உண்மையிலேயே பதைப்பதைப்பை ஏற்படுத்துகிற விதத்தில் இருக்கின்றன, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சிகள்.
அண்மையில் தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தான் நமக்கு இந்த பதைப்பதைப்பு ஏற்படுகிறது.
அப்படித் தாக்குகிறவர்கள், வயதில் குறைந்த இளைஞர்களாக இருக்கிறார்கள். சிறுவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கையாளுகிற ஆயுதங்கள் பயங்கரமாக இருக்கின்றன.
வன்முறையாளர்களின் கையில் வழக்கமாக இருக்கும் ஆயுதங்களை இளம்வயதில் ஏந்தி அவர்கள் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதைப் பார்க்கும்போது நாமே வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இத்தகைய வன்முறை நிகழ்த்தப்படுவதற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
மொழி கடந்து மனித நேயத்தை விரும்புகிறவர்கள் அனைவரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக வட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து உழைப்பதற்காக இங்கு வருகிற வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் எத்தகைய மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்துகிறார்கள்?
சமீபகாலமாக, சென்னை உட்பட பல இடங்களில் நடந்திருக்கிற, நடந்தேறி வருகிற பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு பின்னணியாக இதே வடமாநிலத்தவர்களின் உழைப்புதான் இருந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாம் பெருமைப்பட்டுக் கொள்கின்ற தொழில் வளர்ச்சிக்குப் பின்னணியிலும்,
இதே வட மாநிலத் தொழிலாளர்கள் வெவ்வேறு ஊர்களில் குறிப்பாக ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் என்று பல்வேறு நகரங்களில் வளர்ச்சிடையும் தொழிலுக்குப் பின்னணியாக ஒரு பலமாக இதே வடமாநிலத்தவர்கள் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைவிட தஞ்சாவூர் பகுதிகளில் விவசாய வேலைகளைச் செய்வதற்கு கூட, குறிப்பாக நெல் வயலில் களை எடுப்பதற்குகூட வட மாநிலத்தவர்கள் தான் வேண்டியிருக்கிறது.
அதேசமயத்தில், இத்தகைய கட்டுமானம், விவசாய உள்ளிட்ட வேலைகளை இதுவரை செய்து கொண்டிருந்த தமிழர்கள் எங்கே போனார்கள் என்கின்ற கேள்வியும் ஒரு புறம் இருக்கிறது. அதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால், தமிழகத்தில் தற்போது நடந்து வருகின்ற பல்வேறு விதமான பொருளாதார ரீதியான மாற்றங்களுக்கு ஒரு பின்னணியான ஒரு உழைப்புத் திறனை அளிக்க கூடியவர்களாக இதே வட மாநிலத்தவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நடைமுறையில் நாம் பார்க்கும் எதார்த்தம்.
இவர்கள் மீது வன்முறை நடத்தப்படுவதை எந்த விதத்திலும் இந்தியர்களாக நாம் அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் இவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தொடர்ந்தால், வட மாநிலங்களில் இருக்கும் நமது தமிழர்களுடைய நிலை என்னவாக இருக்கும்?
நாட்டின் தலைநகரான டெல்லி உட்பட மும்பை, கல்கத்தா என்று பல்வேறு இடங்களிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரவிக்கிடக்கின்றன நமது தமிழர்களுடைய நிலை என்னவாக இருக்கும்?
தற்போது வட மாநிலத்தவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
இத்தகைய நிலை தொடர்வது, இந்திய அளவில் பல்வேறு பாதிப்புகள் நிகழ்வதற்கு காரணமாகவும் அமையலாம்.
பொதுவாக வந்தாரை வரவேற்கும் தமிழகம் என்றுதான் இதுவரை நாம் பெருமையுடன் கூறி வந்திருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்த வாசகத்தின் அர்த்தத்தை செயல்பூர்வமாக உணர்த்தியிருக்கிறார்கள்.
வந்தாரையெல்லாம் வாழ வைத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. இன பேதமும் பார்ப்பதில்லை.
இந்தநிலையில் இத்தகைய நிகழ்வு தொடர்வது எந்த விதத்திலும் தேசிய நலனுக்கு உகந்ததல்ல.
தமிழர்களாக இருக்கிறோம், அதே சமயத்தில் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டிய தருணம் இது.
– யூகி