ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தூய்மைப் பணியாளர்கள் என்கிற சொல்லாடல் அண்மைக் காலத்தில் அதிகளவுக்கு ஊடகங்களில் கையாளப்பட்ட அல்லது கையாளப்பட்டு வரும் சொல்லாடலாக இருந்து வருகிறது.
அண்மையில், சென்னை மாநகராட்சிக்கு அருகில் பதிமூன்று நாட்களாகத் தொடர்ந்து போராடிய தூய்மைப் பணியாளர்களை நீதிமன்றம் அப்புறப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டது.
காவல்துறையினரும் அதிரடியாகக் களத்தில் இறங்கிப் போராடிய தொழிலாளர்களை, முக்கியமாக பெண்களை நடத்திய விதத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்துப் பலரும் அதிர்ச்சியடைந்து போனார்கள்.
போராடியதற்கு இதுதான் கூலியா என்று அந்த ஊழியர்கள் பகிரங்கமாகவே கோவப்பட்டார்கள்.
ஆனாலும், தமிழகத்தின் தலைநகரிலேயே இப்படிப்பட்ட தாக்குதல் நடந்தும் அந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடிய மக்களுக்காக நின்ற அமைப்புகள் குறைவுதான்.
பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆணைக்குப்பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மதுரை உள்ளிட்ட மற்ற மாநகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களும் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
சென்னை, மதுரை என்று போராட்டக் குரல்கள் தொடர்ந்தாலும் போராடுகிறவர்கள் முன்வைக்கிற கோரிக்கைகளின் மையம்தான் என்ன?
மாநகராட்சி ஊழியர்களாக இதுவரை பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களை சட்டென்று தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக மாற்றுவதையும் அவர்களுக்கு இதுவரை கிடைத்துவந்த ஊதியத்தைவிட குறைந்த ஊதியம் கொடுக்கப்படுவதையும் எதிர்த்துதான் இந்தப் போராட்டமே நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களைப் பெரும் கார்ப்ரேட் முதலாளிகளிடம் – அதாவது தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்தவர்கள்தான், தற்போது தமிழகத்தை உள்ளாட்சி அமைப்பின் முக்கியமான செயல் மையமாகத் திகழும் தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப் பெரும் முயற்சி எடுக்கிறார்கள்.
சென்னையிலும், மதுரையிலும் இப்படித் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
போராடிய தூய்மைப் பணியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கிய தமிழக அரசு இதுவரை ஏன் மாநகராட்சியின் முக்கியப் பொறுப்பைத் தனியார் வசம் ஒப்படைத்தது ஏன் என்பதை விளக்கவே இல்லை.
இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, தனியார்மயமாக இருந்த பல துறைகள் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட்டன.
அதன்மூலம் தனியார் மயத்தின் செயல்பாடுகளின் மீது, ஒருவிதமான கட்டுப்பாடு நிலவியது.
அதையடுத்து ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, உள்ளாட்சிகளுக்கான அதிகாரங்களை அதிகப்படுத்தி அவற்றை பலப்படுத்தும் விதத்தில் “பஞ்சாய்த்து ராஜ்” சட்டத்தை அமல்படுத்தினார்.
அதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகள் மேலும் வலிமை பெற்று, நிதி வழங்கப்பட்டு புத்துயிர்ப்புடன் இயங்கின.
மாநகராட்சியிலிருந்து கிராமப் பஞ்சாயத்து வரைக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உயிர்பெற்றன.
அப்படி அதிகாரங்கள் வழங்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் முக்கியமான ஒரு அங்கமாக செயல்பட்டவைதான் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகள்.
அதுவரை நீண்டகாலமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில் அதிகாரிகள் வசம்தான் உள்ளாட்சி அமைப்புகள் இயங்கின.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட பிறகுதான் மக்களுக்கான பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் இடம்பெற்றார்கள்.
அப்படி இடம்பெற்றவர்கள் மேயர் உள்ளிட்ட பொறுப்புகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்குள் நுழைந்து செயல்பட ஆரம்பித்தவர்கள் மக்கள் நலனை அல்லவா முன்னிறுத்தி இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் அதே மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இயல்பானபடி தந்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்காமல், எங்கிருந்தோ வணிக நோக்கத்துடன் உள்ளே நுழைய முற்படும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு சேவையாற்றுவதா உள்ளாட்சி அமைப்புகளின் வேலை?
இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும், போராடிய எளிய மக்கள் கொடுமையாகத் தாக்கப்பட்ட பிறகும், தனியார் மயமாக்கல் பற்றி இங்குள்ளவர்கள் ஏன் பேச மறுக்கிறார்கள்?
மத்திய அரசு மாபெரும் கார்ப்ரேட் கம்பெனிகளை ஆதரித்து வெளிப்படையாக இயங்குகிறது என்பதற்காக மாநிலத்திலும் அதே பாணியை கடைப்பிடிக்கலாமா?
நிலைமை இப்படியே தொடர்ந்தால், உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகம் என்பதற்கான அர்த்தம்தான் என்ன?
– யூகி