70 வயதில் ஏழு முறைக் கட்சித் தாவிய மைத்ரேயன்!

விளம்பர வெளிச்சத்தில்  இருக்கும் அரசியல்வாதிகள், பதவி இழந்தபின் காற்றுப்போன பலூன் போல் உதிர்ந்துவிடுவார்கள்.

சிலர் எக்குத்தப்பாகவும், ஏடாகூடாமாகவும் ஊடகங்களில் பேசி தங்கள் இருப்பைப் பதிவு செய்து கொள்வார்கள்.

பதவி பறிபோனபின் பதுங்குக்குழியில் மறைந்திருந்தது போல், வீட்டுக்குள்ளேயே முடங்கிக்  கிடந்துவிட்டு நேற்று திடீரென வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார், அதிமுக முன்னாள் எம்.பி.யான மைத்ரேயன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மைத்ரேயன், ஆளுங்கட்சியான திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

திமுகவில் மைத்ரேயன் இணைந்ததும், மூத்த அரசியல்வாதிகள் மட்டுமின்றி, எப்போதும் ‘அப்டேட்’டாக இருக்கும் ஊடகவியலாளர்களும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்ட கேள்வி – மைத்ரேயன் நேற்று வரைக்கும் எந்தக் கட்சியில் இருந்தார்? என்பதுதான்.  

ஏன் அப்படி கேட்டுக்கொண்டார்கள்? மைத்ரேயனுக்கு வயது 70. அவர் கட்சித் தாவுவது இது 7-வது முறை. எனவே இந்த வினா அவர்களிடையே எழுந்ததில் வியப்பு ஏதும் இல்லை. அவரது சரித்திரப்பக்கங்களைக் கொஞ்சம் புரட்டலாம்.

வா.மைத்ரேயன், பாஜகவின் நாற்றங்காலான ஆர்.எஸ்.எஸ். ரத்தக் குரூப்பைச் சேர்ந்தவர்.

1990-களில்  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு அந்த இயக்கத்தின் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

அங்கிருந்து பாஜகவில் பொறுப்புக்கு வந்தார். 1995-ம் ஆண்டு முதல் 97-ம் ஆண்டு  வரை தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்தார்.

1999-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்.

அதிமுகவில் இருந்தது, அவருக்கு வசந்தகாலம். 2002, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக மைத்ரேயனை அமர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணிக்குத் தாவினார். ஓபிஎஸ் –  இபிஎஸ் அணிகள் இணைந்தபோது நான்காவது முறையாக மாநிலங்களவை எம்.பி. பதவியை எதிர்பார்த்தார். அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

கொஞ்சகாலம் அடக்கி வாசித்தார். ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்தபோது இபிஎஸ் அணிக்குத் தாவினார் மைத்ரேயன். அங்கு அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

அதிருப்தியில் இருந்த மைத்ரேயன், 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் தாய்க் கட்சியான பாஜகவுக்கே திரும்பினார். அங்கு அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. பதவி கிடைப்பதற்கான சாத்தியங்களும் தெரியவில்லை.

இதனால் மீண்டும் 2024-ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அதிமுகவில் இணைந்தார். உடனடியாக அவருக்குக் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி அளித்தார் இபிஎஸ்.

மைத்ரேயனோ எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டார். கிடைக்காத கோபத்தில், தனது வழக்கமான பாணியில்  மீண்டும் கட்சித் தாவி, ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டார்.

பாஜக, அதிமுக என பல வாசஸ்தங்களுக்குச் சென்ற மைத்ரேயன். திமுகவில் இப்போது இணைந்துள்ளார்.

அண்மையில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். உடனடியாக  அவருக்கு திமுக இலக்கிய அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அதுபோல் மைத்ரேயனுக்கும் ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like