நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெறும் 14 பந்துகளில் அரை சதம் அடித்தார் அபிஷேக் சர்மா.
இப்போட்டியில் மொத்தம் 20 பந்துகளில் அவர் 68 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்த சாதனைக்கெல்லாம் அவரது பயிற்சியையும், பயிற்சியாளர் யுவராஜ் சிங்கையும் எல்லோரும் புகழ்ந்துகொண்டிருக்க, அபிஷேக் சர்மாவோ, எல்லாவற்றுக்கும் காரணம் டீம் பயணம் செய்யும் பேருந்தில், தான் அமரும் சீட்தான் என்று நினைக்கிறாராம்.
ஓட்டலில் இருந்து இந்திய ஆணி ஸ்டேடியத்துக்கு போகும்போது குறிப்பிட்ட ஒரு இருக்கையில்தான் அபிஷேக் சர்மா அமர்வாராம்.
முதல் டி20 போட்டிக்கு அந்த இருக்கையில் அமர்ந்துதான் அபிஷேக் சர்மா சென்றுள்ளார். அதில் அரை சதத்தையும் குவித்துள்ளார். ஆனால், 2-வது டி20 போட்டியில் ஆடச் சென்றபோது அந்த இருக்கை அவருக்கு கிடைக்காததால் வேறொரு இருக்கையில் அமர்ந்து அபிஷேக் சர்மா சென்றுள்ளார்.
ஆனால், அவர் அந்த போட்டியில் ஒரு ரன்கூட எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார். இது அவரது மனதில் ஆழமாகப் பதிய, 3-வது டி20 போட்டிக்கு தன் பழைய இருக்கையில் அமர்ந்துதான் போவேன் என்று அடம்பிடித்து அந்த இருக்கையில் அமர்ந்து சென்றுள்ளார்.
அப்போட்டியில் 20 பந்துகளில் 68 ரன்களையும் குவித்துள்ளார்.
போட்டி முடிந்ததும் ஹர்ஷ்தீப் சிங்கிடம் சென்றவர், “பஸ் சீட் விஷயத்தில் நான் சொன்னது சரிதான் என்று இப்போது புரிகிறதா?
முந்தைய போட்டியில் அந்த சீட்டில் அமராததால்தான் நான் டக் அவுட் ஆனேன். நான் மட்டுமல்ல, இந்திய அணி இப்போது தொடர்ந்து ஜெயிப்பதால் அணியில் உள்ள எந்த வீரர்களும் சீட்டை மாற்றவேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார்.
ஆக, தன்னுடைய பேட்டிங் திறமை மீது வைத்துள்ள அதே நம்பிக்கையை, பேருந்தில் தான் அமரும் இருக்கை மீதும் வைக்கிறார் அபிஷேக் சர்மா.
சச்சினின் நம்பிக்கைகள்:
அபிஷேக் சர்மாவுக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும் இப்படி சில செண்டிமெண்ட்கள் உள்ளன.
எப்போது பேட்டிங் செய்யக் கிளம்பினாலும், முதலில் தனது இடது காலில் பேடைக் கட்டிக்கொள்வது சச்சினின் வழக்கம்.
அதன் பிறகுதான் வலது காலில் பேடைக் கட்டுவார். அப்படி கட்டினால்தான் தன்னால் அதிக ரன்களைக் குவிக்க முடியும் என்று கிரிக்கெட் ஆடும் காலம் முழுவதும் அவர் நம்பினார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக சச்சின் டெண்டுல்கர் இருந்தாலும், போட்டியின் முதல் பந்தை சந்திப்பது தனக்கு அதிர்ஷ்டமில்லை என்பது சச்சினின் நம்பிக்கையாக இருந்தது.

இதனால், எப்போதும் தன்னுடன் ஆட வரும் பேட்ஸ்மேனைத்தான் முதல் பந்தை எதிர்கொள்ளச் செய்வார்.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது, சேதமாகி இருந்த தனது அதிர்ஷ்ட பேட்டை பழுதுபார்த்து எடுத்துவந்தார் சச்சின் டெண்டுல்கர்.
அவர் நினைத்திருந்தால், எத்தனையோ புதிய பேட்களை வாங்கியிருக்கலாம். ஆனால் சேதமாகி இருந்த தனது ராசியான பேட்தான் தனக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித்தரும் என்று சச்சின் உறுதியாக நம்பினார்.
அவர் நம்பியதைப் போலவே 2011-ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா பட்டம் வென்றது.
கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஓட்டலில் இருந்து மைதானத்துக்கு பேருந்தில் செல்லும்போது, பேருந்தின் இடதுபுறத்தில் உள்ள முதல் வரிசையின் ஜன்னலோர இருக்கையில்தான் அமர்ந்து செல்வார் சச்சின்.
இதுவும் அவரது நம்பிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
– பி.எம்.சுதிர்