தணல் – அதர்வா வசீகரிக்கிறாரா?

ஆக்‌ஷன் படங்களுக்கான கதை பக்கம் பக்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஹீரோ – வில்லன் பாத்திர வார்ப்பு, ஹீரோயிசம் காட்டுவதற்கான காரணம், வில்லத்தனத்தின் பின்னணி, இதர பாத்திரங்களின் தன்மை, இவற்றினூடே சமகாலப் பிரச்சனையின் தாக்கம் இருந்தாலே போதும்; அந்த கதையோடு எளிதாக ரசிகர்கள் ஒன்றிவிடுவார்கள்.

ஷங்கர், தரணி, ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பல இயக்குனர்கள் தந்த ‘ஆக்‌ஷன் படங்கள்’ அப்படித்தான் இருந்திருக்கின்றன.

கிட்டத்தட்ட அந்த பாணியில் அமைந்த படமாகத் ‘தணல்’ தந்திருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா.

அதர்வா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் லாவண்யா திரிபாதி நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் குழந்தை பெற்றெடுத்தார். இதிலிருந்தே, இப்படம் முழுமையாகத் தயாராகிச் சில காலம் காத்திருப்பில் இருந்ததை அறிய முடியும்.

அந்த கால இடைவெளியை மீறி, நம்மை ஈர்க்கிறதா ‘தணல்’?

‘தணல்’ கதை!

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் சுட்டுத் தள்ள, அவர்கள் அனைவரையும் குறி வைத்துக் கொலை செய்கிறார் ஒரு நபர்.

ஓராண்டுக்குப் பிறகு, சில நபர்களைச் சேர்த்துக்கொண்டு பாதாளச் சாக்கடைக்குள் நுழைந்து சில பணிகளை மேற்கொள்கிறார். குடிசைப்பகுதியில் வசித்தவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டித் தரப்படுவதாகக் கூறி அங்கிருந்தவர்களை அரசு அப்புறப்படுத்த, காலியாக உள்ள அந்த பகுதிக்குள் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் இருக்கத் தொடங்குகின்றனர்.

சென்னை நகரத்தின் பாதாளச் சாக்கடை அமைப்பு, காவல் நிலையங்கள், வங்கிகள் எனப் பல விவரங்கள் அவரது கையிலிருக்கும் வரைபடத்தில் இருக்கின்றன.

அதுவே, குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவர்கள் ஏதோ ஒரு குற்றத்தில் ஈடுபடுவதைச் சொல்லிவிடுகின்றன.

ஒரு நாள் நள்ளிரவில் திட்டமிட்டவாறு குற்றத்தை நிகழ்த்த முனைகிறார் அந்த நபர்.

அந்த நள்ளிரவில், ஆறு இளைஞர்கள் அந்த குடிசைப்பகுதிக்குள் நுழைய நேரிடுகிறது. அவர்கள் அனைவரும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த காவலர்கள்.

பகல் முழுக்க ‘ஜாய்னிங் லெட்டர்’ தராமல் இழுத்தடிக்கிறார் காவல் ஆய்வாளர். இரவானதும் அவர்கள் கிளம்பத் தயாராக, ‘எங்க போறீங்க? நைட் ரவுண்ட்ஸ் போக வேண்டியிருக்கும்’ என்று அவர்களை காவல்நிலையத்தில் இருக்க வைக்கிறார் சார்பு ஆய்வாளர்.

இரவு உணவை முடித்துக்கொண்டு அவர்கள் சாலையில் ‘சும்மா’ நடந்து வரும்போது, பாதாளச்சாக்கடையில் இருந்து ஒரு நபர் எழுந்து வெளியே வருவதைப் பார்க்கின்றனர்.

அவரைத் துரத்திச் சென்றவர்கள் அந்த குடிசைப்பகுதிக்குள் நுழைகின்றனர்.

பாதாளச் சாக்கடையைப் பயன்படுத்தி குற்றம் செய்யத் திட்டமிட்ட நபரை அவர்கள் சந்திக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த காவலர்களை ஒவ்வொருவருவராகக் கொல்லத் தொடங்குகிறார் அந்த நபர்.

அந்த மர்ம நபர் என்ன செய்யப் போகிறார்? அவர் செய்யப் போகிற குற்றம் எத்தகையது? ஏன் அதனைச் செய்கிறார்? அதனைத் தடுக்கப் போவது எப்படி?

இதையெல்லாம் அந்த ஆறு காவலர்களில் ஒருவர் யோசிக்கிறார்; அதற்கேற்பச் செயல்படுகிறார்.

அவர்தான் ‘நாயகன்’ என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. வில்லனின் ‘மூவ்’களை அவர் உடைத்தெறிவார் என்பதையும் குறிப்பிட வேண்டியதில்லை.

‘சிட்டிக்கு மத்தியில ’க்ளோஸ்’ பண்ணியிருக்குற ஏரியாவுல எப்படி ஒரு வருஷமா யார் கண்ணுலயும் படாம வாழ முடியும்’, ‘அப்படியெல்லாம் ஈஸியா எல்லோரலயும் பாதாளச் சாக்கடைக்குள்ள இறங்கிட முடியுமா’ என்பது போன்ற கமெண்ட்கள் தொடங்கி இக்கதையின் முக்கியத் திருப்பங்கள் வரை பலவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியும். அவற்றில் லாஜிக் மீறல்கள் அனேகம்.

