திகிலூட்டும் ‘ஹாரர்’ படங்கள் எப்போதுமே ரசிகர்களை ஈர்க்கத்தக்கவை. தலைமுறைகள் தாண்டியும் அவை வசீகரிக்கும். ஒரே ஒரு நிபந்தனை, எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அவற்றின் உள்ளடக்கம் ‘கிளாசிக்’ ஆக இருக்க வேண்டும்.
காஞ்சனா, அரண்மனை போன்று ‘விஎஃப்எக்ஸ்’ துணையோடு மிரட்சியடைய வைக்கிற ‘ஹாரர்’ படங்களில் நகைச்சுவையும் ஒரு அம்சமாகக் கலந்த பிறகு சாதாரண ‘மசாலா’ படங்களாகவே அவை காட்சியளிக்க ஆரம்பித்தன.
அந்த வரிசையில் சேருமா அல்லது கிளாசிக் ‘ஹாரர்’ படம் ஆகுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அபிலாஷ் பிள்ளை எழுத்தாக்கத்தில், விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், ஷிவதா, மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சுமதி வளவு’ மலையாளத் திரைப்படம்.
தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘சுமதி வளவு’?
’சு.வ.’ கதை!
வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களது வருகையைத் தடுக்க, குறிப்பிட்ட சில பகுதிகளில் பேய்களின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தச் சிலர் முயற்சித்திருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, கர்ப்பிணியாக இருந்த சுமதி என்ற பெண்ணைப் பலி கொடுத்திருக்கின்றனர்.
அந்த நேரத்தில், அப்பெண் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர்கள் நினைத்தபடி சுமதியின் ஆன்மாவை அவர்களால் ஆட்டுவிக்க முடியவில்லை.
அதேநேரத்தில், தான் பலி கொடுக்கப்பட்ட பகுதியைக் காக்கிற பொறுப்பை அந்த ஆன்மா ஏற்றுக்கொள்கிறது. அதன்படி, அந்த சாலையில் இருக்கிற குறிப்பிட்ட வளைவை இரவு 8 மணிக்கு மேல் கடக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்துகிறது. அதனால், அந்த இடத்தின் பெயரே ‘சுமதி வளவு’ என்றாகிறது.
தமிழ்நாடு – கேரள எல்லையோரம் இருக்கும் ‘கல்லேலி’ கிராமத்தின் அருகே அந்த சுமதி வளவு இருக்கிறது. வனத்துறையினரும் சரி, அக்கிராமத்தினரும் சரி, அந்த வளவு தாண்டிச் செல்லும் அபாயத்தை முயற்சித்ததில்லை. மீறிச் சென்ற சிலர் அகாலமாக மரணமடைந்திருக்கின்றனர் என்பதாகத் தகவல்.
அந்த அபாயத்தை மீறியவர்கள் இரண்டு பேர் என்கிற விஷயம் கல்லேலியில் உலா வருகிறது.
மகேஷின் (கோகுல் சுரேஷ்) சகோதரி ஒருவரைக் காதலித்திருக்கிறார். ஒருநாள் இரவு அப்பெண் அந்த நபருடன் வாழ்வதற்காக வீட்டை விட்டு வரும்போது, அவருக்கு உதவியிருக்கிறார் மகேஷின் நண்பனான அப்பு (அர்ஜுன் அசோகன்).
ஊரார் அப்படிச் சொன்னாலும், அப்பு அது குறித்து எதுவுமே சொல்வதில்லை. அவரைப் பொறுத்தவரை, அப்படியொரு விஷயமே நடக்கவில்லை.

‘சுமதி வளவு’ என்ற பெயரைக் கேட்டாலே நடுங்கக்கூடியவர் அப்பு. பயந்த சுபாவம் கொண்டவர். ‘அப்புவாவது, பயமில்லாமல் சுமதி வளவைக் கடப்பதாவது’ என்பதே அவரது குடும்பத்தினரின், நண்பர்களின் எண்ணமாக இருக்கிறது.
அதேநேரத்தில், தங்கள் பெண்ணை அப்பு கொன்றுவிட்டதாக நினைக்கின்றனர் மகேஷின் குடும்பத்தினர். இது இரு குடும்பங்களுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்துகிறது.
சில ஆண்டுகள் கழித்து, மகேஷின் சித்தப்பா மகளான பாமவைக் (மாளவிகா மனோஜ்) காதலிக்கத் தொடங்குகிறார் அப்பு. ராணுவத்தில் இருக்கும் மகேஷுக்கு அந்த விஷயம் தெரிய வர, அவர் உடனடியாக விடுப்பில் ஊர் திரும்புகிறார்.
அதையடுத்து, பாமாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய முடிவெடுக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஒரு பெண்ணின் பிரசவத்திற்காக நள்ளிரவில் சுமதி வளவைக் கடக்க வேண்டிய கட்டாயம் கல்லேலி கிராமத்தினருக்கு ஏற்படுகிறது. அப்பெண்ணை அழைத்துச் செல்பவர்களில் ஒருவராக அப்புவும் இருக்கிறார்.
அதன்பிறகு என்னவானது? சுமதி வளவு பெயர் கேட்டாலே நடுங்குபவரால், அப்பகுதிக்குச் செல்ல முடிந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
ஒரு கிராமம். அங்குள்ள மக்களிடம் நிலவும் ‘பேய்’ பற்றிய கதைகள். அதற்குக் காரணமான ஒரு நிலப்பகுதி. அங்கு என்ன நிகழ்கிறது என்கிற விவரிப்பு என விரிகிறது ‘சுமதி வளவு’ திரைப்படம்.
