பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டார்.
ஏற்றுக்கொண்ட நாளன்று கோட்டையில் அரசின் அனைத்து அலுவலர்களையும் கூட்டி, ஓர் அரிய உரை நிகழ்த்தினார்.
இந்த உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரை. அந்த உரையில் அரசு அலுவர்களை அண்ணா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
“கோப்புகளைத் தேக்கி வைக்காதீர்கள்! கோப்புகளைத் தேங்க அனுமதிக்காதீர்கள்!
நீங்கள் கையாண்டு இயக்குவது வெறும் கோப்புகள் மட்டுமல்ல. ஒவ்வொரு கோப்பிலும் மனித உயிர்களின் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அன்பு கூர்ந்து மறந்துவிடாதீர்கள்.
ஒவ்வொரு கோப்பின் பின்னணியிலும் ஓர் உயிரின் வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்!” என்று கூறினார்.
ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தலைவரின் உரை இது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மனித நேயத்திற்கு இதனினும் சான்று வேண்டுமோ?