அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!

ஆகஸ்ட் – 25:  விஜயகாந்தின் 73வது பிறந்ததினம்

தனித்துவமான குணங்கள், பண்புகள், இயல்புகள் இல்லாத எவரும் பிரபலம் ஆகவே முடியாது. பெயர், பணம், புகழ், அந்தஸ்தில் உயர்ந்த நிலையை அடைபவர்கள் மட்டுமல்லாமல், காலமெல்லாம் சிலரது நினைவுகளில் வீற்றிருக்கவும் அவர்கள் என்றென்றும் போற்றவும் வாழ்கிற எவரையும் அந்த வரிசையில் இருத்தலாம்.

திரைத்துறையைப் பொறுத்தவரை அப்படியொரு மனிதராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் விஜயகாந்த்.

அவரது தனிப்பட்ட குணாதிசயங்களே முதல் பட வாய்ப்பில் தொடங்கி அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தது வரை பல்வேறு காலகட்டங்களில் அவரைத் தனித்து தெரிய வைத்தன.

எண்ணத்தில் தெளிவு;

பத்தாம் வகுப்பு வரை படிப்பு. சொந்தமாக அரிசி ஆலை. குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு. இப்படியொரு சூழலில் இருக்கிற எந்தவொரு மனிதரும் தன்னுடைய கனவை அடையும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஆனால், சிறு வயது முதலே எம்.ஜி.ஆரை ஆதர்சமாகக் கொண்ட காரணத்தால் ‘சினிமா மோகம்’ கொண்டு சென்னைக்கு வந்தார் விஜயகாந்த்.

இனிக்கும் இளமை, அகல் விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ என்று நடித்தவரைத் தனியே அடையாளம் காட்டியது ‘தூரத்து இடிமுழக்கம்’.

அதன்பிறகு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரனின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ அவரை ரசிகர்களின் மனதில் ‘விஜய்’யாக நிலைநிறுத்தியது.

அதன்பிறகு பல படங்களில் அதே பாத்திரப் பெயரில் விஜயகாந்த் தோன்றினார். இடைவெளியில்லாமல் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதற்கு முன்னதாக, ‘முரட்டுக்காளை’யில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிற வாய்ப்பு விஜயகாந்தைத் தேடி வந்தது.

கருப்பு நிறம். ஸ்டைலான தலை முடி. கவர்ந்திழுக்கும் கண்கள். வசீகரத் தோற்றம்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரஜினிக்கு பெரிதாக ‘டஃப்’ கொடுப்பதாக விஜயகாந்தின் பங்களிப்பு அதில் அமைந்திருக்கக் கூடும். ஆனால், அதனால் நண்பனின் ‘நாயகன் கனவு’ நசிந்துவிடக் கூடாது என்று பதைபதைத்தார் இப்ராஹிம் ராவுத்தர்.

‘ஹீரோ வாய்ப்பு வரும் வரை காத்திருப்போம்’ என்று விஜயகாந்தைத் தடுத்தார்.

அதன்பிறகு, விஜயகாந்தின் மூளையாகவே இப்ராஹிம் மாறினார் என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவர்களது நட்பு அமைந்தது.

அப்போதிருந்த நட்சத்திரங்கள் பொறாமைப்படுகிற அளவுக்கு அந்தப் பிணைப்பு இருந்ததுதான் ஆச்சர்யம். காரணம், அந்த காலகட்டத்தில் விஜயகாந்த் அடைந்த பெருமுன்னேற்றம்.

எண்ணத்தில் தெளிவு இருந்ததாலேயே அது சாத்தியமானது.

போலவே, தனது முடிவில் உறுதியாக நிற்கிற குணமும் விஜயகாந்திடம் அளப்பரிய அளவில் இருப்பதாகச் சொல்கின்றனர் அவருடன் பழகிய திரையுலகினர்.

எடுத்த முடிவில் உறுதி!

ஒரு திரைப்படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்பதைப் பல முறை யோசிக்கிற விஜயகாந்த், அவ்வாறு ஒப்புக்கொண்ட படத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்யச் சொன்னதாக இதுவரை ஒரு படைப்பாளி கூடச் சொன்னதில்லை.

வாகை சந்திரசேகர் சொன்ன ஒரே காரணத்திற்காக, ‘ஊமை விழிகள்’ படத்திற்கு முன்னதாக ஆபாவாணன் குழுவினரைச் சந்தித்திருக்கிறார்.

அதுவரை விஜயகாந்த் சந்தித்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், கதை வசனகர்த்தாக்களிடம் இருந்து பெருமளவில் வேறுபட்டு காட்சியளித்திருக்கிறது அந்த யூனிட்.

காரணம், அவர்கள் அனைவருமே திரைப்படக் கல்லூரியில் பயின்ற வெப்பத்தோடு திரைப்பட ஆக்கத்தில் இறங்கியவர்கள்.

