மும்பையில் பிறந்து வளர்ந்த ஒரு பதினாறு வயதுப் பெண். கலைகளின் மீது தீராத தாகம் கொண்ட அந்தப் பெண்ணின் கனவுகள் அனைத்தும் நடனத்தை சுற்றியே அமைந்திருந்தன.
1981-ம் ஆண்டு, கோடை விடுமுறையில் தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா செல்லலாம் என்று தந்தை கொடுத்த வாக்குறுதி, அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகிறது என்பதை அந்த குடும்பம் அப்போது அறிந்திருக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமான பயணம்
சென்னையில் உறவினர்களைச் சந்தித்துவிட்டு, திருச்சியை நோக்கிப் பயணித்தபோது நிகழ்ந்த அந்த கோர விபத்து, சுதா சந்திரனின் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.
விபத்தில் பலத்த காயமடைந்த அவரது வலது காலில் தொற்று (Gangrene) ஏற்பட்டதால், வேறு வழியின்றி அவரது கால் முட்டிக்குக் கீழ் நீக்கப்பட்டது.
“சாமி கும்பிடத் தானே சென்றோம், எனக்கு ஏன் இந்த நிலை?” என்று கதறி அழுத பேத்தியிடம், அவரது பாட்டி சொன்ன தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவை:
“இந்த விபத்தைவிட நூறு மடங்கு பெரிய நன்மைகள் உன் வாழ்வில் நடக்கப்போகிறது, பொறுத்திருந்து பார்.”
தன்னம்பிக்கையின் மறுபெயர்:
நடனக் கலைஞர் ஒருவருக்குக் கால் போவது என்பது உயிர் போவதற்குச் சமம். ஆனால், சுதா சந்திரன் முடங்கிப் போய்விடவில்லை.
டாக்டர் சேத்தியின் உதவியுடன் ‘ஜெய்ப்பூர் செயற்கைக் கால்’ (Jaipur Foot) பொருத்தப்பட்டது.
ரத்தமும் சதையுமான காலுக்கே ஈடுகொடுக்க முடியாத கடினமான பரதநாட்டிய அடவுகளை, ஒரு செயற்கைக் காலை வைத்துக் கொண்டு அவர் பயிலத் தொடங்கினார்.
வலியைப் பொறுத்துக் கொண்டு, மீண்டும் மேடையேறிய அவரது விடாமுயற்சி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
தேசிய அங்கீகாரம்
சுதா சந்திரனின் நிஜ வாழ்க்கைப் போராட்டத்தைத் தழுவி, 1984-ம் ஆண்டு தெலுங்கில் ‘மயூரி’ திரைப்படம் உருவானது. அதில் அவரே கதாநாயகியாக நடித்தார்.
அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், 1986-ம் ஆண்டு தேசியத் திரைப்பட விருதுகளில் அவருக்கு ‘சிறப்பு ஜூரி விருது’ பெற்றுத் தந்தது.
அதே படம் ஹிந்தியில் ‘நாச்சே மயூரி’ என்ற பெயரில் வெளியாகி இந்தியா முழுவதும் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
அந்தப் பாராட்டுக்கள் அவர் மீதான அனுதாபத்திற்காகக் கிடைத்தவை அல்ல, ஒரு பெண்ணின் அசாத்தியமான மன உறுதிக்குக் கிடைத்த கௌரவம்.
கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பு
தமிழில் தர்மம், நம்பினார் கெடுவதில்லை, வசந்த ராகம், சின்ன தம்பி – பெரிய தம்பி, சின்னப் பூவே மெல்லப் பேசு எனப் பல படங்களில் நடித்தார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சத்யம், ஆதிபகவன், வேங்கை, சாமி 2 போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்தார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும் அவர் ஒரு ராணியாகவே வலம் வந்தார்.
குறிப்பாக ‘தெய்வம் தந்த வீடு’ தொடரில் அவர் ஏற்ற ‘சித்ரா தேவி’ கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மத்தியில் இன்றும் பேசப்படுகிறது.
பல நடனப் போட்டிகளில் நடுவராகவும் இருந்து வளரும் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
அமைதியைத் தேடும் சென்னை
ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் என உலகம் முழுவதும் கலைப் பயணம் மேற்கொண்டாலும், சுதா சந்திரனுக்கு மிகவும் பிடித்த நகரம் சென்னை தான்.
பிஸியான மும்பை வாழ்க்கைக்கு மத்தியில், சென்னை தரும் அமைதி தனக்கு அலாதியானது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
இன்று பல கோடி பெண்களுக்குத் தன்னம்பிக்கை அடையாளமாகத் திகழும் சுதா சந்திரன், “தடைகள் என்பவை நம்மை நிறுத்த அல்ல, நாம் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை உலகுக்குக் காட்டவே வருகின்றன” என்பதைத் தன் வாழ்நாள் பாடமாக நிரூபித்து வருகிறார்.
– நன்றி: பிம்பம் டிவி
#SudhaChandran #Inspiration #SuccessStory #Mayuri #DanceIcon #WomanPower #BimbamTV #Motivation #LifeStory #TamilCinema #JaipurFoot #Bravery #IndianActress #Bharatnatyam #SelfConfidence #ChennaiCity #NeverGiveUp