காத்திருப்புதான் எழுத்தாளன் முன்னுள்ள பெரிய சவால்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அனுபவம்

நான் எழுத ஆரம்பித்த காலத்தில் ஒரு சிறுகதை பத்திரிகையில் வெளியாகக் குறைந்தபட்சம் ஆறுமாதம் அல்லது ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும். கதை வெளியான போதும் ஓர் எதிர்வினையும் இருக்காது. படித்தேன் என்றுகூட எவரும் சொல்ல மாட்டார்கள்.
 
மூத்த எழுத்தாளர்களிடம் இருந்து பாராட்டுக் கிடைப்பது எளிதானதில்லை. காத்திருப்புதான் எழுத்தாளனின் முன்னுள்ள பெரிய சவால். அதை எதிர்கொண்டுதான் இன்று எனக்கான அடையாளத்தைப் பெற்றிருக்கிறேன்.
 
ஆனால் இன்று ஓர் இளம் எழுத்தாளன் தன் முதற்கதையை எழுதியவுடன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறான். அடுத்தநாளே படித்து விட்டீர்களா எனப் பாராட்டினை எதிர்பார்க்கிறான்.
 
கதையும் உடனே ஏதாவது ஓர் இதழில், இணையத்தில் வெளியாகி விடுகிறது. அடுத்த நாள் எனக்கு ஏன் சாகித்ய அகாதமி விருது தர மறுக்கிறார்கள். என் படைப்புகள் குறித்து எதுவும் பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறான். சண்டை போடுகிறான். வேடிக்கையாக இருக்கிறது.
 
பேஸ்புக்கில் லைக் வாங்குவது போல எளிமையான விஷயமாக இலக்கியத்தை நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஒரு கதை எழுதிய உடனே என் வாசகர்கள் என்று ஒருவன் பேச ஆரம்பித்துவிடும் துணிச்சல் ஆபத்தானது.
 
மிகச்சிறந்த கதைகளை, கவிதைகளை எழுதிவிட்டு அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ நல்ல படைப்பாளிகள் மௌனமாக இருக்கிறார்கள்.
 
ஆனால் இணையத்தின் வருகை எழுத்தாளர் என்ற சொல்லின் மரியாதையை மிகவும் மலினமாக்கிவிட்டது.
 
இன்று நிறையப் புதியவர்கள் எழுத வருவது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் தான் எழுதியது மட்டுமே சிறப்பானது, தன் முன்னோடிகள் ஒன்றுமில்லை என்று அதிகாரமாக நடந்து கொள்கிறவரை என்ன செய்வது.
 
சென்ற ஆண்டு யாவரும் பதிப்பகம் பத்து இளம்படைப்பாளிகளின் புத்தகத்தை வெளியிட்டது. பத்து பேரையும் படித்து அவர்களைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன்.
 
அதில் ஒருவரைக்கூட எனக்கு முன்பரிச்சயம் கிடையாது. ஆனால் அவர்கள் படைப்பின் வழியேதான் அறிந்துகொண்டேன். இப்படி நான் எழுத வந்த காலத்தில் நடக்கவில்லை.
 
என் சிறுகதை ஒன்றுக்கு சுந்தர ராமசாமி வாசகர் கடிதம் ஒன்றை சுபமங்களாவிற்கு அனுப்பி வைத்தார். அந்த நாளில் அது பெரிய அங்கீகாரம்.
 
இன்று அப்படியில்லை. நல்ல எழுத்து தேடிப் படித்து உடனே அங்கீகரிக்கப்படுகிறது.
 
தமிழில் இன்று விருது பெறாத எழுத்தாளரைக் காண்பதுதான் அபூர்வம். அவ்வளவு விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன.
 
இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைப் படிக்க வேண்டும். ஓவியம், இசை, நுண்கலைகள் எனப் பரந்த ஆர்வத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எழுத்தைத் தீவிரமாக எடிட் செய்து மேம்படுத்த வேண்டும்.
 
கதையில் வரும் தகவல்களைத் துல்லியமாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இசைக் கலைஞர்கள் எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் தினமும் சாதகம் செய்வது வழக்கம். அது எழுத்தாளர்களுக்கும் தேவையானதுதான்.
 
அடுத்தவரின் பாராட்டிற்காக மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள். அது போலவே எழுத ஆரம்பித்தவர்கள் எதற்காக எழுதுகிறேன், எதை எழுத விரும்புகிறேன் என்பதைத் தானே தேடி கண்டறிய வேண்டும். விரும்புவதை எல்லாம் எழுத்தில் கொண்டுவருவது எளிதில்லை.
 
தற்கொலை, விலைமாதர்கள், குற்றம் இந்த மூன்றைப் பற்றியே இளம் எழுத்தாளன் கதை எழுத ஆசைப்படுகிறான். இந்த மூன்றையும் எழுதுவது எளிதானதில்லை.
 
ஆனால் இதன் கவர்ச்சி அவனை எழுதத் தூண்டுகிறது என்கிறார் ஆன்டன் செகாவ். இதைச் சொல்லி நூறு வருஷங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இந்த ஆர்வம் மாறிவிடவில்லை.
 
இன்றைக்கும் நான் புதிய கதை எழுதும் முன்பு கவிஞர் தேவதச்சனிடம் அது குறித்துப் பேசுகிறேன். அவர் எனது கதைகள் கட்டுரைகளை வாசித்துத் தீவிர எதிர்வினை செய்து வருகிறார்.
 
இப்படியான ஆசான் உங்களுக்குத் தேவை. மாஸ்டர் இல்லாமல் நீங்கள் உருவாக முடியாது. யார் உங்கள் ஆசான் என்பது உங்களின் தேர்வு.
 
நேரடியாக இப்படி உங்களுக்கு வழிகாட்டும் எழுத்தாளரைப் போல, உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளரையும் உங்கள் வழிகாட்டியாகக் கொள்ளுங்கள்.
 
நான் ரஷ்ய எழுத்தாளர்களை அப்படி என்னுடைய மானசீக ஆசிரியர்களாக நினைக்கிறேன்.
 
ஒவ்வோர் ஆட்டத்திலும் டெண்டுல்கர் சதம் அடித்துவிடுவதில்லையே. சில ஆட்டங்களில் அவரும் முதல்பந்தில் அவுட்டாகியிருக்கிறார்.
 
அப்படித்தான் எழுத்தும். உங்களிடம் சிறந்த ஒன்றை எதிர்பார்ப்பது வாசகர்களின் விருப்பம்.
 
எல்லா நேரமும் அதை உங்களால் நிறைவேற்ற முடியாது என்பதே நிஜம். உங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள்.
 
வாசகர்கள் புத்திசாலிகள். நிறைய விஷயங்களை நுட்பமாக அறிந்தவர்கள். அவர்கள் உங்களை எளிதாக அங்கீகரித்துவிட மாட்டார்கள். ஆனால் உங்களை அங்கீகரித்து விட்டால் எளிதாக மறக்க மாட்டார்கள்.
 
எழுதும்போது பாதியில் நின்று விடுவதும், எழுத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதும் தீராத பிரச்சனைகள். இதற்குக் குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. வாசிப்புதான் இதற்கான வழிகாட்டி.
 
சிறந்த கதைகளை, கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருந்தால் புதிய உத்வேகம் கிடைத்துவிடும்.
 
எஸ்.ரா. பக்கம் – இணையத்திலிருந்து…
You might also like