பிரபலங்களைத் தனித்துவப்படுத்தும் குணாதிசயங்கள்!

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாகச் சிலர் இருப்பார்கள். மனதுக்குப் பிடித்தமானவர்களாக, உற்சாகம் கொப்பளிக்கச் செய்பவர்களாக, வழிகாட்டிகளாக, ரத்த உறவுக்கு இணையானவர்களாக, குருமார்களாக, தெய்வங்களாகக் காட்சியளிப்பார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் சம்பந்தப்பட்ட மனிதர்களுடன் நேரடியான நட்போ, உறவோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

கேள்வி ஞானத்தின் வழியே, அவர்களது வாழ்வில் புதிய பாடங்களைக் கற்றுக் கொடுப்பார்கள். எந்தவிதத்திலும் சம்பந்தமில்லை என்ற நிலை இருந்தாலும், அவர்கள் மீதான ‘பிடித்தம்’ கொஞ்சமும் குறையாது.

அந்த விஷயங்களே ஒருவரைப் பிரபலமாக நீடிக்கச் செய்வதாக இருக்கும். காலம் பல கடந்தும் அவரைப் போற்றக் காரணமாக இருக்கும்.

பிரபலங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்துகிற அந்தச் சில அம்சங்கள், அவர் மீது ஈர்ப்பைக் கொள்கிறவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வர்த்தகம், விளையாட்டு, அரசியல், சமூகம், கலை, எழுத்து எனப் பல துறைகளில் இருக்கும் பிரபலங்களை இதற்கு உதாரணம் காட்டலாம்.

புகழ் வெளிச்சமும் பெரும் எதிர்பார்ப்பும் சுமையாக அழுத்துகையில், தொடர்ந்து முன்னேறிச் செல்கிற பாங்கைச் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களிடம் அவர்கள் விளையாடிய காலத்தில் நாம் கண்டிருக்கிறோம்.

அந்தத் தலைமுறையில் அதனைக் கற்றுக்கொண்டு தம்மை மேம்படுத்தியவர்கள் பலர் இருப்பார்கள்.

எளிமை, நேர்மை, உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல பண்புகள் குறிப்பிட்ட பிரபலங்களை அவர்களது ரசிகர்கள் உற்றுநோக்கச் செய்திருக்கின்றன.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களால் அத்தகவல்கள் பகிரப்படுகிறபோது, அந்தத் தாக்கம் பெரியளவில் நிகழ்வதுண்டு.

நம்மூரைப் பொறுத்தவரை, திரையுலகப் பிரபலங்கள் சாதாரண மக்களிடம் வெகுசாதாரணமாகத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். காரணம், அந்தக் கலையின் வீச்சு அப்படி.

தெருக்கூத்து, நாட்டியம், நாடகங்களை ரசித்த காலத்திலேயே இது உண்டு என்றபோதும், சுமார் 80 ஆண்டுகால சினிமா ரசனையை உற்றுநோக்கினால் இதனைத் தெள்ளத் தெளிவாகக் காண முடியும்.

ராஜு முருகன் இயக்கிய ‘குக்கூ’ படத்தில் எம்ஜிஆர் போல வேடமிட்ட ஒரு நடிகர், நிகழ்ச்சி முடிந்தபிறகும் குறிப்பிட்ட பிரபலத்தின் தாக்கத்திலேயே இருப்பதாக ஒரு காட்சி உண்டு.

அதில், கஷ்டத்தில் இருக்கும் நாயகனைக் கண்டதும் தன் கையில் இருந்த ஒரு பொருளைக் கொடுத்து உதவும் அப்பாத்திரம்.

எம்ஜிஆரின் ‘கொடுக்கும்’ குணம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்பட்ட விஷயங்களின் சாராம்சமாக, அவற்றின் திரையுருவாக இருக்கும் அந்த ஷாட்.

சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையைச் சிலாகித்துப் பல பிரபலங்கள் பேட்டி தந்திருக்கின்றனர். அவற்றைத் தொகுத்தால், பல பாகங்களாகப் புத்தகங்கள் வெளியிடலாம்.

அவற்றுள் ஒன்றாக இருந்தது, இயக்குனர் பாரதி கண்ணன் சமீபத்தில் தந்த பேட்டி. அதில் தான் உதவி இயக்குனராக இருந்தபோது நேரில் கண்டதைப் பகிர்ந்திருந்தார்.

ஒரு படப்பிடிப்பின்போது, மரத்திற்குப் பின்னிருந்து ட்ராலி நகர்கிற மாதிரியான காட்சி. அதுவும் பாடல் காட்சியில் பின்னணி இசைக்குப் பிறகு வரிகள் வருகிற மாதிரியானதொரு ஷாட்.

மரத்திற்குப் பின்னே கேமிரா வந்தபோது, அருகில் இருந்த உதவியாளரை அதட்டிக் கொண்டிருந்தாராம் சிவாஜி. அடுத்து அவரைக் காட்டுகிற வகையில் சில நொடிகளில் கேமிரா நகர்ந்தபோது, பாடல் வரியை உச்சரித்தவாறே அவர் நடித்து முடித்தாராம்.

செய்யும் தொழிலைக் கனகச்சிதமாகப் புரிந்து வைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படிச் சாத்தியப்படுத்திக் காட்டுகிற திறமையும் தன்னம்பிக்கையும் சிவாஜியின் தனித்துவங்களில் சில.

’இந்தப் படம் ஓடாது’ என்று தனது அனுபவத்தில் இருந்து திரள்கிற கணிப்பையும் மீறி, சில படங்களில் சிவாஜி நடித்ததாக அப்பேட்டியில் கூறியிருந்தார் பாரதி கண்ணன்.