அந்தச் சூழல் விஜயகாந்திற்கு கொஞ்சமும் ஒத்துவரவில்லை. ஆனால், அம்மாணவர்களிடம் இருந்த வேட்கை அவருக்குப் பிடித்திருந்தது.

அவர்கள் என்ன சொன்னார்களோ, அப்படியே திரையில் வந்து போனார். அதன் விளைவைக் கண்டு பாலிவுட் கூடப் பதற்றமடைந்தது வரலாறு.

திருமணமே ஆகாத ஒரு நட்சத்திர நாயகன், அந்த படத்தில் நரைமுடி கொண்ட ஒரு நடுத்தர வயது போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்கெல்லாம் பெருந்துணிச்சல் வேண்டும்.

‘இமேஜ்’ குறித்த கவலை துளியும் இல்லாமல் இருக்க வேண்டும்.

’அப்படியெல்லாம் கூட விஜயகாந்த் யோசித்திருப்பாரா’ என்று நினைக்கும் அளவுக்கு அப்படத்தில் அவரது இருப்பு அமைந்திருக்கும். அதுதான் விஜயகாந்த்.

அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிட்டால், அவர்கள் ‘மிகப்பத்திரமாக’ இருப்பார்கள் என்பதே திரையுலகினரின் கருத்து.

புதிய விஷயங்களை ஏற்பதில் அவருக்கு எந்த அளவுக்குத் தயக்கம் உண்டோ, அதே அளவுக்கு அதற்கு ஒப்புக்கொடுத்து உழைப்பதிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.

‘என்னைய ரொம்ப ஆட வைக்காத பிரபு’ என்று பிரபுதேவாவிடம் உரிமையாகப் பேசுகிற விஜயகாந்த், ‘பரதன்’ படத்தில் இயக்குநர் சபாபதியும் அவரும் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலுக்காகப் பத்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.

நடனம் நன்றாகத் தெரிந்த பானுப்ரியா உடன் அதில் அவர் ஆடியிருப்பார்.

‘சின்னப்பசங்க ஆசைப்படுறாங்க’ என்று தனக்கேயுரிய புன்னகையுடன் அந்நாட்களில் அவர் கேமிரா முன்னே நின்றிருக்கக் கூடும். ஆனால், அந்தப் பாடல் இன்றும் ‘ப்ரெஷ்’ஷாக இருக்க விஜயகாந்தின் அந்த அர்ப்பணிப்புதான் காரணம்.

அசாத்திய துணிச்சல்:

சினிமாவில் கேமிராவுக்கு முன்னே பத்து ஸ்டண்ட் கலைஞர்களை அடித்துக் காற்றில் பறக்க விடுவது பெரிய விஷயமல்ல. ‘சினிமா’ என்கிற கலை அந்த மாயாஜாலத்தை எளிதில் நிகழ்த்திவிடும்.

ஆனால், நிஜ வாழ்க்கையிலும் அந்தளவுக்கு ‘அசாத்திய துணிச்சலை’க் கொண்டவர் விஜயகாந்த் என்கின்றனர் அவரை நேரில் கண்டவர்கள்.

ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பில் நடிகர் செந்தில் உடன் தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டிருந்த சிலரை ஓட ஓடத் துரத்தியடித்தாராம் விஜயகாந்த்.

அவரது நண்பரான வாகை சந்திரசேகர் ஒரு பேட்டியில் பகிர்ந்த தகவல் இது.

படப்பிடிப்பு முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புகையில், சென்னை அசோக் நகர் அருகே மது போதையில் ஒரு நபரை அரிவாளால் வெட்டத் துரத்தியிருக்கிறார் ஒரு மனிதர்.

காரில் இருந்து இறங்கி அந்த மனிதரை ஒற்றையாளாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார் விஜயகாந்த். இது, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னது.

இன்னும் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது இதே ரகத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் சில இருக்கின்றன.

தன்னைக் குறித்த பயம் துளியும் இல்லாதவரிடத்தில் மட்டுமே இக்குணாதிசயத்தைக் காண முடியும். இச்சம்பவங்கள் அனைத்துமே பிறருக்காக அவர் வேட்டியை மடித்துக் கட்டியவை தான்.

உதவும் மனப்பாங்கு:

பெரிய பட்ஜெட்டில் தயாராகிற பெரும் நட்சத்திரங்களின் படப்பிடிப்புகளில் உணவுகள் பொட்டலம் கட்டித் தரப்பட்ட நாட்களில், தன்னைப் போன்ற நடிகர் நடிகையர், இயக்குநர் சாப்பிடுகிற உணவையே அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிமாற வேண்டுமென்ற நிலையை உருவாக்கியவர் விஜயகாந்த்.

