கரூரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தும் அதைத் தொடர்ந்து பலியான 41 உயிர்களும் குறித்த வெவ்வேறு விசாரணைகள் இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கின்றன.
சமூக வலைத்தளங்கள் வெவ்வேறு எதிரெதிர் குற்றச்சாட்டுகளால் நிரம்பியிருக்கின்றன.
அதேசமயம் தேசிய அளவில் வெவ்வேறு கும்பமேளாக்களில், திருவிழாக்களில், நெரிசல் நிகழ்ந்து எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு சில சம்பவங்களையும் அப்போது நடந்த விசாரணைகளையும் இங்கே பார்ப்போம்.
***
1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி. அப்போது நடந்து கொண்டிருந்தது அதிமுக ஆட்சி.
கும்பகோணத்தில் மகாமகப் பெருவிழாவையொட்டி பெரும் கூட்டம் திரண்டிருந்தது. அதே மகாமக குளக்கரையில் தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கி குளக்கரையில் புனித நீராடினார் முதல்வர் ஜெயலலிதா.
எதிரே குளத்திற்குள்ளும் படிக்கட்டு சரிவுக்கிடையிலேயும் ஏகப்பட்ட கூட்டம் முண்டியடித்தது. தடியடிகள் நடந்தன. மக்கள் கூட்டம் சிதறி ஓடியது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு முதல்வர் அந்த குளக்கரை மீது ஏறி வெளியே வந்து கிளம்பிப் போனதும், இன்னும் நெரிசல் அதிகமாகி அப்போது, பலியானதாக சொல்லப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவல்கள் 48 பேர்.
இருந்தாலும் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாகவே அப்போதைய மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன.
அவ்வளவு பெருந்திரளான மக்கள் திரண்டு உருவான செயற்கையான நெரிசலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அருகில் உள்ள மண்டபங்களில் கிடத்தப்பட்டிருந்ததை அப்போது பத்திரிகையாளர்களால் பார்க்க முடிந்தது.
அந்த நெரிசலையும் உயிரிழப்புக் காட்சிகளையும் கும்பகோணத்தில் உள்ள சில ஸ்டூடியோக்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தி இருந்தன.
தேசத்தையே உலுக்கிய அந்தக் கோரமான விபத்திற்கும் உயிரிழப்புகளுக்கும் விசாரணை நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், அந்தக் கோரச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றது யார்? நடவடிக்கை எடுக்கப்பட்டது யார் மீது?
பக்தியின் காரணமாகவே அவ்வளவு திரளான மக்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து நெரிசலுக்கு உள்ளாகி உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த சூழலுக்கான அசலான பின்னணி என்ன என்பது இதுவரை விளக்கப்படவில்லை என்பதே உண்மை.
***
2017, ஜனவரி 17 தொடங்கி 22 வரை சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டை முன் வைத்து எந்தவிதமான பெரிய கட்சிகளின் பின்புலமும் இல்லாமல், லட்சக்கணக்கான இளைஞர்கள் கடற்கரையில் ஒன்றுகூடிப் போராடினார்கள்.
இங்கு மட்டுமல்ல கோவையிலும் மதுரையிலும் கூட இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.
தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொண்டு அவ்வளவு கட்டுப்பாடுகளுடன் இருந்த கூட்டத்தின் மீது காவல்துறை வன்முறையைப் பிரயோகித்து மக்களைச் சிதறி ஓடவைத்து, கடலுக்குள் எல்லாம் ஓட வைத்து, பாதுகாப்பு கொடுத்த மீனவர்களின் வீடுகளுக்குள் எல்லாம் காவல்துறை புகுந்து ரணகளமாக்கி எம் இளைஞர்கள் மீது கட்டுப்பாடற்ற வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அத்தகைய வன்முறைக்கு காரணமாக இருந்தவர்கள் யார்? யாருடைய தூண்டுதலின்பேரில் அந்த வன்முறை நிகழ்ந்தது?
அதற்கென்று ஒரு தனி ஆணையமே அமைக்கப்பட்டு விசாரணை எல்லாம் நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?
மக்கள் எந்தவிதமான சார்புகளோ, பின்னணியோ இல்லாமல், தங்களுடைய சொந்த முனைப்பில், குறிப்பிட்ட இலக்கோடு ஒன்றுசேர்ந்து போராட்டக் குரல் எழுப்பியதை அன்றைய ஆட்சியாளர்களால், ஏன் செரித்துக் கொள்ள முடியவில்லை?
