கூலித் தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை…!

வி.எஸ்ஸின் அரசியல் பயணம்

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-வது வயதில் ஜூலை 21-ம் தேதி காலமானார். தன் 90-களின் இறுதி வரையும் தீவிர அரசியலில் இருந்துகொண்டு, மக்களின் மனம் கவர்ந்த தலைவராக இருந்த அவரைப் பற்றிய சில நினைவுகள்!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா என்ற ஊரில் பிறந்தவர் வி.எஸ்.அச்சுதானந்தன். அவரது அப்பாவின் பெயர் வேலிக் காகாத்து சங்கரன். அம்மாவின் பெயர் அக்கம்மா.

சிறுவயதில் உயர் ஜாதியினர் வசித்த தெருவின் வழியாக நடந்துதான் அவர் பள்ளிக்கு செல்லவேண்டும். அப்படி ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது அங்குள்ள சில சிறுவர்கள், அவரது ஜாதிப் பெயரை சொல்லி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் அவமானப்பட்ட அச்சுதானந்தன், தன் அப்பாவிடம் போய் சொல்லியிருக்கிறார்.

அந்த காலத்திலேயே புரட்சியாளராக இருந்த அவரது அப்பா, அடுத்த நாள் அச்சுதானந்தன் பள்ளிக்கு போகும்போது நீளமான ஒரு கம்பியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த நாளும் அச்சுதானந்தன் பள்ளிக்கு போகும் நேரத்தில், அவரைக் கிண்டல் செய்வதற்காக அந்த சிறுவர்கள் காத்திருந்தனர்.

அவர்கள் அச்சுதானந்தனைக் கண்டதும் கிண்டல் செய்ய, தன்னிடம் உள்ள நீளமான கம்பியை வைத்து அவர்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார் அச்சுதானந்தன். அநீதிக்கு எதிரான அச்சுதானந்தனின் போராட்டம் அன்றுதான் தொடங்கியது.

வி.எஸ்.அச்சுதானந்தனின் 4-வது வயதிலேயே அவரது அம்மா காலமானார். 11 வயதாக இருக்கும்போது அப்பா காலமானார். அவரது அண்ணன் கங்காதரன் குடும்பப் பொறுப்பை ஏற்றார்.

குடும்பத்தின் வறுமையான சூழலால் அவரால் 7-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. புத்தகம் வாங்க காசு இல்லாததே அதற்கு காரணம்.

படிப்பை நிறுத்திய வி.எஸ், அண்ணனுடன் சேர்ந்து அப்பா விட்டுப்போன தையல் கடையை நடத்தத் தொடங்கினார்.

அந்த காலத்தில் சுதந்திரப் போராட்டம் மற்றும் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்திக்கும் இடமாக அவர்களின் தையல் கடை இருந்தது.

அங்கிருந்தவர்களின் பேச்சுகளால் கவரப்பட்ட வி.எஸ்ஸுக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. 17 வயதில் கயிறு திரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த வி.எஸ்ஸுக்கு தொழிலாளர்கள் நசுக்கப்படுவதைப் பற்றி கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள் சொன்னது உண்மைதான் என்று தோன்றத் தொடங்கியது. உடனே அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்.

கயிறு திரிக்கும் நிறுவனத்தில் வேலையை முடித்த பிறகு தோழர் கிருஷ்ணபிள்ளை, ஆர்.சுகந்தன், உன்னி ராஜா ஆகியோர் நடத்திய கம்யூனிஸ வகுப்புகளில் பங்கேற்றார். கம்யூனிஸ இயக்கத்தைப் பற்றி ஆழமாக தெரிந்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் தோழர் கிருஷ்ணப்பிள்ளை, அவரை வேலையை விட்டு விலகி முழுநேர கம்யூனிஸ்ட் இயக்க தொண்டராக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

அன்றிலிருந்து தான் இறக்கும் 101 வயது வரை ஒரு முன்னணி கம்யூனிஸ்ட் தொண்டராகவே வாழ்ந்துள்ளார் வி.எஸ்.அச்சுதானந்தன்.

அச்சுதானந்தனின் முதல் போராட்டம் குட்டநாடு பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்காக நடந்தது.

அங்குள்ள தொழிலாளர்களுக்கு ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் ஊதியமாக வழங்கி வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள் நிலச்ச்சுவான்தார்கள்.

அவர்களுக்கு நல்ல ஊதியம் பெற்றுத்தருவதற்காக அச்சுதானந்தன் தன் முதல் போராட்டத்தை நடத்தினார். நீண்டநாள் போராட்டத்துக்குப் பிறகு, அவர்களுக்கு உரிய கூலியைக் கொடுக்க நிலச்சுவான்தார்கள் ஒப்புக்கொண்டனர்.

குட்டநாட்டில் தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம், பின்னர் கேரளாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

விவசாயிகளுக்கு உரிய கூலி தரப்பட்டது. அவர்களுக்கு இந்த நியாயம் கிடைக்க வி.எஸ்.அச்சுதானந்தன் நடத்திய முதல் போராட்டமே காரணம்.

கேரள அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து முதலமைச்சர் பதவி வரை உயர்ந்த முதலாவது அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன்.

2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராக இருந்த இவர், 2019-ஆம் ஆண்டு லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வி.அருண் குமாரின் இல்லத்தில் வசித்து வந்தார்.

அச்சுதானந்தனுக்கு கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத்திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் ஜூலை 21-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வி.எஸ்.அச்சுதானந்தனின் உயிர் பிரிந்தாலும், கேரள மக்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து போன வி.எஸ். என்ற இரண்டெழுத்து மந்திரத்தை யாராலும் பிரிக்க முடியாது.

You might also like