இசைமையான அனுபவங்கள் – 3
‘புலப்பாக்க சுசீலா’ என்றால் பலருக்கும் தெரியாது.
ஆனால், பி.சுசீலா என்றால் பலருக்கும் பளிச்சென்று மெல்லிய இசை மின்னலைப் போல தெரியும்.
பி.சுசீலா என்ற பெயரைக் கேட்டாலே காதோரம் லேசான தென்றல் தொட்டுவிட்டு போவதைப் போலிருக்கும். திறமையான வீணைக் கலைஞரின் கையிலுள்ள வீணையின் நாதமே குரல் வடிவத்திற்கு மாறியதைப் போலவும் இருக்கும். அவ்வளவு வசீகரமானது பி.சுசீலாவின் குரல்.
ஆந்திராவில், விஜய நகரத்தில் 1935-ல் பிறந்தவர். 12 வயதில் கர்நாடக இசையைக் கற்க ஆரம்பித்து வீட்டிலேயே தொடர்ந்து சாதகமும் பண்ண ஆரம்பித்து, 20-வது வயதில் வானொலியில் ஒலிக்கத் துவங்கியதிலிருந்து அவரது இசைப்பயணம் தொடர்ந்திருக்கிறது.
தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும், தமிழை முறையாகக் கற்று அதை மிகவும் கவனமாக உச்சரித்து அவர் பாடிய பல பாடல்கள் திரையிசையில் உச்சம் பெற்றிருக்கின்றன.
‘அமுதைப் பொழியும் நிலவே’, ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’, ‘உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘என்ன என்ன வார்த்தைகளோ’, ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’, ‘நலந்தானா’, ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’ இப்படி ஏராளமான தனிப்பாடல்கள் திரை இசையில் கொடுத்த சுசீலா, பல முன்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், பி.பி,ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ் என்று பல கலைஞர்களுடன் இணைந்து பாடிய ஏராளமான பாடல்கள் இசை ரசிகர்களின் நினைவுக்குவியலில் நிச்சயம் அடங்கி இருக்கும்.
தமிழில் நன்கு தேர்ச்சி இருந்ததால்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் “தமிழுக்கு அமுதென்று பேர்” என்கிற பாடலை அவ்வளவு துல்லியமாகவும் இசை நயத்துடனும் அவரால் பாட முடிந்தது.
அதிலும் புலமையுடன் அவர் பாடிய பாடல்களைக் கேட்கும்போது இசையில் அந்தக் கலைஞர்களிடம் வெளிப்பட்ட ஒத்திசைக் கேட்க அற்புதமாக இருக்கும்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பி.சுசீலாவின் மெல்லிய ஹம்மிங்குடன் துவங்கும் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற பாடலும் சரி, டி.எம்.எஸ் உடன் இணைந்து பாடிய “நான் பேச நினைப்பதெல்லாம்” போன்ற பாடலும் சரி,
‘படகோட்டி’ படத்தில் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவிக்காக பாடிய “தொட்டால் பூ மலரும்” பாடலும் சரி, ‘அடிமைப்பெண்’ படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய “ஆயிரம் நிலவே வா” என, இப்படி பல இனிமையான பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் டி.ஆர்.பாப்பா, ஜி.ராமநாதன் துவங்கி கே.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா என்று பல இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்து இருக்கிற சுசீலா, தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசி, சிங்களம் என்று பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடி, தென்னிந்தியாவின் தனித்துவமான பாடகியாக பெயர் எடுத்தவர்.
இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிற சுசீலாவை, சகக் கலைஞர்களே வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
டி.எம்.எஸ் பலமுறை பாராட்டி இருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிலாகித்திருக்கிறார். கே.ஜே.யேசுதாஸ் தன்னுடன் இணைந்து பாடிய பாடகிகளில் தனக்கு மிகவும் பிடித்தமானவராக பி.சுசீலாவைத் தனித்து குறிப்பிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக, ‘ஆலயமணி’ படத்தில் பி.சுசீலா பாடிய, மகத்தான பாடலான “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்ற பாடலைக் குறிப்பிட்டுச் சொல்லி சிறப்பித்திருக்கிறார்.
இதுவரை 5 முறை தேசிய விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார் பி.சுசீலா. இதுதவிர பல்வேறு மாநில விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்.
தற்போது 90 வயதைக் கடந்திருக்கிற பி.சுசீலா அவர்களை பல மேடைக் கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன்.
சில பாடகர்கள், திரையில் பாடிய பாடல்களை மேடையில் பாடும்போது சில மாற்றங்களைச் செய்வதைப் போல் அல்லாமல், அச்சரம் பிசகாமல் அப்படியே பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் பி.சுசீலா.
மேடையில் பாடும்போது அவரிடம் வெளிப்படும் உடல்மொழி அவ்வளவு அமைதியாக இருக்கும்.
சிறிதும் அலட்டிக் கொள்ளாதபடி முகத்தில் அவருடைய உதடுகள் அசைவது மட்டுமே நமக்குத் தெரியும். பாடலுக்கு இடையே கிண்டலோ, வேறு சங்கதிகள் இணைத்துப் பாடுவதோ அவருடைய வழக்கமாக அமையவில்லை.
சமீபத்தில் சென்னையில் நடந்த இசைக் கச்சேரி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, தள்ளாத வயதிலும் அவருடைய பாடல்களைப் பாடியவர், அந்தப் பாடலை பாடி முடித்துவிட்டு, சிறிது நேரம் கழித்து வெட்கம் கலந்தக் குரலில் பேசும்போது, இப்படிச் சொன்னார், “நான் தமிழ்ப் பாடல்களை பாடி இருந்தாலும், நான் பேசும் போது மட்டும் என்னுடைய தாய் மொழியான தெலுங்கின் சாயல் வந்து விடுகிறது” என்றார்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னை மிகைப்படுத்தி உயர்த்தியோ, சகக் கலைஞர்களைத் தாழ்த்தியோ அவர் பேசியதில்லை.
அந்த அளவுக்கு அவரது குரல் மட்டுமல்ல, அவரது அபூர்வமான மனமும் பண்பட்டு இருக்கிறது.
இப்போதும் பி.சுசீலா அவர்களின் குரலை இரவு நேரத்தில் தொலைக்காட்சியில் கருப்பு வெள்ளைக் காட்சியாக அவரது பாடல்கள் ஒலிக்கும்போது தனித்து, திறமையாக வாசிக்கிற வயலின் இசை காதில் விழுந்து நனைவதைப் போலிருக்கிறது.
அது அவரது குரலின் சிறப்பான வசீகரம்.
– மணா