எழில் கொஞ்சும் பிரதேசங்களைக் கொண்டுள்ள நமது அண்டை மாநிலமான கேரளா, ‘கடவுளின் தேசம்‘ என்று அழைக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மலர்ந்த முதல் மாநிலம்.
காங்கிரசும், கம்யூனிஸ்டும் தான் அங்கு பிரதானக் கட்சிகள். இந்த இரு கட்சிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன. இந்த சரித்திரம் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் உடைந்தது.
2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிவாகை சூடிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வென்று, புதிய வரலாற்றை எழுதியது.
கேரளா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அங்குள்ள அரசியல் நிலவரம் எப்படி? விரிவாக அலசலாம்.
இப்போது அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பினராயி விஜயன் முதலமைச்சராக உள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் உள்ளது.
கேரளாவில் 140 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
பினராயி ஹாட்ரிக் அடிப்பாரா?
அந்த மாநிலத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? பினராயி விஜயன் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா? அல்லது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா ? பாஜகவின் பலம் என்ன ? பார்க்கலாம்.
கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மொத்தம் 99 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
அந்த அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கேரள காங்கிரஸ் (எம்), இந்திய சோசலிஸ்ட் ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
கடந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
அந்த அணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
பாஜக ஒரு எம்எல்ஏ தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு பாஜக புயல் போல் சுழன்றடித்துப் பணியாற்றி வருகிறது.
இந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி பலமுறை சுற்றுப்பயணம் செய்து, பிரச்சாரம் செய்துள்ளார்.
கடந்த 29-ம் தேதி பாலக்காடு வந்த அவர், இடதுசாரிகளையும், காங்கிரசையும் வறுத்தெடுத்து சென்றுள்ளார்.
’இந்த இரு கூட்டணிகளின் சுயநல அரசியலில் கேரள மாநிலம் சிக்கி தவிக்கிறது – இவர்கள் வெளியில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்‘ என விளாசினார்.
‘மக்களின் முழுமையான ஆதரவுடன் கேரளத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்’ என்றும் அவர் உறுதி அளித்துச் சென்றுள்ளார்.
எனினும் அந்த மாநில கள நிலவரம் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்பதே நிதர்சனம்.
1967-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. கேரள நிலவரமும் அப்படித்தான்.
இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் இடையேதான், இப்போதும் கேரளத்தில் போட்டி.
அது, பாஜகவுக்கும் தெரியும். எனினும் தேர்தலுக்குத் தேர்தல் பாஜக தனது வாக்கு வங்கியை அதிகரித்து கொண்டே வருகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கடந்த 2024-ம் ஆண்டு முதன்முறையாக ஒரு இடத்தில் வென்று, கேரளாவில் தனது கணக்கைத் தொடங்கியது.
அந்த தேர்தலில் பாஜகவுக்கு 19% வாக்குகள் கிடைத்தது. இந்தத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை மேலும் 7% உயர்த்துவது பாஜகவின் திட்டம்.
அண்மையில் ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இடதுசாரிகளுக்கு 68 முதல் 73 தொகுதிகளும், காங்கிரஸ் அணிக்கு 64 முதல் 70 இடங்களும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. பாஜக 2 இடங்களைப் பெறும் என்றும் அந்த கணிப்பு சொல்கிறது.
80 வயதான பினராயி, ஹாட்ரிக் அடிப்பாரா? – மே 4 ஆம் தேதி தெரியும்.
– பாப்பாங்குளம் பாரதி.