ஆச்சர்யங்களையும் மகிழ்ச்சியையும் தந்துகொண்டே இருக்கிறது எழுத்து!

எழுத்தாளர் அ.வெண்ணிலா பதில்

கேள்வி:
 
கவிதைகளின் எளிமைக்கு எப்படிக் காரியமாற்றுகிறீர்கள்?
 
எழுத்தாளர் அ.வெண்ணிலா பதில் :
 
எளிமையாக இருப்பதுதான் வலிமையானது. பாரதியின் வசன கவிதைகள் எனக்கு எப்போதுமே முன்னுதாரண கவிதைகள்.
 
‘இவ்வுலகம் ஒன்று
ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு,
பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு – இவையனைத்தும் ஒன்றே’
ஒரு நிரலில் வரிசைப்படுத்திக்கொண்டு வரும் பாரதியின் இக்கவிதையை விரித்துப் பாருங்கள். தத்துவமும் இக்கவிதைக்குள் இருந்து விரிவதை உணரலாம்.
 
’நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி,
மின்னல், ரத்தினம், கனல், தீக்கொழுந்து. இவையெல்லாம் நினது நிகழ்ச்சி.
கண் நினது வீடு…’
பாரதியின் எளிமைக்குள் அலைபுரளும் ஆழத்தையே என் கவிதைகளுக்குமான முன்னுதாரணமாகக் கொள்கிறேன்.
 
‘இந்தத் தண்டவாளங்கள்
ஏன் இவ்வளவு அழகாக இருக்கின்றன
ரயில்முன் பாய்ந்துகொள்ளும் போது கூட?’ என கல்யாண்ஜியின் வியப்பு வாழ்வின் நிதர்சனத்தை நமக்குச் சொல்கிறதே?
 
’கவிதைகள்
சத்தம்
போடக்கூடாது’ என்று சொல்லும் விக்ரமாதித்தனின் வரிகள் எவ்வளவு பெரிய இலக்கியக் கோட்பாட்டை சில வார்த்தைகளில் சொல்லிப் போகின்றன?
 
‘தொட்டிச் செடியிலிருந்து
சொட்டிக் கொண்டிருக்கும்
நீர் சொல்கிறது
பரவ முடியாமல்
முடங்கியே கிடக்கும்
வேரின் சோகத்தை’ என்ற மு.முருகேஷின் கவிதை காலமாற்றத்தை எவ்வளவு இயல்பாகச் சொல்கிறது?
 
கேள்வி:
 
வெளியான உங்கள் படைப்புகள் சார்ந்து மறக்க முடியாத அனுபவம்?
 
பதில் :
 
ஆனந்த விகடனில் ‘ஒரு வகுப்பறையும் சில இளவரசிகளும்’ என்றொரு கவிதை வெளியானது. பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் அனுபவிக்கும் துயரங்களைப் பேசும் நீள்கவிதை அது.
 
அக்கவிதை விகடனில் வெளியான அடுத்த நாளே அக்கவிதையைப் படித்த அன்றைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப அவர்கள் எங்கள் பள்ளிக்கு எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் பனிரெண்டு கழிப்பறைகள் கட்ட நிதி உதவி செய்தார்கள்.
 
விகடனில் வெளியான ‘வெளிய’ என்ற சிறுகதையும் கிராமங்களில் கழிப்பறை வசதியில்லாததால் பெண்கள் படும் பாட்டை பேசிய கதை.
 
அந்தக் கதையைப் படித்த மென்பொறி பொறியாளர்கள் சேர்ந்து இரண்டு லட்சம் ரூபாய் செலவில், எங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் இன்னொரு பள்ளிக்கு இரண்டு கழிப்பறைகள் கட்டித்தந்தார்கள்.
 
இந்தப் பணியைப் பத்திரிகையாளர் பாரதி செல்வா முன்னெடுத்துச் செய்தார்.
 
‘கங்காபுரம்’ நாவலைப் படித்துவிட்டு, நாவலில் வரும் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வரும் வாசகர்கள் இருக்கிறார்கள்.
 
அறியப்படாத, ஆனால் வரலாற்றுச் செழுமைமிக்க ஊர்களான தாதாபுரம், திருமுக்கூடல் போன்ற இடங்களையும் வார விடுமுறையில் சென்று பார்த்துவிட்டு வந்து, புகைப்படங்கள் அனுப்பும் வாசகர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
 
எழுத்து இப்படியான ஆச்சரியங்களையும் சந்தோசங்களையும் தந்துகொண்டே இருக்கிறது.
 
– எழுத்தாளர் அ.வெண்ணிலா 
 
நன்றி: விகடன்
You might also like