மக்களை மந்தைகள் மாதிரி ஓர் இடத்தில், கூட்டம் என்கிற பேரில், அடைத்து காட்சிப்படுத்தும் மனோபாவம் உள்ளவர்களுக்கு மக்கள் தன்னிச்சையாக திரண்டால் எந்த அளவுக்கு உறுத்தும் என்பதற்கு உதாரணம் அன்றைக்கு சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை.
அந்த வன்முறைக்கான காரணம் இன்றுவரை புதிராக இருக்கிறது.
***
2018-ம் ஆண்டு மே 22. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவித்துக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மற்றும் அப்பகுதி சார்ந்த வெகு மக்கள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தபோது, மிகக் கொடுமையான முறையில், போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது காவல்துறை.
ஒரு இளம்பெண்ணின் வாய்க்குள் கூட குண்டு பாய்ந்திருந்தது. 13 பேர் போராட்டக் களத்திலேயே உயிரிழந்து போனார்கள். அதை எதிர்த்து அப்போது வெவ்வேறு இயக்கங்கள் குரலெழுப்பின. ஊடகங்கள் செய்தியாக்கின.
வழக்கம்போல அந்த அத்துமீறல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் அறிக்கையும் வெளிவந்துவிட்டது.
அதில் குறிப்பிடபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மாறாக, சிலருக்கு புரோமஷன் கிடைத்தது.
அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்டது யார்?
அன்றைக்கு இறந்துபோன உயிர்களுக்கு மதிப்பில்லையா?
***
2025, செப்டம்பர் 27. தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூருக்கு காலம் கடந்து வருவதற்குள் “செமையான கூட்டம்”.
ஏற்கனவே அரசால் ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவருடைய பிரச்சாரப் பேருந்து நுழைந்து அவர் பேசி முடித்து வெளியேறுவதற்குள் கூடுதலான நெரிசல் உருவாகி அடுத்தடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து 41 வரை போயிருக்கிறது.
விஜய்யின் பிரச்சாரப் பயணம் சென்னையில் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து நேரலை செய்த பல தொலைக்காட்சி நிறுவனங்கள் கரூர் கூட்ட நெரிசலில், குழந்தைகள், பெண்கள் என்று அடுத்தடுத்து சிலர் உயிரிழந்த செய்திகள் வர ஆரம்பித்ததுமே தொலைக்காட்சி செய்திகள் முழுக்க சோகமயமாக மாறின.
அன்று நள்ளிரவில், மருத்துவமனைகளுக்குக் கொண்டு போகப்பட்ட உடல்களை காட்சிப்பதிவுகளாக தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் கண்கலங்கிப் போனார்கள்.
தேசிய, மாநிலத் தலைவர்கள் பலரும் கரூருக்கு வந்து ஆறுதல் சொன்னார்கள். செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
குறிப்பிட்ட சிலர் மட்டுமே நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார்கள். பல உண்மையறியும் குழுக்கள் கூடிக்கொண்டிருக்கின்றன.
தேசிய மற்றும் மாநில அரசியலில் மிக முக்கியமான இடத்தை கரூர் விபத்து உருவாக்கியிருக்கிறது என்றாலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் போகும் இடங்களுக்கு பெருமளவு கூட்டம் தன்னிச்சையாக திரள்வது காவல்துறைக்கும் குறிப்பாக உளவுத் துறைக்கும் நன்றாக தெரிந்திருந்தும் கரூர் வேலுச்சாமி புரத்தில், அருகில் சாக்கடை குழிகள் நிறைந்த நெரிசலான இடத்தில் இத்தகைய பெருந்திரள் கூட்டத்தை நடத்துவதற்கு எப்படித் தேர்வு செய்து கொடுத்தார்கள்?
கூட்டத்தின் ஒழுங்கு குலைந்ததற்கு யார்தான் காரணம்?
கூட்டத்தில் சில விஷமிகள் புகுந்து செயற்கையான நெருக்கடியை உருவாக்கி இருக்கிறார்கள் என்கின்ற தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை தரப்பிலான பதில்தான் என்ன?
கரூர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் நமக்கு உணர்த்தியிருக்கும் பாடங்கள்தான் என்ன?
தற்போது விசாரணை ஆணையமும், சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தாலும் அசலான உண்மை சம்பந்தப்பட்ட இடத்தில் கூடியிருந்த மக்களிடமே இருக்கிறது.
ஆணையங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேள்வி கேட்கிறவர்கள் இதே கட்டுரையை மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்கள் தொடர்பாக எத்தகைய விசாரணை நடந்து, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? என்பதையும் கூடவே பரிசீலித்துப் பார்க்கட்டும்.
– மணா