‘என்னங்க சும்மா சாப்பாடு போட்டார்னு பேசுறீங்க’ என்பவர்கள் நேரில் ஏதேனும் ஒரு படப்பிடிப்பைக் கண்டால், அதில் பங்கேற்றால் இவ்வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

அதன் பின்னே இருப்பது ‘அனைவரும் சமம்’ என்கிற மனப்பாங்கைப் புரிந்துகொள்ள முடியும்.

இதே போல நண்பர்களுக்காக அவர் உதவி செய்கிற குணமும் பெரிய அளவில் இன்று சிலாகிக்கப்படுகிறது. ‘செந்தூரப்பாண்டி’யில் விஜய்யின் சகோதரராக விஜயகாந்த் தோன்றியது அப்படியொன்று.

அது குறித்துப் பேசுவதற்காக எஸ்.ஏ.சந்திரசேகரன் போன் செய்தபோது, ‘நான் நேர்ல வர்றதுதான் சரி’ என்று அவரது வீடு தேடி வந்திருக்கிறார் விஜயகாந்த். திரையுலகில் தனக்கு முகவரி தந்தவருக்குச் செய்கிற நன்றிக்கடனாக, அதனை அவர் நினைத்திருக்கலாம்.

சரத்குமாருக்காக ‘தாய்மொழி’ படத்தை விட்டுக்கொடுத்தது, ’பெரியண்ணா’வில் சூர்யா உடன் நடித்தது எனப் பல உதாரணங்கள் இந்த வரிசையில் சேரும்.

தன் வீட்டின் அருகே இருந்த சுந்தர்.சியின் அலுவலகத்தில் வேலை செய்த சிங்கம்புலி, ஒருமுறை விஜயகாந்தின் பார்வையில் பட்டிருக்கிறார்.

அப்போது, அவரது ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் பணியை அவர் செய்திருக்கிறார்.

‘வா நீயும் ஒரு போட்டோ எடுத்துக்க’ என்ற விஜயகாந்திடம் ‘நான் உங்களை வச்சு படம் தான் எடுப்பேன்’ என்றாராம் சிங்கம்புலி.

‘ரெட்’ படத்திற்குப் பிறகு ‘மாயாவி’யை இயக்கியபோது, அவரிடம் ஒருநாள் கால்ஷீட் கேட்டு சென்றிருக்கிறார்.

அப்போது, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா. புரடியூசர் தாணு ஒரு புது டைரக்டரை அனுப்பி வைக்கறதா சொல்லியிருந்தார். அவரை பார்த்துட்டு உன்கிட்ட பேசுறேன்’ என்றாராம் விஜயகாந்த்.

அப்போது, ‘அந்த டைரக்டர் நான் தான்’ என்றாராம் சிங்கம்புலி. அதில் நடிக்கவா, வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்த விஜயகாந்தை அந்த வார்த்தைகள் தடம் மாற்றியிருக்கின்றன. அந்த மனமாற்றத்தை வேறொருவரிடம் நம்மால் எதிர்பார்க்க இயலாது. அதுதான் விஜயகாந்த்.

திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.

ஆர்.கே.செல்வமணி போன்ற எண்ணற்ற படைப்பாளிகளை ரசிகர்கள் கொண்டாட அந்த மனப்பாங்குதான் வழியமைத்திருக்கிறது.

தோல்விகளை மட்டுமே கண்டபோதும் கூட மனம் கலங்காமல் துணிந்து செயல்படுகிற ஆற்றல் கூட ஒருகட்டத்தில் வெற்றியைத் தானாகத் தேடி வரச் செய்யும்.

வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, வானத்தைப் போல என்று பல படங்கள் அப்படிப்பட்ட வெற்றிகளை அவருக்குத் தந்திருக்கின்றன.

படப்பிடிப்புத்தளம் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் அவர் கைக்கொண்டிருந்த எளிமை, சக கலைஞர்களிடத்தில் அவர் செய்த குறும்பு விளையாட்டுகள், மூத்தவர்களிடத்தில் காட்டிய மரியாதை,

அனைவரையும் பாதுகாத்துப் போற்றுகிற பண்பு, அறியாமையைப் புறந்தள்ளுகிற பண்பு, எதிர்க்குரல் கொண்டவர்களிடமும் வெளிப்படுத்திய இணக்கம் என்று விஜயகாந்த் கொண்டிருந்த ‘தனித்துவங்களை’ ஒரு பட்டியலே இடலாம்.

அவையனைத்தும் தன்னிடத்தே இருப்பதாக, இன்று ஒருவரால் ‘போலியாக’ப் பாவனை கூட செய்ய முடியாது. அதற்கே நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

தன்னை வருத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

அந்த ‘வித்தியாசங்கள்’தான் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் அல்லாதவர்களும் கூட அவரைப் புகழக் காரணமாக இருக்கிறது.

விஜயகாந்தின் தனித்துவங்களில் சிலவற்றைக் கைக்கொண்டால் கூடப் புகழுச்சியில் ஏற முடியும் என்பதே அவர் சக மனிதர்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் சேதி.

– மாபா 

You might also like