சதாசிவ பண்டாரத்தார்: தமிழ் வரலாற்றின் வெளிச்சம்!

ஆதித்த கரிகாலசோழன் படுகொலை மர்மத்தை உடைத்த காட்டுமன்னார்கோயில் – உடையார்குடி கல்வெட்டை கண்டறிந்து தமிழ் உலகிற்கு தந்தவர்.

ஆயிரக்கணக்கில் பழந்தமிழ் கல்வெட்டுகளை நேரடியாகப் படித்து ஆராய்ந்தவர். சோழ மன்னர்களின் முழுமையான வரலாறுகளை எழுதி வெளியிட்ட முன்னவர்.

வீரசோழப் பேரரசு மீண்டெழ வழிவகுத்த திருப்புறம்பியம் பெரும்போர் என வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும், அதி முக்கிய வரலாற்றுப் போர் நடந்த திருப்புறம்பியம் கிராமத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

1910-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தெளிந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வட்டாட்சியர் அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றினார்.

பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழ் ஆசிரியர் பணி. 1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது.

“ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் உண்மை வரலாறு அதன் தாய்மொழியிலேயே எழுதப்படுதல் அவசியம்” என்கிற கருத்தை உறுதியாகக் கொண்டிருந்த பண்டாரத்தார், தனது நோக்கத்தை நிறைவேற்றிடும் கனவை சுமந்து, தன் வாழ்நாள் முழுமையையும் இதற்காகவே அர்ப்பணித்தார்.

அதுவே தான் கொண்ட கொள்கையில் எவ்வளவு அறமும் நெறியும் ஒழுக அவர் வாழ்ந்திருந்தார் என்பதற்கு தக்க சான்று.

வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், ஆராய்ச்சி பேரறிஞர் திருப்புறம்பியம் சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் 133-ம் ஆண்டு அவதாரத் திருநாள் ஆகஸ்ட் 15.

You might also like