நூல் அறிமுகம் :
ஊர் ஊராகச் சென்று தெருக் கூத்து நடத்தி, பிழைப்பு நடத்தும் ஓர் எளிய கலைஞனின் மகளான அல்லிப் பாவை, மனதளவில், உடலளவில் படும் வாதைகளை மையப் படுத்திய புதினம் ‘வதைமுகம்’.
கதைநாயகி படும் உடல் மற்றும் மன வதைகளைச் சித்தரிக்கும் நோக்கத்தில் இப்புனைவு அமைந்திருந்தாலும், பொதுவுடைமை சித்தாந்த களப்போராளிகளின் வாழ்க்கைத் துயரங்கள், அவர்கள் குடும்பத்தார் படும் வாதைகள் ஆகியவற்றையும் சேர்த்தே பேசுகிறது.
அல்லிப் பாவை, சிக்கல்கள், துயரங்களை எதிர்கொண்டாலும் குட்டைபோலத் தேங்கிவிடாமல் பெரும் நதியாகப் பிரவாகமெடுத்துப் பாய்கிறாள்.
இதுதான் இந்தியப் பெண்மனம். இந்தியப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள பாத்திரம்.
இந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்கிற அல்லிப்பாவையை, ஒரு இலட்சியப் பெண்ணாக அல்லாமல் வாழ்க்கையின் இயல்பை, அதன் எதார்த்தத்தைப் புரிந்துகொண்ட ஒரு சராசரி பெண்ணாகப் படைத்துக் காட்டியிருப்பதன் வழித் தன்னைத் தேர்ந்த படைப்பாளியாக வெளிப்படுத்தியுள்ளர் எழுத்தாளர் மூர்த்தி.
இந்நாவலில் நம்முடன் உறவாடும் அல்லிப்பாவை, பஞ்சவர்ணம், மதிவதனி, ராஜலிங்கம், நகுலன் முதலான பாத்திரங்கள் வெறும் கற்பனை மனிதர்களல்லர்.
இரத்தமும் சதையும் கலந்து உருவான, நம்மைப் போலவே கீழ்மைகளும் மேன்மைகளும் நிரம்பிய மனிதர்கள் தான்.
கதைக்களம், கதைப்போக்கிற்கு, கதைநகர்விற்கு அசல் தன்மையையும், சுவாரசியத்தையும் அளித்து வாசிப்பு நெருக்கத்தைத் தருகிறது.
ஆற்றொழுக்கான கதைசொல்லலும் செறிவான, தேர்ந்த மொழிநடையும் நாவலுக்குக் கூடுதல் கனத்தை ஏற்படுத்தி, வதை முகம் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
மாதவிடாய் பற்றி இந்தச் சமூகத்தின் கற்பிதங்கள் அதன் வலியைவிட மோசமாக நீளுகின்றன.
மதம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் இந்த இயற்கை ஒழுங்கை தீட்டாக கற்பிதம் செய்து கூடுதல் வலியை ஏற்படுத்துகின்றன.
இதை அப்படியே ஏற்கும் சமூகம் பெண்ணின் வாதைகளைப் புரிந்துகொள்வதுமில்லை; பொருள்படுத்துவதுமில்லை. இதன் வலிகளைப் பலர் தங்களது படைப்புகளில் முன்வைத்துள்ளனர்.
பெண் வாழ்வில் எதிர்கொள்ளும் வலிகளை யதார்த்தமாக க.மூர்த்தி தனது ‘வதைமுகம்’ நாவலில் பதிவு செய்துள்ளார்.
- ஜெயபால் இரத்தினம்
**********