மனநலம் என்பது, ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களைச் சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பது,
ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் ஆகியவை அந்நபருடைய உளவியல், உடலியல் வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதாகும்.
மகிழ்ச்சியாக வாழவும், நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும், பணியாற்றும் இடங்களிலும் சமூகத்திலும் செயலூக்கத்துடன் பங்கேற்கவும் உடல் நலம், மன நலம், சமூக சூழமைவு ஆகிய மூன்றும் சரியாக இருக்க வேண்டும்.
ஆனால், உலகில் ஏறக்குறைய 100 கோடி மக்கள் மனநலச் சிக்கலால் அவதியுறுகிறார்கள். ஆனால் இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் 30 சதவிகிதத்திற்கும் குறைவே.
குறைவான வருமானம் உள்ள நாடுகளில் மனநலச் சிக்கலோடு வாழும் 75 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதேயில்லை. ஒவ்வோர் ஆண்டும், போதை / மதுவினால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள்.
வாழ்வைச் சிக்கலுக்கு இட்டுச் செல்லும் மனநலப் பிரச்சினைகள் குறித்து உலகெங்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று ‘உலக மனநல நாள்’ உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருட்டு, வன்முறை, தீவிரவாத தாக்குதல், புயல், வெள்ளம், பூகம்பம், தீ மற்றும் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களும், குழந்தைகளையும் உறவினர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள பெற்றோரும் உற்றாரும் அதிர்ச்சியிலும் ஆற்றாமையிலும் உழல்வார்கள்.
அவ்வேளைகளில், பெரும்பாலும் குடும்பத்தினர், அண்டை வீட்டார், ஆசிரியர்கள் அல்லது யாரோ ஒருவர் அருகில் இருப்பார்கள்.
சில நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் வருவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இவர்கள் அளிக்கும் ‘உளவியல் முதல் உதவி’ காலத்தாற் செய்த உதவியாக மிகுந்த பலனளிக்கும்.
பாதுகாப்பு உணர்வு, மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது, உணர்வுரீதியான ஆதரவு, மனம் அமைதியடைவது, உள்ளிட்டவை தங்களைத் தாங்களே வலுப்படுத்தவும், ஆற்றல்களை மீட்டெடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
எனவே, மாணவர்களுக்கும், ஒவ்வொரு துறைசார் பணியாளர்களுக்கும் உளவியல் முதல் உதவி குறித்து அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது,
(1) மனிதாபிமானத்துடன் கூடிய ஆதரவும் அக்கறையும் காட்டுதல்
(2) உடனடித் தேவை என்ன என மதிப்பிடுதல்
(3) உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல்
(4) அவர்கள் பேசுவதைக் கேட்டல். ஆனால், பேசுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.
(5) மனம் அமைதியடைய உதவுதல்
(6) தேவையான தகவல்கள், சேவைகள், மற்றவர்களின் ஆதரவைப் பெற உதவுதல்
(7) கூடுதலாக, உடல்/மன காயம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்தல்
(8) பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, கண்ணியம், உரிமைகளை மதித்தல்.
உலக அளவில் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. 2017 நிலவரப்படி உலகில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒன்பதுமனநல மருத்துவர்களே இருப்பதாக ஜான் எஃப்லய்ன் தன் ஆய்வில் (2021) குறிப்பிட்டுள்ளார்.
அதிகபட்சமாக ஐரோப்பாவில் 50 பேர் இருப்பதாகவும், அமெரிக்காவில் 10.9, மேற்கு பசிபிக் நாடுகளில் 10, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் 7.7, ஆப்பிரிக்க நாடுகளில் 0.9, வங்கதேசம், பாக்கிஸ்தான், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் 2.5 பேர் மட்டுமே இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் கல்லூரிகளில் உளவியல் பாடப்பிரிவு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மாவட்ட அளவில் மனநல மருத்துவமனைகளும், தாலுகா அளவில் ஆற்றுப்படுத்தும் மையங்களும் தொடங்கப்பட வேண்டும்.
தொலைக்காட்சி வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் மனநலன் குறித்த தொடர் விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும்.
உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கியதே மனநலம். இது நமது சிந்தனை, உணர்வுகள், செயல்பாடு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைப் பருவம் தொடங்கி முதுமை வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மனநலம் முக்கியமானது.
பொருளாதாரம், உறவு, வறுமை, ஏமாற்றம், இயற்கை பேரழிவு, விபத்து, தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், உடல்நலக் குறைபாடு போன்ற வாழ்க்கை பிரச்சினைகளால் மனநலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மனம் விட்டு பேசுதல், தனக்கென நேரம் ஒதுக்குதல், மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல், இயற்கையோடு இணைந்திருத்தல் போன்றவை மனநலத்தை மேம்படுத்தும்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தன்னலமில்லா அன்பும், ஆதரவும், சகிப்புத்தன்மையும் மனநலம் பாதித்தவர்களை எளிதாக மீட்டு இயல்பு வாழ்வுக்கு திரும்பச் செய்யும்.
– எழுத்தாளர் சூ.ம.ஜெயசீலன்
நன்றி: இந்து தமிழ் திசை