‘ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்’ என்ற பாடல் சிவாஜி – கே.ஆர்.விஜயா நடித்த ‘ரிஷிமூலம்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் தங்கள் மனைவி, காதலி அல்லது இணையிடம் நேசத்தை வெளிப்படுத்துகிற வகையில் இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். அந்த வயதில் காதல் வறண்டு போய்விடும் என்றெண்ணுவது சரியல்ல என்கிற தொனியில் அதில் வார்த்தைகள் அடுக்கப்பட்டிருக்கும்.
அதனைப் பிரதிபலிப்பது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றன. அதிலொன்று, சில நாட்களுக்கு முன்னர் கொச்சியில் நிகழ்ந்த ராஷ்மி – ஜெயபிரகாஷ் திருமணம். இவர்கள் இருவருமே அறுபதைக் கடந்தவர்கள். இவர்களது வாரிசுகள் ஒன்றுகூடி, இந்தத் திருமணத்தை நடத்தினர் என்பது இன்னொரு ஆச்சர்யம்.
முகிழ்த்த காதல்!
பதின்ம வயதில் ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கின்றனர். சந்தர்ப்பச் சூழல்களால் இருவரும் பிரிகின்றனர். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து குழந்தைகள், குடும்பம் என்றாகிறது. அந்த ஆண் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கிறார். நாடு திரும்பிய அவருக்குத் தனியாகக் குடும்பம் அமைகிறது. ஐம்பதுகளைத் தாண்டியபிறகு அடுத்தடுத்து இருவரும் தங்களது இணையை இழக்கின்றனர்.
ஒருநாள் அந்தப் பெண்ணைக் குறும்படமொன்றில் காண்கிறார் அந்த ஆண். ‘அட’ என்றிருக்கிறது அந்த ஆணுக்கு. ஒருவழியாக, அப்பெண்ணை மீண்டும் சந்திக்கிறார். சில சந்திப்புகளிலேயே இருவருக்குமிடையே பல ஆண்டுகள் கழித்து காதல் மீண்டும் மலர்கிறது. ‘அறுபதுகளுக்குப் பிறகாவது நாம் ஒன்றாக இருப்போம்’ என்று முடிவெடுக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு ‘ரொம்-காம்’ சினிமா போன்றிருக்கிற இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ராஷ்மி – ஜெயபிரகாஷ் வாழ்வில் நிகழ்ந்தவை தான்.
இப்படியான சந்திப்புகளும் காதலைப் பகிர்கிற தருணங்களும் பெரும்பாலானோரின் கற்பனைகளில் கூட இடம்பெறாதவை. ஒருவேளை மனதின் அடியாழத்தில் அப்படியான விருப்பங்கள் இருந்தாலும், பல்வேறு காரணிகளைக் காரணம் காட்டி அந்தக் கணங்களிலேயே புதைத்துவிடுவது சிலருக்கு நேர்ந்திருக்கும்.
சிலர் அச்சிந்தனைக் கரையில் கால் பதிக்கவே விரும்பமாட்டார்கள் அல்லது அவ்வாறான பாவனையை வெளிப்படுத்துவார்கள். இன்னும் சிலர் ‘இதெல்லாம் ஒரு விஷயமா, வாழ்க்கைங்கற வண்டியே இங்க தாறுமாறா ஓடிக்கிட்டிருக்கு’ என்பார்கள்.
இந்தப் போக்கைத் தாண்டி, இறுதிக்காலத்தில் ஒரு துணையைக் கைக்கொள்கிற துணிவும் தைரியமும் தெளிவும் புதிய பாதையொன்றைக் காட்டுகிறது.
இந்த நேரத்தில், இவர்களது வாரிசுகளின் பெருந்தன்மையையும் பாராட்ட வேண்டும். தங்களது தந்தை, தாய் குறித்த நினைவுகளை, அவர்களது வாழ்வுத் தடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, புதியதொரு திசையில் இருவரும் நகர்வதற்கு ஒப்புதல் தெரிவிப்பது சாதாரண விஷயமல்ல.
பொதுவெளியில் சிலர் இது பற்றி அவதூறுகளை வீசுவார்கள் என்று தெரிந்தும், தங்களது தாயின் அல்லது தந்தையின் விருப்பத்திற்குத் துணை நிற்க எண்ணியது வரவேற்கத்தக்கது.
இதேபோன்று, 2019-ல் திருச்சூரில் உள்ள அரசு முதியோர் காப்பகத்தில் கொச்சணியன் – லட்சுமி அம்மாள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே அந்த காலகட்டத்தில் எழுபதை நெருங்கியிருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை அருகே ஒரு பெண்ணுக்கு அவர்களது மகன்களே திருமணம் செய்து வைத்தது செய்திகளில் இடம்பெற்றது.
ஒழுக்கம், புனிதம், கலாசாரம் என்ற வார்த்தைகளைக் கையிலேந்திக்கொண்டு, இப்படியான தேவைகளோடு இருக்கிற முதியவர்களது தினசரி வாழ்வை நரகமாக்குகிற மனிதர்களைக் காண்கையில் இச்சம்பவங்கள் விஸ்வரூபமாகத் தெரிகின்றன.
அழகான விடியல்
தனிமையான பொழுதுகள் ஆசுவாசம் தரும் தான். ஆனால், அது எல்லோருக்கும் பொதுவான விருப்பமாக இராது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்களோடு வாழ்ந்தாலே மனம் இயல்பாக இருக்குமென்கிற பட்சத்தில், அப்படியொரு சூழலை அமைத்துக் கொள்வதில் தவறில்லை. இருபதுகளில் அப்படித்தான் காதல், கல்யாணம் என்கிற விஷயங்கள் ஒரு ஆண் / பெண் வாழ்வில் நிகழும்.
வெளிநாடுகளில் அது பெரும்பாலும் காதல் திருமணமாக அல்லது ஒத்திசைவான புரிதலாக இருக்கும். நம்மூரில் அது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இல்லற பந்தமாக அமைகிறது.
குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் அப்படியான வாழ்வு தொலைகிறபோது அல்லது அமையாதபோது, அவ்வாறிருக்கிற இரண்டு பேர் தங்களது கைகளைக் கோர்த்துக்கொள்வதை வரவேற்கத்தான் வேண்டும்.
அடுத்தடுத்து ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு அவர்கள் எதிர்கொள்ள அது வகை செய்திடும். உயிர் என்ற ஒன்று பிரிகிற வரை, அந்த பந்தம் துணை நிற்பது நல்லதுதானே. பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக, மனரீதியாக அது ஆசுவாசம் அளிக்கும்தானே.
அந்தப் பார்வையோடு நோக்கும்போது, ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்கிற பாடல் அவர்களது பிம்பங்களின் மேல் பாங்கோடு பொருந்தி நிற்கும்..!
- ரோகிணி