மெல்லிசையோடு வில்லுப் பாட்டு இணைந்த தருணம்!

சுப்பு ஆறுமுகம் என்றதும் நினைவுக்கு வருவது வில்லிசை தான். தென் தமிழகத்தில் வில்லிசைக்குப் பெயர் போன கலைஞர்கள் பலர் இருந்தும், சுப்பு ஆறுமுகத்தின் சிறப்பு கலைவாணரின் தொடர்பில் உருவான உற்சாகத்தோடு பரவலாகக் கொண்டு சென்றவர்.

பாடல்கள் எழுதுவதற்கு கலைவாணாருடன் உடுமலை நாராயணகவிராயர், கதை விவாதத்திற்கு வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் உட்பட ஒரு பெருங்கூட்டமே இருந்தது.

சுப்பு ஆறுமுகம் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கு போது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அப்போது காந்தியைப் பற்றி அழகு தமிழில் சுப்பு ஆறுமுகம் பாடிய பாடல், என்.எஸ்.கேவை மெய் மறக்கச் செய்தது.

அன்றே 16 வயதான சுப்பு ஆறுமுகத்தின் தாயாரிடம் அனுமதி பெற்று, தனது நாடக கம்பெனிக்கு அழைத்துச் சென்றார் என்.எஸ்.கே.

கலைவாணரின் நாடக கம்பெனியில் வில்லுப்பாட்டுக் கலைஞராகவும், அவரது படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் பணியிலும் ஈடுபட்டார்.

அதோடு, வில்லுப்பாட்டை தொலைக்காட்சிகளிலும், மாநிலம் தாண்டியும் கொண்டு சென்றவர்.

அவ்வளவு வேகம் இருக்கும் அவருடைய பேச்சில். கடகடவென்று தட்டச்சு செய்கிற மாதிரியான வேகத்துடன் பேசும்போது எதிரே இருப்பவர்களின் கவனத்தைத் தன்னை நோக்கித் திருப்பிவிடுவார்.

காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என பலரது கதைகளையும் தனது வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் எளிமையான தமிழிலில் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்ந்தவர்.

கல்லூரிகள், பள்ளிகள், பொது நிகழ்ச்சிகளில் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களையும் இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தனது அழகு தமிழ் மற்றும் வில்லிசை கலந்து பாடி, மக்களை மனம் மயங்க வைத்தவர். கோயில்களிலும் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடியுள்ளார்.

40 ஆண்டுகளாக வில்லிசை உலகில் வலம் வந்த சுப்பு ஆறுமுகம், தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மீகம், தேச பக்தியை வளர்த்துள்ளார்.

1975-ம் ஆண்டு கலைமாமணி விருதும், 2005-ம் ஆண்டு சங்கீத நாடக அகடாமி விருதும், 2021-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, ‘மேஜர்’ சுந்தரராஜன் மற்றும் சுருளிராஜன் நடிப்பில் 1982-ல் வெளிவந்த ‘ஹிட்லர் உமாநாத்’ திரைப்படம் மேடைக் கலைநிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து, பாடல்களை கண்ணதாசன், வாலி மற்றும் சுப்பு ஆறுமுகம் எழுதியிருந்தனர்.

இதில் சுப்பு ஆறுமுகம் எழுதிய வில்லுப்பாட்டு ஒன்றுக்கு, மிகச்சிறப்பாகவும், வில்லுப்பாட்டு சப்தங்களை அழகாகவும் அமைத்திருந்தார் எம்.எஸ்.வி.

படம்: எம்எஸ்வியும் சுப்பு ஆறுமுகமும் இசையமைப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம்.

#எம்எஸ்வி #சுப்புஆறுமுகம் #வில்லிசைவேந்தர் #வில்லுப்பாட்டுகலைஞர் #கலைவாணர் #என்எஸ்கிருஷ்ணன் #villupattu #artistsubbuarumugam #subbuarumugam #villisaivendhar #msv

You might also like