மருத்துவக் கல்விக்கான மாணவர்களை ஃபில்டர் பண்ணுவதற்காக நீட் தேர்வு உருவான மாதிரியே, வாக்காளர்களை ஃபில்டர் பண்ணுவதற்காக எஸ்.ஐ.ஆர். திட்டம் (Special Intensive Revision – SIR) கொண்டுவரப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திருத்தப் பட்டியல் பணிக்கென நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளும் அலுவலர்களும் சென்னை நகரின் பல பகுதிகளில் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பான ஒரு நேரடி அனுபவம்.
சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் அமைந்துள்ள குடியிருப்பில் மொத்தம் 24 வீடுகள்.
அந்தத் தெருவில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிக்கான பந்தல்போட்டு தெருவிலேயே முகாமிட்ட அலுவலர்கள் காலை நேரத்தில், பொறுப்பாக வீடுகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கான விண்ணப்பங்களை விநியோகித்தார்கள்.
விநியோகித்தது மட்டுமல்ல, அதை எப்படி நிரப்ப வேண்டும் விண்ணப்பத்துடன் கூடவே, என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்கள்.
புகைப்படங்களை இணைக்கச் சொன்னார்கள். எல்லாம் முடிந்து தெருவில் முகாமிட்டிருக்கிற தங்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் படிவத்தை நிரப்பித் தரச் சொன்னார்கள்.
அலுவலர்கள் படிவத்தைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாலும், அன்று மாலை வரை அந்தக் குடியிருப்பிலிருந்து நிரப்பப்பட்ட நிலையில், சமர்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பத்துதான்.
படித்தவர்களும் ஓரளவு வசதியானவர்களும் நிறைந்த அந்தக் குடியிருப்பிலேயே இந்தளவுக்குதான் படிவங்கள், அதுவும் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் நிரப்பப்பட்டு சமர்பிக்கப்படுகிறது என்றால்,
தமிழ்நாடு முழுக்க இருக்கிற கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கி இருக்கிற 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் எவ்வளவு பேர் விண்ணப்பப் படிவங்களை சமர்பித்து, வாக்காளர் அட்டையைப் புதுப்பித்து, வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள்?
விண்ணப்பப் படிவத்தை சரிவர நிரப்பி சரியான ஆவணங்களை ஒப்படைக்கத் தவறியவர்கள் வாக்களிக்கும் தகுதியை இழந்துவிடுவார்களா?
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், வாக்காளர்கள் இடையே எப்பேர்பட்ட வடிகட்டும் முறையாக இந்த எஸ்.ஐ.ஆர். இருக்கப் போகின்றது?
– யூகி