மரண தண்டனையால் குற்றங்கள் குறையுமா?

அக்டோபர் 10: உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் நாளில் உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள் (World Day Against the Death Penalty) கடைப்பிடிக்கப்படுகிறது.

2002-ம் ஆண்டு மே 13 அன்று ரோம் நகரில் கூடிய ‘மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு’ என்ற அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு, 2003-ம் ஆண்டு, அக்டோபர் 10 முதல், அக்டோபர் 10-ம் நாளில் மரண தண்டனை எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிப்பது என்று அறிவித்தது.

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர் வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்.

மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்து கொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும்.

மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும்.

அனைத்து நாடுகளிலும் கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது.

எனினும், கடுமையான குற்றம் எது? என்பது அந்தந்தச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத்தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன.

தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், கம்பத்தில் கட்டி வைத்துச் சுடுதல்,

கழுத்து வரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் என்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.

கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை.

இவை தவிர, அரசு சார்பான சமயங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றவையும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவை மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை.

ஐ.நா உறுப்பு நாடுகளும், ஐ.நா பார்வையாளர் தகுதியுடைய நாடுகளுமான 195 நாடுகளில், 90% நாடுகள் சர்வதேச மன்னிப்பு சபைப்படி இயங்குகின்றன.

இந்நாடுகளில், 100 நாடுகள் (51%) மரணதண்டனையை ஒழிக்க வேண்டுமென விரும்புகின்றன. 7 நாடுகள் (4%) விதிவிலக்கான சூழ்நிலைகளில் (அதாவது போர் நேரம் போன்ற) குற்றங்களைத் தடுக்க மரணதண்டனையை விரும்புகின்றன.

48 நாடுகள் (25%) சாதாரணக் குற்றங்களுக்காக மரணதண்டனைப் பயன்பாட்டை அனுமதிக்கின்றன. 40 நாடுகளின் (20%) சட்ட நடைமுறையில் இரண்டு மரண தண்டனைகளைப் பராமரிக்கின்றன.

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரசு சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவைகளின் கூட்டமைப்பாக, மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty) செயல்பட்டு வருகிறது.

இவ்வமைப்பானது, மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

மேலும் இவ்வமைப்பு, மரண தண்டனைக்கு எதிராக பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுகளின் ஆதரவைத் திரட்டல், பன்னாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்தியக் கூட்டுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

– தேனி மு.சுப்பிரமணி

நன்றி: கல்கி இதழ்

You might also like