பரபரப்பான பல சிறை அனுபவங்கள்!

கல்லூரியில் நான் படிக்கும்போதே சக மாணவர்களுடன் போராட்டம் நடத்தி, கைதாகி மதுரையில் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்தை ஏற்கனவே, ‘ஆளுக்கொரு குகை’ என்கிற பெயரில் நண்பர் மு.ராமசாமி நடத்திய ‘விழிகள்’ இதழில் எழுதினேன்.

அந்தக் கதைக்கு அப்போதே ‘இலக்கியச் சிந்தனை’ பரிசும் கிடைத்தது.

அதன்பிறகு பத்திரிகைத் துறைக்கு வந்தபிறகு சந்தித்த சிறை அனுபவங்கள் பல்வேறு ரகம். 

கலைஞர் நள்ளிரவு நேரத்தில் கைதாகி அதிகாலை நேரத்தில் சென்னை மத்திய சிறைக்கு முன்பு கட்டம்போட்ட கைலியுடன் அமர்ந்திருந்தபோது, பார்த்திருக்கிறேன்.

பிறகு அவரை பேட்டியும் எடுத்திருக்கிறேன்.

நாம் தமிழர் இயக்கத் தலைவரான சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜெயிலர் அறையில் திரு. ம.நடராசனுடன் சந்தித்திருக்கிறேன்.

அதே வேலூர் சிறையில் வைகோ சிறைபட்டிருந்தபோது, திரு. சின்னக்குத்தூசியுடன் சந்தித்திருக்கிறேன்.

இப்படிப் பல சிறை சார்ந்த அனுபவங்கள் இருந்தாலும், சில அனுபவங்கள் மட்டும் இங்கே:

ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு குண்டுவெடிப்பு நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில் சார்ந்த நிகழ்வு என்பதால், உடனடியாக இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அப்போது, திரு. ஜவஹருல்லா உள்ளிட்டவர்களுடன் இணைந்து மதுரை மத்தியச் சிறைக்குச் சென்று, கைதானவர்களைச் சந்தித்தேன். உளவுத்துறை சார்ந்தவர்களையும் சந்தித்தேன்.

சில கட்சி சார்ந்தவர்களையும் சந்தித்தபோது, அந்த குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு வேறு சில அரசியல் நோக்கம் இருந்தது தெரியவந்தது.

அதற்கான ஆவணங்களும் சாட்சியமும் கிடைத்தன. அதையடுத்து சென்னைக்கு வந்தபோது, சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. 

சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த சின்னக்குத்தூசி அவர்களைச் சந்தித்து, ஆதாரங்களுடன் அவரிடம் தெரியப்படுத்தியபோது, உடனே முதலமைச்சராக இருந்த கலைஞரை பார்க்கப்போவதாகச் சொன்னார்.

அதே தினம், மதியதிற்குள் சட்டசபையில் மதுரை சம்பவம் பற்றி குறிப்பிட்டுப் பேசி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய இளைஞர்களை விடுவிப்பதாக அறிவித்தார். சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுத்தார்.

அன்றைய தினம் மாலையில் மறுபடியும் சின்னக்குத்தூசியை அவரது அறையில் சந்தித்தபோது, “கலைஞர் உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கச் சொன்னார்” என்று அவர் சொன்னவிதம் இப்போதும் அதை மறக்கமுடியாத நினைவுகளில் ஒன்றாக்கி இருக்கிறது.

———– 

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய பேச்சுக்கள் இந்தியா முழுக்கப் பரவியிருந்தது.  பல்வேறு ஊடகங்களில் பேசுபொருளாக மாறினார் வீரப்பன்.

காரணம், புகழ்பெற்ற கன்னட நடிகரான ராஜ்குமார் காட்டுக்குள் வீரப்பன் ஆட்களால் கடத்தப்பட்டிருந்தார். 

அப்போது, வீரப்பனுக்கு உறுதுணையாக இருந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார் ‘தமிழ்நாடு விடுதலைப் படை’யைச் சேர்ந்த மாறன்.

அவர், பொடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

சென்னை புறநகரில் அமைந்திருந்த அந்த சிறை வளாகத்திற்குள்ளேயே நீதிமன்றமும் இருந்தது. 

குமுதம் வார இதழுக்காக மாறனைச் சந்திக்க நண்பர் ஒருவர் உதவியுடன் வெள்ளை உடை சகிதமாக உள்ளே சென்றிருந்தேன்.

அந்த நீதிமன்றத்திற்குள் மாறனும் அவருடைய சகத் தோழர்களும் நீதிபதிக்கு முன்னால், சகஜமாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் செல்போனில் யாரும் பேசிவிட முடியாதபடி தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டிருந்தது.

சிறை வளாகத்திற்குள் சென்றதுமே அங்குள்ள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு ஒரு வழியாக உள்ளே சென்றேன்.

அங்கிருந்த மாறனிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். எழுந்து வந்து நின்றபடியே என்னுடன் பேசிக் கொண்டிருந்த மாறன் சட்டென்று என் சட்டை பாக்கெட்டிலிருந்து சிறு  பேனா வடிவிலான வாய்ஸ் ரிக்கார்டரை சட்டென்று கையில் எடுத்துப் பார்த்தார்.

சிரமப்பட்டு, சைகை காண்பித்து மறுபடியும் பாக்கெட்டிலேயே வைக்கச் சொன்னேன்.

