அவிழ்க்கக் கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்?

‘அவிழ்க்கக் கூடிய முடிச்சுகளை அறுக்க வேண்டாம்’ என்பது புகழ்பெற்ற ஒரு பொன்மொழி.

அவிழ்க்கக்கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்? கயறு துண்டாகி வீணாகிப் போகுமே.

ஆனால், ‘கோர்டியன் முடிச்சுகளை துண்டாடத்தான் வேண்டும்’ இப்படியும் ஒரு சொல்லாடல் இருக்கிறது.

அது என்ன கோர்டியன் முடிச்சு?

கி.மு. 333ஆம் ஆண்டு. மன்னர் அலெக்சாண்டர் சிற்றாசியாவுக்கு வருகிறார். இந்தக்கால துருக்கியில் உள்ள அந்தக் காலத்து கோர்டியம் பகுதியில் உள்ள பிர்ஜியா நகரத்துக்கு அவர் வருகை தருகிறார்.

அந்த பிர்ஜியா நகரத்தில் உலகின் மிகப்பழமையான சவாலான கோர்டியன் முடிச்சு அவரை வரவேற்கிறது.

வேறு ஒன்றுமில்லை. ஒரு பழங்கால மாட்டுவண்டியின் நுகத்தடியில் போடப்பட்ட கயிற்று முடிச்சு அது. அந்த முடிச்சை யார் அவிழ்க்கிறாரோ அவர் ஆசியா கண்டத்தை ஆள முடியும் என்பது அந்தக்காலத்து ஐதீகம்.

மத நம்பிக்கை, ஆழ்ந்த அரசியல், இந்த இரண்டுடன் பின்னிப்பிணைந்த மிகச்சவாலான இடியாப்பச் சிக்கல் மிக்க முடிச்சு அது. அந்த மாபெரும் முடிச்சை அவிழ்க்க முயன்று தோற்றவர்கள் பலர்.

அந்த கயிற்றின் அடி எங்கிருக்கிறது, நுனி எங்கிருக்கிறது என்பதே தெரியாது.

அந்த கோர்டியன் சவால் என்பது உடல்திறன் சார்ந்த புதிர் அல்ல. ஒருவரின் தெய்வீக அருளுக்கும், ஞானத்துக்குமான சோதனை அது.

ஆழ்ந்த பொறுமை, தன்னுள்ளே பார்க்கும் பார்வை எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் பேரருள் இருந்தால்தான் கோர்டியன் முடிச்சை அவிழ்க்க முடியும் என்பது அந்தகால நம்பிக்கை.

அலெக்சாண்டர் அந்த முடிச்சைப் பார்த்தார். அவருக்கு பாரம்பரியங்கள் மீது அவ்வளவு பெரிய பற்றுதல் எதுவும் இல்லை. பொறுமையும் இல்லை.

மற்றவர்களைப் போல பொறுமையாக ஆறஅமர அவர் கோர்டியன் முடிச்சை அவிழ்க்க முயற்சிக்கவில்லை.

அவர் வேறுவிதமான ஓர் அணுகுமுறையைக் கையாண்டார். வாளை உருவினார். ஒரே வெட்டு. கோர்டியன் முடிச்சு இரண்டு துண்டுகளானது.

அலெக்சாண்டரின் படையினர் அவரது செயலை ஒரு வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அலெக்சாண்டர் செய்த செயல், ஒரு துணிகர தலைமைப்பண்பின் நேரடி செயல்முறை விளக்கமாக, ஓர் அதிரடி செயல்பாடாக அவரது படையினருக்கு இருந்தது.

ஆனால், கோர்டியன் முடிச்சை காலமெல்லாம் காவல் காத்து வந்த மதத் துறவிகளுக்கும், அந்தப் பகுதி ஆட்சியாளர்களுக்கும் அலெக்சாண்டரின் செயல் அதிர்ச்சியாக இருந்தது.

கோர்டியன் சவால் என்பது முரட்டுபலம் தொடர்பானது அல்ல. அறிவுக்கூர்மை முழு முயற்சியால் தீர்க்க வேண்டிய ஒரு புதிர் அது.

அது தீர்க்கப்பட வேண்டிய புதிர். அழிக்கப்பட வேண்டிய புதிர் அல்ல.

அலெக்சாண்டர் கோர்டியன் முடிச்சை வெட்டித் துண்டித்தது அறிவின் பாற்பட்டதல்ல. அது பாரம்பரியத்தை நிராகரிக்கும் செயல். உடனடி முடிவுகள் வேண்டி ஒரு புனிதத்தன்மையை அடியோடு உருக்குலைத்த செயல்.

இப்படித்தான் அந்தப்பகுதி துறவிகள் அதைப் பார்த்தார்கள்.

ஆனால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதுபோல, கோர்டியன் முடிச்சை துண்டிக்க வேண்டும் என்பது அலெக்சாண்டரின் அணுகுமுறையாக இருந்தது.

தனது விதி என்ன என்பதை முடிவுசெய்ய விதிக்காக அலெக்சாண்டர் காத்திருக்கவில்லை. அவர் தனது விதியை வாள்வலிமை மூலம் தானே பறித்துக் கொண்டார்.

அலெக்சாண்டர் செய்தது சரிதானா? அவர் ஒரு சவாலை உரியமுறையில் சரியாக எதிர்கொள்ள மறுத்தாரா? அவர் சீரியதொரு முடிவை எடுத்தாரா? அல்லது குறுக்குப் பாய்ச்சலில் அந்த விடுகதையை முடித்தாரா?

இன்றும்கூட அந்த கேள்வி இருக்கிறது.

நம்மூர் அரசியல் தலைவர்கள். அவர்கள் அலெக்சாண்டரை விட மிகப்பெரியவர்கள்.

அவிழ்க்கக் கூடிய முடிச்சுகளைக்கூட அவர்கள் அறுத்தெறிந்து விட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கைதட்டவும் நிறைய கூட்டம் இருக்கிறது.

நமது வாழ்க்கையிலும் கூட நிறைய அரசியல் முடிச்சுகள் குறுக்கிடுகின்றன. அவற்றில் அவிழ்க்க வேண்டிய முடிச்சுகளை அவிழ்த்து, கோர்டியன் முடிச்சுகளை வெட்டி, துணித்து, துண்டித்து, தடித்து போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

– மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like