வாழ்க்கை – சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல்!

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மறைந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அளித்த பதில்கள்.

கேள்வி:

நவீனக் கவிதை தனிமனித சுயம் சார்ந்த மையம் கொண்டே பெரும்பாலும் இயங்கி வந்துள்ள போது தமிழ், தமிழர் என ஒரு கூட்டுமையம் உங்கள் கவிதைகளில் உள்ளது.

’நான்’,’என்’ இருப்பது போலவே ’நாம்’’எம்’ போன்ற தன்னிலைகளும் உள்ளன. தனியொருவனின் வாழ்வனுபவம் என்பதைத் தாண்டி ஒரு கூட்டுவாழ்வே உங்களுக்கு முக்கியத்துவமுடையதாய்ப் படுகிறது எனலாமா?

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பதில்:

ஆம், புவிக்கோளகையில் எந்தவோர் உயிரினமும் தனித்திருப்பதில்லை. தனித்திருப்பதற்கு இனப்பெருக்கம் எதற்கு?

குடும்பம், குமுகம், உலகம் என்ற கூட்டமைப்பில் நான் என்பதற்கான இடம் பிறப்பிலும் இறப்பிலும் மட்டுமே ஓர் உடம்பில் பொருள்படுகிறது.

எனது வயது என்பது குறைந்த அளவில் ஐயாயிரம் ஆண்டுகள் என்று அறுதியிடப்படுகிறது.

இந்த மனிதவுலகின் வரலாறே எனது சொந்த உடம்பின் வரலாறாக இருக்கும்போது, இறப்பற்ற எனது மரபணுக்களின் மூலம் மரணமற்ற பெருவாழ்வில் நான் கட்டமைந்திருக்கிறேன்.

சுயம் என்ற இயங்கியல் மறுத்த அபெளதிகத்துக்குள் சுருக்கிக்கொள்ளும்போது பரிணாமமற்ற கவிதையியலைக் கண்டடைகிறோம். எழுத்து, சொல், பொருள்.

எழுத்து பலவாகும்போது சொல்லாகிறது, ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது என்னும்போது, சொற்களின் பெருக்கம் கவிதையாகிறது.

ஒரு கவிதை இறப்பற்ற பனுவலாகிப் பெருகுவதற்கு ஓயாத பொருள்கூறலுக்கு வழிவைத்திருத்தல் வேண்டும். கவிதை என்பது கூட்டுப் பிரக்ஞையின் விளைவு; அது தனி ஒரு நசிவில் உருவாவதில்லை.

சிறகிலிருந்து பிரிந்த இறகு காற்றின் தீராத பக்கங்களில் தன்னை உதிர்த்த பறவையின் வாழ்வோடு சேர்த்து தன்னையும் எழுதிச்செல்வதே பொருள் இயங்கியல்.

இப்படிமத்தை மொழியிலிருந்து ஒலி ஊடகத்திற்கு மாற்றி சிம்ஃபோனி இசைக்கோர்வையில் கட்டமைத்தால், பியானோவின் ஒலிக்கட்டைகள் மீது நடக்கும் புறாவைக் காணலாம்.

சொற்களின் பேரியக்கமே கவிதை முதலான மொழிக்கலை வடிவங்களைக் கட்டமைக்கிறது. காலந்தோறும் மாறி நின்று பொருளுரைப்பதே கவிதையின் இயங்கியல்.

விதைக்குள் காடு என்பதே உயிரியங்கியல். நான் என்பது ஒருமை எனச் சொல்வது மொழி இலக்கணம்; நான் என்பது ஒருமை இல்லை அது பன்மை எனச் சொல்வது சமூக இயங்கியல்.

வாழ்க்கை என்பது சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல். இதுவரையான இந்தப் பூமியின் மொத்தக் காலமும் மனித மூளைக்குள் சேகரமாகி இயங்கிக் கொண்டிருக்கிறது;

அது தனியுடம்பின் மண்டைக்குள் இருந்தாலும் உலகச் சமூகங்களின் தொகுக்கப்பட்ட அறிவுக் களஞ்சியமாக இருக்கிறது. மூளையால் உருவான எல்லாம் சமூக இயங்கியலின் கூட்டு விளைவே.

கேள்வி:

நாடக நிலத்தில் நடிகனின் மன உடலும், அதற்கு வெளியே இயங்கும் பொது உடலும் ஒன்றையொன்று சந்தித்துகொள்ளும் இடத்தில் நிகழ்வதென்ன?

இன்றைய நடிகனுள் சூல் கொள்ளும் நடிப்புக்கலையின் பாதைகள் எங்கெல்லாம் அலையுறுகின்றன, எங்கிருந்து எடுத்துக்கொள்ள முடியும்?

