பல்வேறு துறைகளில் தடைகளைத் தாண்டி சிறப்பான வெற்றிகளைப் பெற்று, மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சாதனைப் பெண்கள் சிலரைப் பற்றி இங்கு காண்போம்.
ஜே. கே. ரௌலிங் (J.K.Rowling)
உலகப் புகழ்பெற்ற ஆங்கில புதின எழுத்தாளரும் ஹாரி பாட்டர் தொடரின் படைப்பாளியாகவும் அறியப்படுபவர் ஜே.கே. ரௌலிங். ஏழ்மை நிலையில் இருந்து உலக பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தவர்.
அவரது வாழ்க்கை மற்றும் எழுத்துக்கள் பலரால் கொண்டாடப்படுகின்றன. இலக்கிய உலகில் ஓர் உத்வேக எழுத்தாளராக திகழும் ஜே.கே. ரௌலிங், இங்கிலாந்து நாட்டின் பிரின்ஸ்டன் நகரில் 1965-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி பிறந்தார்.
சிறுவயதிலேயே கற்பனைக் கதைகளை எழுதும் வல்லமை கொண்ட இவர், ஆறாவது வயதிலேயே தனது தங்கைக்கு பல கற்பனை கதைகளை கூறினார்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஆங்கிலம் கற்கலாம் என்று முடிவு செய்தவருக்கு அவரின் பெற்றோர்கள் பிரெஞ்ச் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர்.
ஆகையால் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பண்டைய பிரெஞ்சு இலக்கியம் படித்தார். 1986-ல் பட்டப் படிப்பை முடித்து 1988-ல் லண்டன் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.
பின்பு திருமண வாழ்வில் புகுந்த இவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. கணவனுடைய போதை மருந்து பழக்கத்தால் பல கொடுமைகளுக்கு ஆளான இவர், பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் திரும்பினார்.
குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்புக்கு ஆளானதால் ஒரு சிறிய வேலை வாய்ப்பினைத் தேடிக்கொண்டார்.
ஆனால் அவர் மனதில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.
இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, நாவல் ஒன்றை எழுத விரும்பினார் ஜே.கே. ரௌலிங்.
வேலைப் பளுவின் காரணமாக போதிய நேரம் ஒதுக்க முடியாமல் போனது. இவ்வாறு இருக்கையில், தனது அலுவல் காரணமாக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, ரயில் பழுதுபட்டு நான்கு மணி நேரம் நின்று போனது.
இந்த நேரத்தை பயன்படுத்தி தனது கற்பனை கதையான ஹாரிபாட்டர் புத்தகத்தை எழுதத் தொடங்கினார் ரௌலிங்.
அதே கால கட்டத்தில் இவரது வேலையும் பறிபோனது. தனது 29 வயதில் யாரும் இல்லை என்ற நிலை உருவானதால், இங்கிலாந்து ராணி கொடுக்கும் விதவைகள் மறுவாழ்வு பணத்தில் வாழ்ந்து வந்தார்.
இளம் வயதிலேயே ஆதரவற்ற ஏழ்மை நிலை, அவரை சின்னாபின்னமாக்கியதால் வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று கூறி பலமுறை தற்கொலைக்கும் முயன்றார்.
அந்த தருணத்திலெல்லாம் வாழ்வதற்கு ஏன் நாம் முயற்சிக்கக் கூடாது என்று எண்ணம் தோன்றியதால், தான் எழுதிய ஹாரி பாட்டர் புத்தகத்தைப் பதிப்பகத்திற்கு கொடுத்து பணம் பெறுவது என்று முடிவு செய்தார்.
இங்கிலாந்தில் உள்ள அனைத்துப்
பதிப்பகங்களுக்கும் தன் கதையை அனுப்பினார். எல்லோரும் இதனை நிராகரித்தனர். பின்பு ஒரு சிறிய பதிப்பக உரிமையாளர் இதனை ஏற்று வெளியிட்டார்.
அவரின் மகளுக்கு இந்த கதை பிடித்துப் போனதால் அனைத்து சிறுவர்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில் வெளியிட விரும்புவதாகக் கூறினார். அந்தக் கதை தான் Harry Potter and the philosopher’s stone என பெயரிடப்பட்டு U.K. வில் 1997-ல் வெளியானது.
ஆனால், இது அமெரிக்க பதிப்பகத்தின் பெயரைக் குறிப்பதால் அதனை மாற்றி Harry Potter and the sorcerer’s stone என்ற பெயரில் அதற்கு அடுத்த வருடம் அமெரிக்காவில் வெளியானது.