“நேரடியாகச் சம்பந்தப்பட்ட சிலரிடம் அதனைத் தெரிவித்தபிறகும் கூட, கேமிரா முன்னே அவர் வெளிப்படுத்துகிற நடிப்பில் கொஞ்சம் கூட ‘அலட்சியம்’ இருக்காது. ஒரு வெற்றிப்படத்தில் என்ன உழைப்பைத் தந்தாரோ, அதே போன்றுதான் நடிப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

சில நேரங்களில் தகுதியும் திறமையும் கொண்ட கலைஞர்கள் பலர் ஒருகட்டத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியோடு நின்றுவிடுவதுண்டு. மிகச்சிலர் தொடர்ந்து ஏற்றங்களைக் கண்டு வருவதுண்டு.

அதற்கான காரணங்களாகவும் அவர்களது தனிப்பட்ட குணாதிசயங்களே திகழ்கின்றன. எந்தவொரு பிரபலம் குறித்துச் சிந்தித்துப் பார்த்தாலும், அதனைக் கண்டுணர முடியும்.

சிலரிடத்தில் ‘சக மனிதருக்குக் கொடுக்கிற சரியான மரியாதை’ தென்படும். சிலரிடத்தில் இருக்கிற வெளிப்படைக்குணம், எதிரியையும் கைகுலுக்கச் செய்யும்விதமாக இருக்கும்.

நன்றி செலுத்துகிற குணம் சிலரைப் பெருந்துன்பத்திலும் காத்து நிற்கும். செய்யும் தொழிலைப் போற்றுகிற பாங்கு தொடர்ந்து ஒருவரைக் களத்தில் இருக்கச் செய்யும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்’ என்ற பாடல் வரிகள் ஒரு ‘பால பாடம்’.

’நம்மைக் காக்கும் என்ற எதிர்பார்ப்பு சிறிதும் இல்லாமல் எந்த உதவியையும் செய்யத் தயாராக இருப்பவர் தலைக்கு மலை போலத் தீங்கு வந்தாலும் அது பனி போல விலகிவிடும்’ என்பது ஆன்மிகரீதியாகச் சிலர் அப்பாடலுக்குச் சொல்கிற விளக்கம்.

யதார்த்தத்திலும் அப்படிச் சில மனிதர்கள் இருந்திருக்கின்றனர்; இப்போதும் உள்ளனர் என்பதுவே உண்மை.

சமீபத்தில் திரையாளுமை சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியொன்றில், பாரதிராஜாவின் ‘நன்றி’ செலுத்தும் குணத்தைக் கண்டு தான் வியந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா.

தனக்கு ஆரம்பகாலத்தில் வாய்ப்பளித்தவர்களை, கைபிடித்து தூக்கிவிட்டவர்களை, பாராட்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல உதவியவர்களை மனதார நினைத்து, இன்றும் தினமும் அவர் ‘நன்றி’ சொல்லி வருவதாகக் கூறியிருந்தார்.

எவ்வளவு ஆச்சர்யகரமான தகவல் இது.

‘நன்றி சொல்லுதல்’ செயல்முறை (gratitude practice) என்பதனைத் தமது முன்னேற்றத்திற்காகவும் மனநலச் செயல்பாட்டிற்காகவும் பெருநகரங்களில் சிலர் குழுக்களாக இணைந்து பயன்படுத்தி வருகின்றனர். அதன் இன்னொரு வடிவம் தான் அது.

புதிதாக வருகிற கலைஞர்களை, அவர்களது படைப்புகளைப் பாராட்டுவதை ஒரு கடமையாக நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் பாரதிராஜா கொண்டிருப்பதாகவும் அப்பேட்டியில் சுப்பிரமணிய சிவா தெரிவித்திருந்தார். அதுவும் சாதாரண விஷயமல்ல.

‘தான் எப்படிச் செயல்பட்டு வருகிறோம்’, ‘எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்’, ‘அப்படிப் பயணித்து வெற்றி கிட்டும்போது எப்படி இருப்போம்’ என்பதனைத் தினமும் காலையில் நான்கரை மணிக்கு முன்னே எழுந்து யோசித்து வந்ததாக, ஒரு மேடையில் கூறினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

உதவி இயக்குநராக இருப்பதற்கு முன்னர் தோன்றிய அந்தப் பழக்கத்தை இன்று வரையிலும் அவர் கடைப்பிடித்து வருகிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.

ஒவ்வொரு பிரபலத்தின் பேட்டியிலும், அவர்கள் வியந்து நோக்கிய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிற வகையில் சில விஷயங்கள் இருக்கும். மொத்தமாக நோக்கினால், அவற்றில் இருந்து ரசிகர்கள் கற்றுக்கொள்ளச் சில விஷயங்கள் கிடைக்கும்.

பிரபலங்களைக் கண்மூடித்தனமாக ஆராதித்து, சமூகவலைதளங்களில் கம்பும் வாளும் வேலும் சுற்றுவதைக் காட்டிலும், மிகப் பயனுள்ள வழிமுறையாக அது இருக்கும்.

உங்களுக்குப் பிடித்தமான சில பிரபலங்களை வரிசைப்படுத்துங்கள்; உங்களுக்குத் தெரிந்த, அவர்களது தனித்துவமான அம்சங்களையும் வரிசைப்படுத்துங்கள்.

நிச்சயமாக, அவற்றில் இருந்து ’தனித்துவங்களை’ மட்டும் தனியே பட்டியலிடலாம். அவற்றைத் தொகுத்தால், நம் வாழ்வுக்கான சில பயனுள்ள வழிகாட்டுதல்களைக் கண்டடைய முடியும்!

  • மாபா
You might also like