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பதில்:

நாடக நிலத்தில் நடிகரின் உடம்பு ஒரு பிரதியாகிறது; அது குறியீடுகளாகவும் உருவகங்களாகவும் பொருள்கொள்ளப்படுகிறது.

நடிகரின் உடம்பானது மேடையில் குவிந்திருக்கும் அரங்கப் பொருட்களில் உயிருள்ள ஒரு பொருள்.

ஒரு நடிகர் தன்னளவில் தன்னுடம்பிலிருந்து வெளியேறி நின்று அதன் அங்கங்களைத் தனித்தனியாகப் பிரித்துப்போட்டு வெவ்வேறு வடிவங்களில் கோர்த்து  அதன் இயல் ஒருமையைக் குலைக்கிறார்.

மேடைக்கு வெளியே ஒற்றைப் பொருள்கோளால் நிலைநிறுத்தப்பட்ட உடம்பு, மேடையில் தன்னை வெவ்வேறாகப் பொருள்கொள்ள அனுமதிக்கிறது. நிகழ்த்துப் பிரதிக்கேற்ப ஓர் உடம்பு ஒரு கலைப்பொருளாகிறது.

நிகழ்கலை மேடையில் கலைப்பொருளாகும் உடம்பு, போர்க்களத்தில் ஒரு கொலைக்கருவியாகிறது.

ஒரு சமூக உடம்பு தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து வெளியேறி, தன்னை வேறாக பொருள்படுத்துவது நிகழ்த்துக்கலைகளில் மட்டுமே சாத்தியப்படுகிறது. நடிக்கும் உடம்பு சமூக அதிகாரத்துடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது.

இயல்பில் ஒவ்வோர் உடம்பும் ஒரு புனைப்பனுவல். ஒவ்வொருவர் வாசிப்பிலும் வெவ்வேறாகப் பல்கிப்பெருகும் பனுவலுக்கு முற்றான ஒற்றை வாசிப்பு வரலாற்றில் ஒருபோதும் சாத்தியமில்லை.

சமூக அதிகாரம் உடம்பின் வாசிப்பை நேர்ப்படுத்தி வகைப்படுத்தி தனது அறிதலின் எல்லைக்குள் அடக்கிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

எனவே, நாடகமேடையில் இயங்கும் ஒரு பனுவல் ஒற்றைப் பொருள்கோளிலிருந்து நழுவி தனக்கான பன்மைத்துவத்தை ஆர்ப்பாட்டத்தோடு கத்திக் கதறித் தெரிவிக்கிறது.

யாரொருவராலும் எந்தவோர் உடம்பையும் அறுதியிட்டு வாசித்துப் பொருள்கொள்ள முடியாது. தனியுடம்பின் விடுதலையே ஒரு நிலப்பகுதியின் விடுதலை; நாடகமேடை என்பது விடுதலையடைந்த ஒரு நிலம்.

இந்திய விடுதலைப் போராட்டக்காலத்தில் அதிகாரத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தமிழ் நாடகவெளி ஒடுக்கப்பட்டது.

முன்கூட்டியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நாடகப்பிரதி, மேடையில் நிகழ்த்தப்படும்போது நடிகர்களின் உடல்மொழி புதிய பரிமாணங்களைப் பல்கிப்பெருக்கி பார்வையாளர்களுக்கு அதை வேறொன்றாகப் பொருள்படுத்தியது.

நிகழ்த்துக்கலைகள் பெரிதும் மொழியைச் சார்ந்து இயங்காமல் உடம்பைச் சார்ந்து இயங்குவதால்; அதிகாரத்தின் கண்காணிப்பு மொழிமேல் குவியும்போது நடிகரின் உடம்பு, பிரதியை வேறொரு தளத்திற்குக் கடத்திவிடுகிறது.

ஓர் உடம்பு மொழியின் அதிகாரத்தைக்கூட ஏமாற்றி பிரதியை வேறொன்றாகப் பொருள்படுத்திவிடும் தன்னிச்சையான இயக்கம்கொண்டது.

ஒரு நாடகத்தின் ஆசிரியர் பிரதி, இயக்குநர் பிரதி, நடிகர் பிரதி, இவை மூன்றும் வெவ்வேறாக இயங்கக்கூடிய சாத்தியமுள்ளவை.

நாடகவெளி எதற்குள்ளும் அடைபடுவதில்லை; அதற்குள் எந்தவொன்றும் அடைபடுவதுமில்லை. ஆக்டோபஸ்களின் நடனத்தின் உட்பொருள், ஐம்புலன்களின் ஐம்புலங்களின் விடுதலை.

– நன்றி: யாவரும்.காம்

 
You might also like