புறுத்திச் சொல்ல வைத்திருப்பது தெரியவந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

காட்டிற்குள் சென்று, அவ்வளவு உழைத்து வெளிக் கொண்டுவந்த ஒரு செய்தி, எப்படிப் பொய்யப்பாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தபோது வலியாக இருந்தது.

உடனே ஒரு ஏற்பாட்டைச் செய்தோம். மறுபடியும் சோகோ குழுவினருடன் வீடியோ கேமிரா சகிதமாக அதே காட்டிற்குள் கூடுதலான நண்பர்களுடன் பயணப்பட்டபோது, பல்வேறு சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கண்காணிகள் முன் ஜாக்கிரதையாக அங்கிருந்த மக்களை பயமுறுத்தி வைத்திருந்தார்கள். அதனால், எங்களிடம் பேசுவதற்கே அந்த எளிய மக்கள் பயந்தார்கள். 

அதில் சிலர் மட்டும் குறிப்பிட்ட தூரம் கடந்து எங்களை நிற்கச் சொன்னார்கள். அதன்படியே அங்கு நாங்கள் சென்றபிறகு, மலைவாழ் மக்களின் சிறு பகுதியினர் கும்பலாக அங்கே வந்தார்கள்.

நடந்ததையெல்லாம் கண்ணீருடன் விவரித்தார்கள். அவர்கள் பேச்சில், ஒருவித குமுறல் தெரிந்தது. 

“நீங்க எங்களப் பாத்துட்டு போய், இங்க உள்ளதைத்தான் எழுதியிருக்கீங்க. கண்காணிகள் சொன்னபிறகுதான் எங்களுக்குத் தெரிஞ்சது நீதிபதி ஒருத்தர் எங்கள விசாரிக்க வர்றதாச் சொன்னாங்க.

நாங்களும் நல்லது நடக்கும்ணு நம்பினோம். ஆனா, அதுக்குள்ள  முதலாளிங்க வந்து எங்களை மிரட்டிட்டாங்க. புது உடைகள் வாங்கிக் கொடுத்தாங்க. சீவி, சிங்காரிச்சிட்டு வர்றச் சொன்னாங்க.

எங்களை காட்டின் ஒரு முனைக்குக் கொண்டுபோய் நிறுத்தி வைச்சிருந்தாங்க. நாங்க என்ன சொல்லணும்னு முன்னமே சொல்லி வைச்சிருந்தாங்க.

அதன்படியே ஜீப்பில் அதிகாரிகளும் வந்திருந்தாங்க. ஒரு ஜட்ஜ் அய்யாவும் வந்திருந்தாங்க. அவரிடம், நாங்கள் எங்க முதலாளிங்க சொல்லிக் கொடுத்தத அப்படியே சொன்னோம்.

எங்க மேல என்ன தப்பு இருக்குங்க ஐயா, எங்கள மிரட்டுறப்ப நாங்க என்னதா செய்ய முடியும்” என்று கைக்கூப்பியபடி அவர்கள் கும்பலாக அழுததை வீடியோ கேமராவில் படம் பிடித்தோம். 

அந்த வீடியோ பதிவு அப்படியே உச்சநீதிமன்றத்தில், அறிக்கையுடன் அனுப்பப்பட்டது. துக்ளக் பத்திரிகையில் மறுபடியும் இந்தச் சூழல் பற்றி எழுதியிருந்தேன்.

எப்படியாவது அந்த மக்களுக்கு விடிவு கிடைக்காதா? என்று காத்திருந்தபோது, என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்திலிருந்து வந்த உத்தரவுபடி தான் சொன்னதில் உறுதியாக நின்ற ஒரே ஒரு மலைவாழ் இளைஞரை மட்டும்தான் அங்கிருந்து எங்களால் விடுவிக்க முடிந்தது.

அந்த அடர்ந்த காட்டிலிருந்து ஒரே ஒருவர் மட்டுமே கொத்தடிமை தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது.

வெளிவந்த அந்த ஒருவருக்கு மட்டும்தான் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு, அவருடைய மறுவாழ்வுக்கான சில சலுகைகளும் அவருக்குக் கிடைத்தது.

சில நூறு பேருக்காக அவ்வளவு மிரட்டல்களையும் சந்தித்த நிலையில், பெரு முயற்சி எடுத்து ஒரே ஒரு நபரை மட்டுமே நாங்கள் விடுவித்த அந்த சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன.

அவ்வளவுதூரம் முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு என்னதான் ஜனநாயக ரீதியான பலன் கிடைத்தது.

இதோ இப்போது, ‘காட்டிலிருந்து ஒருவன்’ என்கிற மாதிரி அனுபவத்தைத்தான், அதை அனுபவித்தவனால் எழுத முடிந்திருக்கிறது.  

– மணா

You might also like