புத்தகம் வெளிவந்த முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஹாரி பாட்டர் நாவலின் முதல் மூன்று பகுதிகள் 480 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு விற்று சாதனை படைத்தது.
ஹாரி பாட்டரின் அனைத்து நாவல்களுமே வெற்றி அடையத் துவங்கின. அதன் ஆறாவது பகுதி வெளியானபோது 24 மணி நேரத்தில் 6.9 மில்லியன் புத்தகங்கள் விற்று, புத்தக விற்பனையில் உலக அளவில் சாதனை படைத்தது.
ஏழாவது புத்தகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஹாரி பாட்டர் ரசிகர்கள் அனைவரும் புத்தகக் கடைகளில் தான் இருந்தனர். இந்த ஏழு புத்தகங்களும் படமாக்கப்பட்டும் சாதனை படைத்து விருதுகளைக் குவித்தன.
ஹாரி பாட்டர் கதை புத்தகங்களின் 40 கோடி பிரதிகள் உலகம் முழுவதும் விற்று தீர்ந்தன.
புத்தக விற்பனை சாதனையில் 700 கோடி பவுண்டுகளை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அவரது நாவல்கள் திரைப்படங்களாக வெளியாகி அவையும் பெரும் புகழ் பெற்றன.
ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாது பல தலைமுறைகளைக் கவர்ந்த ஒரு படைப்பாளியாகவும் விளங்குகிறார் ஜே.கே. ரௌலிங்.
ரியானா சூரி:
சமூகத்தால் புறக்கணிக்கப்படும் வர்க்கத்தில் பிறந்திருந்தாலும் தன் விடாமுயற்சி மற்றும் அயராத உழைப்பின் காரணமாக பல தளங்களிலும் வெற்றியாளராய் வலம்வந்து கொண்டிருக்கிறார் திருநங்கை ரியானா சூரி.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பள்ளி செல்லும் காலத்திலேயே தன் பாலின மாற்றத்தை அடையாளம் கண்டு கொண்டார்.
இருப்பினும் தன் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அதனை வெளிப்படுத்தாமலேயே வாழ்ந்து வந்தார்.
தொடர்ந்து திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலைப் படிப்பை முடித்தவர், நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டதால், கல்லூரி காலத்திலேயே பரதத்தில் நுண்கலை படிப்பை முடித்தார்.
அதோடு, கரகம், காவடி, ஒயில், பறை, சிலம்பம் போன்ற கிராமியக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று, பிற மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்து வந்தார்.
முதுகலைப் படிப்பில் சேர்ந்தபோது தந்தை காலமானதால் குடும்பப் பொறுப்பை ஏற்று வேலைக்குச் செல்லத் தொடங்கினார் ரியானா.
அப்போது தவிர்க்க இயலாத காரணத்தால் தன்னுடைய பாலின மாறுபாட்டை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் வீட்டில் பெரும் புயல் வீசியது. குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்.
பின்பு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சமூகத்தினருக்கான விழிப்புணர்வு வழங்குதல், மனநல ஆலோசனை மற்றும் அரசின் சேவைகளை எடுத்துரைக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார்.
தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தவர், தன்னைப் போன்ற சக திருநங்கை நண்பர்களுடன் இணைந்து, தள்ளு வண்டி உணவகத்தை ஆரம்பித்தார்.
தன்னை நோக்கி வந்த அச்சுறுத்தல்களை அழகாகக் கையாண்டு, உணவகத்தை வெற்றிகரமாய் நடத்திச் சென்று கொண்டிருப்பவர்.
சமீபத்தில் மாடலிங் துறையிலும் கால் பதித்துள்ளார் ரியானா. மிஸ் திருச்சி-2022 போட்டியில் கலந்து கொண்டவருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
பெண்களுக்கான போட்டியில் கிடைத்த வெற்றியின் காரணமாக, அதே வருடம் தில்லியில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான Miss Trans Queen India போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்டு இரண்டு பட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து Miss Universe Trans India 2023- போட்டியிலும் வெற்றி பெற்றார்.
பின்பு, மூலிகை குளியல் பொடி தயாரிப்பு மற்றும் விற்பனையிலும் ஈடுபட்டு தொழில் முனைவோராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.
சர்வதேச மாடலிங் போட்டியில் இந்தியா சார்பில் திருநம்பி, திருநங்கை மாடல்களைத் தேர்வு செய்து அனுப்பும் நேஷனல் டைரக்டர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, நாட்டு நலப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
சமூகம் தங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டால் தன்னைப் போல் உள்ள பலரும் சிகரங்களைத் தொட முடியும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் திருநங்கை ரியானா சூரி.
– எஸ்.வாணி