சிறார் குற்ற வழக்குகள்: விரைவான நீதி வேண்டும்!

நாடு முழுவதும் உள்ள 362 சிறார் நீதி வாரியங்களில் 2023, அக்டோபர் 31 நிலவரப்படி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் 55% தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக ‘இந்திய நீதி அறிக்கை’ என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் 21 மாநிலங்களிடம் இருந்து ஏறத்தாழ 250 மனுக்கள் வழியாக இந்தத் தரவுகள் பெறப்பட்டிருக்கின்றன.

நீதித் துறையின் நான்கு தூண்களாக விளங்கும் காவல் துறை, சிறைத் துறை, நீதிமன்றங்கள், சட்ட சேவை ஆகியவை சிறார் நலன் சார்ந்து செயல்படுவதில் உள்ள போதாமையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

18 வயதுக்கு உள்பட்ட சிறார், குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர்களை மற்றவர்களைப் போலச் சிறையில் அடைக்க முடியாது என்பதால் கூர்நோக்கு இல்லங்கள் அமைக்கப்பட்டன.

2012 நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் சிறார் என்பதால் அவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் சிறார் நீதி தொடர்பான சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் சிறார் நீதிச் சட்டம் (குழந்தைகள் பராமரிப்பு – பாதுகாப்பு) 2015 உருவாக்கப்பட்டது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறாரை விசாரித்து வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் ‘சிறார் நீதி வாரியங்கள்’ மாவட்டம்தோறும் அமைக்கப்பட வேண்டும் என அந்தச் சட்டம் பரிந்துரைத்தது.

சட்டம் அமலாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன பிறகும் சிறார் பலர் நீதி கிடைக்காமல் அவதிப்பட்டுவருவது ஆய்வுக்குரியது.

இந்தியாவில் உள்ள 765 மாவட்டங்களில் 92% சிறார் நீதி வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும் நீதி வழங்குதலில் பாரபட்சம் நிலவுகிறது. ஒடிஷாவில் மிக அதிகமாக 83% வழக்குகளும் கர்நாடகத்தில் 35% வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

நான்கில் ஒரு சிறார் நீதி வாரியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை முழுமையாக இல்லை என்கிறது ஆய்வறிக்கை. 30% சிறார் நீதி வாரியங்களில் சட்ட உதவி வழங்கும் ஏற்பாடுகள் இல்லை.

இதனால், ஒவ்வொரு சிறார் நீதி வாரியத்திலும் ஆண்டுதோறும் சராசரியாக 154 வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

தரவுகளை ஆவணப்படுத்துவதில் போதாமை, நிதிப்பற்றாக்குறை போன்றவையும் சிறாருக்கு நீதி கிடைப்பதை மேலும் சிக்கலாக்குகின்றன.

கொலை, பாலியல் வல்லுறவு போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார் 16 வயதைக் கடந்தவர்களாக இருந்தால், அவர்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகக் கருதி தண்டனை அளிப்பதைச் சிறார் நீதி வாரியங்கள்தான் முடிவுசெய்ய முடியும்.

2023 இந்தியக் குற்றத் தரவுகளின்படி இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு – உள்ளூர்ச் சட்டப் பிரிவுகளின் கீழ் 1,31,365 வழக்குகளில் 40,036 சிறார் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் நால்வரில் மூவருக்கு மேற்பட்டோர் 16 – 18 வயதுக்கு உள்பட்டவர்கள்.

சிறார் நீதி வாரியத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இவர்களைப் போன்றவர்களின் காத்திருப்பும் நீண்டதாக இருக்கிறது.

நீதி வழங்கும் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைவு இல்லாதிருப்பது, தரவுகளை ஆவணப்படுத்துவதில் மெத்தனம் போன்றவை சிறாருக்கான நீதியை மோசமாகப் பாதிக்கின்றன.

இவை அனைத்தையும் உடனடியாகக் களைவதோடு சிறார் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் சமரசமற்ற வகையில் செயலாற்ற வேண்டியது மத்திய மாநில அரசுகளின் தலையாய கடமை.

நன்றி: தி இந்து தமிழ் திசை

 
You might also like