அதன்பிறகு கேஷுவலாக நின்றபடியே நான் கேட்ட கேள்விகளுக்கு ரெக்காடர்க்கு மட்டும் கேட்கும்படியான மெல்லியக் குரலில் பதிலளித்துக் கொண்டே வந்தார் மாறன்.

அரை மணி நேரத்துக்கும் மேலான அந்த உரையாடலுக்குப் பிறகு அவர், என்னிடம் கேட்ட கேள்வி, “வீரப்பனை சந்திக்க விரும்புகிறீர்களா?”.

ஆபிசில், கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த சிறை வளாகத்தை விட்டு வெளியே குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து வந்த பிறகுதான், குமுதம் அலுவலகத்திற்கு போன் செய்ய நேர்ந்தது.

அடுத்த வாரம் அந்த பேட்டி தான் கவர் ஸ்டோரி ஆகி பரபரப்பாகி இருந்தது.

———- 

இதைப்போலவே, அதே வார இதழுக்காக நான் எடுத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி அல் உம்மா தலைவரான பாஷாவிடம் எடுத்த பேட்டி.

கோவையில் பெரும் குண்டுவெடிப்பு நடந்து, 50-க்கும் மேற்ட்டோர் இறந்தார்கள். அப்போது செய்தி சேகரிப்பதற்காக கோவைக்குச் சென்று வந்த நான், அந்த சம்பவத்திற்கு மூலக்காரணமாகச் சொல்லப்பட்ட பாஷாவை சந்தித்துப் பேட்டி எடுக்க முயற்சித்தேன். 

சென்னை மத்தியச் சிறையில், அவரும் அவருடைய இயக்கத்தினர் சிலரும் அடைக்கப்பட்டிருந்தார்கள். பாதுகாப்பு அதிகப்பட்டிருந்த சூழலில் ஒரு வழியாக அவரிடம் பேட்டி எடுத்து – அந்தப் பேட்டி அந்த வார கவர் ஸ்டோரியாகி இருந்தது. 

அது பரபரப்பாக வெளியான அந்தப் பேட்டிக்கான தலைப்பு “பாதிக்கப்பட்டோம் – பதிலடி கொடுத்தோம்.”

இதழில் வெளியானதோடு, அதற்கான போஸ்டர்களிலும் அந்தப் பேட்டி கவனப்படுத்தப்பட்டது.

எதிர்பார்த்தபடியே பல இடங்களிலிருந்தும் பலவிதமான எதிர்ப்பு. மிரட்டலான ஃபோன் கால்கள்.

பல ஊடகங்கள் அந்தப் பேட்டியை மேலும் பரவலாகக் கொண்டு சென்றன. குறிப்பிட்ட மாலை நாளிதழில் அந்தப் பேட்டி அப்படியே மறு பிரசுரமாகி இருந்தது.

உளவுத்துறையின் கண்காணிப்புகள் அதிகப்பட்ட மறுநாள் காலை, அந்த வார இதழில் அலுவலகத்திற்குள் ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர்கள் என்னை தற்காலிமாக வெளியூருக்குப் போகச் சொன்னார்கள்.

அதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டு அந்த அலுவலக வளாகத்தைவிட்டு வாசலுக்கு வந்தபோது, உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர், எனது பெயரைக் குறிப்பிட்டு அங்கிருந்த செக்யூரிட்டிகளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். 

மாடியில் உள்ள அலுவலகத்தில்போய் விசாரியுங்கள் என்று அவர்கள் சொன்னபோது, அவரைக் கடந்து நான் வெளியேறிக் கொண்டிருந்தேன்.

ஒரு வாரத்திற்குள் சற்று பரபரப்பு அடங்கிய பிறகு நான் அலுவலகத்திற்கு போனபோது, இந்து முன்னணியின் தலைவரான திரு. ராமகோபாலன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்ததாகச் சொன்னார்கள். 

அதையடுத்து, சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு டேப் ரிக்கார்டர் அடங்கிய கைப்பையுடன் போனேன்.

கீழே காவலுக்கு இருந்த காவலர்கள் சற்று நவீன வடிவத்திலிருந்த அந்த டேப் ரிக்கார்டரை நன்கு சோதித்த பிறகே கொண்டு செல்ல அனுமதித்தார்கள்.

மாடியிலிருந்த அறையில் ராமகோபாலனை சந்தித்தபோது, முதல் கால்மணி நேரம் கொந்தளித்தபடி இருந்தது அவரது பேச்சு. குரலின் வீச்சு உயர்ந்திருந்தது. 

அவருக்கு முன்னால் இருந்த இருக்கையில், அவர் சொன்னதைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன். 

“இப்ப என்ன செய்யலாம், சார்” கேட்டேன்.

“நீங்களே சொல்லுங்க” என்றார்.

“அவர்கள் தரப்பைச் சொன்னார்கள். அதை வெளியிட்டிருக்கிறோம்.

இப்போது, நீங்கள் உங்கள் தரப்பைச் சொன்னால், அதையும் வெளியிடுகிறோம்.” – என்றேன்.

“சரி” என்றார் சற்றே மென்மையாக.

கைப்பியிலிருந்து டேப் ரிக்கார்டரை எடுத்து, ஆன் செய்தேன்.

ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக உஷ்ணமாகச் சென்றது அந்தப் பேட்டி.

அடுத்த வார குமுதம் இதழில் அதுதான் கவர் ஸ்டோரி.

– மணா

இனி அடுத்த வாரம்…

You might also like