பிரதமரின் வருகை கூட்டணியைப் பலப்படுத்துமா?

தேர்தல் பக்கங்கள்:

வரும் 23-ம் தேதி தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி தமிழக பாஜக பரபரப்பு அடைந்திருக்கிறது.

மதுராந்தகத்தில் நடக்க இருக்கிற பாஜக மாநாட்டை பிரம்மாண்டமானதாக மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற முனைப்பு பாஜக நிர்வாகிகளிடம் தெரிகிறது.

எப்படியாவது மோடி வியக்கும் அளவுக்கு பெருங்கூட்டத்தை ஒருங்கிணைத்துக் காட்டிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பாடுபடுகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும். நடக்க இருக்கும் பாஜக கூட்டத்திற்குக் கூட்டத்தை கூட்டுவதை விட, கூட்டணியை கூட்டுவது தான் பாஜகவிற்கு இன்னும் பிரச்சினையாக இருக்கிறது.

தமிழக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொண்ட பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்கள் இன்னும் முழுமையாக கட்சிக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ வந்து சேரவில்லை.

எப்படியோ கூட்டணிக்குள் வந்து சேர அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டிருப்பதைப் போல தெரிகிறது. முன்னாள் முதலமைச்சரான ஓபிஎஸ் தர்ம சங்கடமான நிலையில் தனித்துவிடப்பட்டிருக்கிறார்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பியபோது செமத்தியான கூட்டத்தைக் கூட்டி காட்டக் காரணமாக இருந்த சசிகலாவின் நிலை சொல்லும்படியாக இல்லை.

அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் இருப்பதையே திமுக மறந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார் சசிகலா.

அண்மையில் கூட்டணியில் வந்து சேர்ந்த பாமகவை பொறுத்தவரை அன்புமணிக்கு பின்னால் பெரும்பாலான பாமக ஆதரவு இருக்கிறது என்று சொன்னாலும்,

இன்னமும் ராமதாஸ் போடும் முட்டுக்கட்டைகள் ஊடகங்களுக்கு பரபரப்பான தீனியாகிக் கொண்டிருக்கின்றன.

எதார்த்தமாக பார்க்கப் போனால் மருத்துவர் ராமதாசும் அவரது ஆதரவாளர்களும் கூட்டணிக்குள் வந்தால்தான் பாமகவும் பலப்படும், அதிமுக கூட்டணியும் பலப்படும். ஆனால், இதுவரை மருத்துவர் ராமதாஸ் வந்த பாடாக இல்லை.

அண்மையில் பெருங்கூட்டத்தைக் காண்பித்து மாநாட்டை நடத்திக் காட்டிய தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா, ஒரே சமயத்தில் திமுக தரப்பிலும் பேசுகிறார், அதிமுக தரப்பிலும் பேசுகிறார்.

எந்தப் பக்கம் தேமுதிக எதிர்பார்க்கும் அளவுக்கு பேரம் நிறைவடைகிறதோ அந்தப் பக்கம் அவர்கள் கைகோர்க்கலாம். அவர்களும் இதுவரை அதிமுக கூட்டணிக்குள் வரவில்லை.

இதுதவிர ஒருவேளை பாமக தலைவரான மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணிக்கு போனால் அந்தக் கூட்டணியிலிருந்து விசிக வெளியேறிவிடுவார்கள் என்று அதிமுக எதிர்பார்க்கிறது.

கூட்டணி குறித்து திருமாவளவனின் பேச்சுக்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் கூட, இதுவரை அவர் திமுக கூட்டணியைப் பிரிந்து அதிமுக பாஜக கூட்டணிக்குள் வரப் போவதாக தப்பித் தவறி கூட சொல்லவில்லை.

அதைப்போலத்தான் விஜய்யின் தவெக கட்சியும். பாஜக எந்த விதமான தூண்டில்களை அடுத்தடுத்து பயன்படுத்தினாலும் கூட, அதிமுக கூட்டணிக்குள் வருவதற்கான சிக்னலை விஜய் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

வழக்கம் போல ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள், அதிமுக கூட்டணிக்குள் வரலாம் என்பதைத் தவிர அதிமுக உடனான கட்சிகள் எதிர்பார்க்கிற மாதிரி பிரம்மாண்ட கட்சி அந்தக் கூட்டணிக்கு வருவார்களா என்பது மிக மிகக் குறைவாக தெரிகிறது.

மதுராந்தகத்தில் நடக்க இருக்கும் பாஜக மாநாட்டு மேடையில், பிரதமர் மோடியுடன் கைகளை இணைத்து உயர்த்திக் காண்பிக்கும் கூட்டணிக்கான ஒற்றுமையை காட்டுகிற அந்த ஒருங்கிணைப்பில் யார் யார் வரப் போகிறார்கள் என்று பாமக நிறுவனரான ராமதாஸ் அடிக்கடி நினைவுகூறும் பாடலின்படி, “போகப்போக தெரியும்…“.

 
 
You might also like