செல்வத்தைத் தேய்க்கும் படை!

கவிஞர் கரிகாலன் கோபம்

அசல் கூலிகள் தெருவில் நின்று போராடுகிறார்கள். 200 கோடி கூலி பெறுபவர் ரஜினி. லோகிக்கு 50 கோடி கூலியாம்.

துப்புரவுத் தொழிலாளர்களின் முழக்கத்தை மறைக்கிறது ‘மோனிகா, மோனிகா’ குத்துப்பாட்டு. அனிருத்துக்கு கூலியை அள்ளித் தருகிறார் கலாநிதி மாறன். இத்தகு காஸ்ட்லி கூலிகளைப் பார்த்து மகிழ்கிறார் முதல்வர்.

துப்புறவுப் பணி உள்ளிட்ட எல்லாத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பது. ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு இசைவாக மாநில அரசின் கல்வின் கொள்கையை வடிவமைப்பது என ஒன்றிய பாஜக அரசின் மைக்ரோ அலகாக மாறி வருகிறது திமுக அரசு.

‘அதிமுக செய்ததைதானே நாங்கள் செய்கிறோம்’ என்கிறார் மேயர் பிரியா. அதிமுகவும் பாஜகவும் செய்ததையே செய்வதற்கு திராவிட மாடல் எதற்கு?

எம்.என் ராஜம் என்றொரு பழம்பெரும் நடிகை. முதல்வரைக் காண விரும்பி காணொலி பதிவிடுகிறார். மறுநாள் அவர் வீட்டின் கதவைத் தட்டுகிறார் முதல்வர்.

ஏழைத் துப்புறவுத் தொழிலாளிகள் தம் கண்ணீரால் உங்கள் இதயக் கதவைத் தட்டுகிறார்களே! திறக்க மாட்டீர்களா மிஸ்டர் சி.எம்?

புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி, சென்னையைச் சுத்தம் செய்த மக்கள். சோறு இன்றி தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.

நகரைச் சுத்தம் செய்யும் எளிய மக்களை, குறைந்த கூலிக்கு உர்பசெர் சுமீட், ராம்கி என்விரோ எஞ்சினியர்ஸ் லிமிடெட் போன்ற தனியார் நிர்வாகத்திடம் அடகு வைக்க முயல்கிறது திராவிட மாடல் அரசு.

பிறகு எதற்கு மாநாகராட்சிக்கு ஒரு மேயர்? பெருநகர் வளர்ச்சிக்கு ஓர் அமைச்சர்? கார்ப்ரேஷனை பராமரிக்கும் பொருப்பை அம்பானி, அதானி, கலாநிதி மாறன் என்று ஏதாவதொரு பணக்காரரிடம் கொடுத்துவிடலாமே?

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்கிறது தமிழ் மறை. இதன் பொருள் என்ன? உங்கள் தந்தை உரை எழுதியிருக்கிறார். படியுங்கள் முதல்வரே.

You might also like