இந்தியாவை உலுக்கும் SIR பிரச்சினை!

வடக்கே பீகார் முதல் தெற்கே தமிழகம் வரை கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினையாக மாறியிருக்கிறது ‘SIR’ (special intensive revision of electoral rolls – வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்).

ஒருபக்கம் பீகாரில் இருக்கும் 65 லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம் தேர்தல் கமிஷன் இல்லாமல் செய்துவிட்டதாக இந்தியாக் கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மறுபுறம் பீகாரைச் சேர்ந்த சுமார் 6.5 லட்சம் வாக்காளர்களைத் தமிழகத்தில் சேர்க்க தேர்தல் கமிஷன் மூலம் மத்திய அரசு சதி செய்வதாக திமுக கூட்டணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அது என்ன சார்?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது.

இதை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தத்தை (‘சார்’ – ‘SIR’ – special intensive revision of electoral rolls) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, கடந்த ஜூன் மாதம் இப்பணிகள் தொடங்கின.

இதன்படி வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்படி ஒரு வாக்காளர் தனது வாக்குரிமையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால்,

அதுவும் பீகாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராகப் பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

அதோடு வேலைகளுக்காக பல்வேறு மாநிலங்களில் தங்கியிந்த வாக்காளர்களின் ஓட்டுக்கும் இந்த இந்த சிறப்பு தீவிர திருத்தம் ஆப்பு வைத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு சிக்கல்?

வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமையை இந்த புதிய திட்டம் தடுக்கிறது.

அந்நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் என்பதால் இந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்தை பாஜக ஆதரிக்கிறது.

அதேநேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதை எதிர்க்கின்றன. முஸ்லிம்களின் வாக்களிக்கும் உரிமையை நிராகரிக்க இது பயன்படுத்தப்படும் என்பது அவர்களின் அச்சமாக உள்ளது.

“சட்டப்பேரவைத் தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருக்கும் சூழலில். இவ்வாறாக சிறப்புத் தீவிர திருத்தம் செய்வது தவறுதலாக, தகுதியான வாக்காளர்களை நீக்குவதையே நிகழ்த்தும். இது பாஜகவுக்கு சாதகமான செயல்பாடு” என்று அக்கட்சிகள் புகார் கூறுகின்றன.

வெளிமாநிலத்தில் 36 லட்சம் பேர்

பீகார் மாநிலத்தில் நடந்து வந்த சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த 26-ம் தேதி நிறைவு பெற்ற நிலையில் 36 லட்சம் பேர், அம்மாநிலத்தில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்மாறி உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வாக்குரிமை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியத் தலைமை தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர், “அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் எந்த தொகுதியில் வசிக்கிறாரோ அந்த தொகுதியில்தான் அவர் வாக்களிக்க தகுதியுடையவர் ஆகிறார்.

தற்போது பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயர், அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எந்த மாநிலத்தில், எந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ?, அங்கு அந்த வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

திராவிட அரசியலுக்கு ஆபத்து:

இங்கேதான் தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு ஆபத்து வந்திருப்பதாகச் சொல்லி திமுக கூட்டணிக் கட்சியினர் போர்க் குரல் எழுப்பியுள்ளனர்.

தேர்தல் அதிகாரி சொன்னபடி பார்த்தால் தமிழகத்தில் இப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 6.5 லட்சம் பேர் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள்.

இதில் சென்னையில் மட்டும் மெட்ரோ வேலைக்காக வந்தவர்கள் உட்பட சுமார் 3.5 லட்சம் பேர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது தவிர கோவை, திருப்பூரிலும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

தமிழகத்திலும் விரைவில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்க உள்ளது.

அப்போது தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள், தங்களது பெயர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிப்பார்கள்.

இவர்களது மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்கள்.

மொத்த வாக்குகளில் 10 சதவீதம்

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழகத்தில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர்.

இந்த எண்ணிக்கை இப்போது இரட்டிப்பாகி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நாடு முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்து விட்டால், தமிழகத்தில் தற்போது உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம்.

அந்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.

பொதுவாக இந்தி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளனர். இந்தச் சூழலில் வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால், திராவிட கட்சிகளின் வாக்குகள் குறைந்து, பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று திமுக கூட்டணித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை இப்பிரச்சினையை பற்றி பேசவில்லை.

ப.சிதம்பரம் சொல்வது என்ன?

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து,

பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளி தமிழ்நாட்டிற்கு ’நிரந்தரமாகக் குடியேறியவர்’ என்று எப்படிக் கருத முடியும்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இது தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் பெரிய அளவில் தலையிடும் செயலாகும்.

வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி பீகார் அல்லது அவரது சொந்த மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ஏன் திரும்பிச் செல்லக்கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால், தேர்தல் கமிஷன் இதைக் கேட்பதாக இல்லை. ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு இந்தியர் என்ற விதிப்படி செயல்பட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து நீதிமன்றத்தின் வாசலை மிதித்துள்ளது. யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

– பி.எம். சுதிர்

You might also like