இதன் கதை திரைக்கதை வசனத்தை எழுதிய அபிலாஷ், நல்லதொரு களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக, தொடக்கக் காட்சிகளில் சில இருக்கின்றன.
அதன்பிறகு கதாநாயகன், அவரது பயம், காதல், நட்பு என்று கதை விரியும்போது, ‘சுமதி வளவு’ முக்கியத்துவம் குறைந்து போகிறது. ஒருகட்டத்தில் அதற்கு எதிர்த்திசையில் கதை பயணிக்கத் தொடங்குகிறது. அதுவே இப்படத்தின் பலவீனம்.
சிரிக்கலாம்..!
பெரிய கண்கள், சட்டென்று ஈர்க்க வைக்காத முகம், சாதாரண உடல்வாகு என்று தோற்றமளிக்கிற அர்ஜுன் அசோகன், திரையில் நடிக்கத் தொடங்கினால் பிரமிக்க வைத்துவிடுவார். இதிலும் அப்படியே. என்ன, மாஸ்டர் தினேஷின் ஆட்டுவிப்பில் நடனம் ஆடும்போது மட்டும் அவரது உடலசைவுகளில் ‘ரோபோ’தனம்.
‘ஜோ’ பட நாயகி மாளவிகா மனோஜை ‘ஸ்கிரீன்சேவராக’ வைத்திருக்கும் பல இளசுகளைக் காண முடியும். அவர்களுக்குப் புதிதாக ‘கண்டெண்ட்’ வழங்கும் வகையில் இதில் அவர் தோன்றியிருக்கிறார். சட்டென்று கவர்கிற அவரது அழகு இந்தப் படத்திலும் நிறைந்திருக்கிறது.
சுரேஷ் கோபி மகன் கோகுல், சைஜு குரூப், பாலு வர்கீஸ், ஷிவதா, சித்தார்த் பரதன், ஷ்ரவண் முகேஷ், ஜஸ்ன்யா, குழந்தை நட்சத்திரங்களான ஸ்ரீபத் யான், தேவநந்தா எனப் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
’தலைவன் தலைவி’ கிளைமேக்ஸில் ‘கேரக்டர்ஸை இண்ட்ரடீயூஸ் பண்ணிட்டே இருக்காங்கப்பா’ என்று யோகிபாபு கிண்டலடிக்கும் வகையில் வந்து போவாரே, அவரும் இதில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது பெயர் ஜுஹி ஜெயகுமார்.
இப்படிப் படம் முழுக்கச் சுமார் இரண்டு டஜன் பேராவது தலைகாட்டியிருப்பார்கள்.
இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு ஷாட்கள், காட்சிகள் படத்தில் உண்டு. ஆனால், அதே அளவுக்கு டைட்டிலில் இருக்கும் ‘சுமதி வளவு’க்கான இடம் தரப்படாதது வருத்தம் தரும் விஷயம்.
இயக்குனர் விஷ்ணு சசி சங்கர் நேர்த்தியான ‘ஹாரர்’ படமாக இதனை ஆக்குவதில் தோல்வியைச் சந்தித்திருப்பது அந்த இடத்தில் தான்..
ஷங்கர் பி.வி.யின் ஒளிப்பதிவு கண்களுக்குக் குளுமையான காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கிறது.
ஷபீக் முகம்மது அலியின் படத்தொகுப்பு காட்சிகளைச் சரியான அளவில் நறுக்கியிருக்கிறது.
குறிப்பிட்ட நிலப்பகுதியை, தொண்ணூறுகளில் நிகழ்வதாகச் சொல்லப்படுகிற கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிற வகையில் அமைந்திருக்கிறது அஜய் மங்கட்டின் கலை வடிவமைப்பு.
இன்னும் எம்.ஆர்.ராஜகிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு, சுஜித்தின் ஆடை வடிவமைப்பு என்று பல அம்சங்கள் இதில் நம்மைக் கவர்வதாக இருக்கின்றன.

ரஞ்ஜின் ராஜ் இசையில் பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. அதேநேரத்தில் பின்னணி இசையில் மனிதர் மிரட்டியிருக்கிறார்.
தொடக்கக் காட்சியொன்றில் ‘மாமா..’ என்று பேய் அழைப்பதை உணர்ந்து இரு பாத்திரங்கள் மிரட்சியடைகிறபோது வருகிற இசையானது நாமே அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். அது போன்று பின்னணி இசை அமைந்த காட்சிகளே இப்படத்தின் பலமாக இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக நோக்கினால், அர்ஜுன் அசோகன் பாத்திரச் சித்தரிப்பு மூலம் ஒரு ‘ஹாரர்’ கதையில் ஆங்காங்கே சிரிக்க வழி ஏற்படுத்தியிருக்கிறது அபிலாஷ் – விஷ்ணு சசி சங்கர் கூட்டணி. அதேநேரத்தில் ‘சிரிக்கலாம்.. லேசாக மிரளலாம்..’ என்பதைத் தாண்டி ஒரு ‘கிளாசிக்’ ஹாரர் படமாக இதனை மாற்றத் தவறியிருக்கிறது..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்