அதையும் மீறி, திரையில் ‘ஆக்‌ஷன்’ அனுபவத்தை ஊட்டுவதற்கான அத்தனை தகுதிகளும் ‘தணல்’ படத்திற்கு உண்டு.

அதேநேரத்தில், எதையெல்லாம் திரையில் சொல்லலாம், எதனைத் தவிர்க்கலாம் என்ற சந்தேகமும் நிறையவே எழும். அந்த சந்தேகங்களுக்குப் பதில்களைக் கண்டறிவதில் நிறையவே திணறியிருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா.

அதனால், படத்திலுள்ள பாத்திரங்கள், அவற்றின் உணர்வுக் கொந்தளிப்புகள், கதைத் திருப்பங்கள், அதன் பின்னணி ஆகியவற்றை விளக்க நிறையவே ‘டைம்’ எடுத்துக் கொள்கிறது முன்பாதி.

அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, ’கிளைமேக்ஸ்’ நோக்கி நகர்கிறது பின்பாதி,

அந்த ‘கதை சொல்லல்’ பிடித்தால் ‘தணல்’ உங்களை வசீகரிக்கும்..!

வசீகரிக்கிற திருப்பங்கள்..!

ஆக்‌ஷன் கதைகளில் எளிதாகப் பொருந்திக் கொள்கிற நடிப்பைக் கொண்டிருக்கிறார் அதர்வா. அது பலனளிக்கிறது என்பது வேறு விஷயம். அதனைத் தாண்டி, அவரது திறனை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளை இயக்குனர்கள் வழங்குவதில்லை. இப்படமும் அப்படியே உள்ளது.

நாயகி லாவண்யா திரிபாதி ‘லவ்வபிள்’ளாக திரையில் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட பாத்திர வார்ப்பை அவரது தோற்றம் நியாயப்படுத்தவில்லை.

வில்லனாக வரும் அஸ்வின், சில படங்களில் நாயகனாக நடித்தவர். அதுவே, அவருக்கு இதில் ‘பிளாஷ்பேக்’ உண்டு எனச் சொல்லிவிடுகிறது.

அந்த ‘பிளாஷ்பேக்’ சித்திரங்களாக வருவதும், அவரது பாத்திரத்தை நியாயப்படுத்துவதற்கான விஷயங்கள் வசனங்களில் இடம்பெற்றிருப்பதும் சட்டென்று நம்மைக் கடந்து செல்கின்றன.

முன்பாதியில் வரும் பரணி, ஷரா, பரத் மற்றும் புதுமுகம் சர்வா சம்பந்தப்பட்ட காட்சிகள் லேசாகச் சிரிக்க வைக்கின்றன. இவர்களோடு அழகம்பெருமாள், சோனியா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, செல்வா, போஸ் வெங்கட் எனப் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஒரே படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து வகைமை காட்சிகளையும் திணிக்க வேண்டுமென்று முற்பட்டிருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா.

அந்த ‘பழைய’ ஸ்டைல் காட்சியாக்கம் மற்றும் காட்சியமைப்பு, ஒரு சிறப்பான ‘ஆக்‌ஷன் பட’ அனுபவத்தின் செறிவைச் சிதைத்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல், அஸ்வின் சொல்கிற பிளாஷ்பேக் ‘காவிரி நதிநீர் பிரச்சனை’யை எதிர்கொண்டு வரும் ‘டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வைச் சுட்டிக் காட்டுகின்றன. அதனாலோ என்னவோ, அப்பிரச்சனை சரிவரத் திரையில் சொல்லப்படவில்லை.

பல பாத்திரங்கள், காட்சிகள், பின்னணி தகவல்கள் வெட்டி எறியப்பட்டிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.

அதையும் மீறிச் சில திருப்பங்கள், ஆக்‌ஷன் காட்சிகள் நம்மை வசீகரிக்கின்றன. மிகச்சில திருப்பங்கள் நாம் எதிர்பார்த்தாற் போலவே இருந்தாலும் ஈர்க்கின்றன. அதற்காக இயக்குனர் ரவீந்திர மாதவாவைப் பாராட்டத்தான் வேண்டும்.

லாஜிக் மீறல்கள் சார்ந்த கேள்விகளைத் தாண்டி, இயக்குனர் விரும்பிய உலகத்தைக் காட்டக் கலை இயக்குனர் அய்யப்பன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், படத்தொகுப்பாளர் கலைவாணன் மற்றும் ஒலி வடிவமைப்பு எனப் பல துறைகளில் பணியாற்றிய கலைஞர்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் தன்மையை நமக்குச் சரியாகக் கடத்த உதவியிருக்கிறது. பரபரப்பைப் பன்மடங்காக்கி இருக்கிறது.

சுமார் பதினைந்து அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘தணல்’ வெளியாகியிருந்தால் ‘அனல்’ பறக்கும் வெற்றி கிடைத்திருக்கும். இப்போதுள்ள உள்ளடக்கம் ட்ரெண்டுக்கு தக்கவாறு இல்லை என்று சொல்லிவிட முடியாது; அதேநேரத்தில், போதுமான அளவுக்கு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்லலாம்.

தற்போதிருக்கும் ‘ஆக்‌ஷன் பட’ ட்ரெண்டுக்கு ஏற்ப, ‘தணல்’ படத்தை வேறு மொழிகளில் ‘ரீமேக்’ செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like