புத்தனின் அரிவாள்: சிந்தனையைக் கூர்தீட்டும் கவிதைகள்!

நூல் அறிமுகம் :
 
வாசித்தவுடன் யாருக்காவது இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்க வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும். அப்படியான எண்ணம் நான்கைந்து கவிதைகள் வாசிக்கையிலேயே தோன்றியது. முழுத் தொகுப்பையும் வாசித்து முடித்தபிறகு யாரிடமாவது இதுகுறித்துப் பேச வேண்டும் என்று தோன்றியது.
 
‘புத்தனின் அரிவாள்’ என்ற தலைப்பைக் காட்டிலும் உள்ளிருக்கும் ஒவ்வொரு கவிதையும் மிகக் கூர்மையானதாக இருக்கிறது.
 
எளிமையான சொல்லாட்சி; தேர்ந்த எழுத்து நடை; ஈராயிரமாண்டு அரசியல் முதல் இந்தாண்டு அரசியல் வரை கவிதைகளில் காணக் கிடைக்கின்றன.
 
படிக்கும் போதே அடடா! என்று வியக்க வைக்கிறது பல கவிதைகள்.
 
 
சில கவிதைகள் உங்களுக்காக இதோ:

 

வெள்ளாமை:

“எத்தனை வேலி கதிர்களை அறுத்தன
எங்கள் கதிர்அரிவாள்கள்
ஆனாலும் நிறையவில்லை
வரலாற்றின் அரைப்படி”
 
*****
 
புத்தனை அணிதல்:
 
வயல் தலைமாட்டுக் கருவேலத்தில் கட்டியிருக்கும் தொட்டிலில்
அழுகிறது பாற்குடல்
பாலூட்டக் கெஞ்சுகிறாள் தாய்க்காரி
“செத்த நாழி கழிச்சி போவலாம்
போயி பட்டத்தை மூட்டு”
முகம் திருப்புகிறான் மணியக்காரன்
தொட்டிலில் சத்தம் ஓயவில்லை
மலையெனக் கனக்கும் மார்புகளை
சோளி ஒதுக்கி நிலத்தில் பீய்ச்சுகிறாள்
தூர் கட்டிய பயிர்கள்
பால்கதிர்களாய்க் கக்கியிருக்கின்றன அறுவடைக்குப் பின்பு
உம்பளச்சேரி மாடுகள் திணற
வண்டிகள்
மூட்டை மூட்டையாக ஏற்றிப்போகின்றன
அவளின் முலைப் பாலை”
 
***** 
 
அவள் அக்குளில் கசியும்
வியர்வையில் நனைகிறான்
ததும்பும் மார்பகங்களின் மீதமர்ந்து
தியானிக்கிறான்
கொப்பூழ்ப் பள்ளத்தில்
கமலம் பறிக்கிறான்
பின்புற அசைவில்
குலுங்கிச் சிரிக்கிறான்
கைக்குட்டையால் முகம் துடைக்கும்போது
செவ்வுதடுகளில் முத்தமிடுகிறான்
நடக்கையில் புறங்கால்களை
மெல்ல வருடிக்கொடுக்கிறான்
கைப்பையில் கமழும்
ஒப்பனைப் பொருட்களின் நறுமணத்தில்
ஒய்யாரமாய் லயித்திருக்கிறான்
இன்னும் எங்கெல்லாம்
அவள் அவனை அணிந்திருக்கிறாளோ
அது அவளும் அவனும் மட்டுமே
அறிந்த ரகசியம்
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு
யசோதரையின் சாபத்தை
இப்படியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறான் அவன்”
 

***** 

நவீனக் கழிப்பறை:

ஒரு மாதத்திற்கு முன்
நவீனக் கட்டணக் கழிப்பிடத்தின்
கழிப்பறையொன்றின் பிளாஸ்டிக் கதவில்
நிர்வாணமாக வரையப்பட்டிருக்கிறாள்
ஒரு பெண்
இரண்டு வாரங்களுக்குமுன்
அப்பெண்ணின் குறி
சிகரெட்டால்
சுட்டுத் துளையிடப்பட்டிருக்கிறது
இன்று
அத்துளையிலிருந்து வழிகிறது
இந்திரியக் கோடு”
 
– பாரத் தமிழ் 
 
நூல்: புத்தனின் அரிவாள்
ஆசிரியர்: அ.நிலாதரன் 
கொம்பு பதிப்பகம்
பக்கங்கள் : 100 
விலை: ரூ. 100/-
தொடர்புக்கு: 9952326742
You might also like