சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு தான் நடக்க இருக்கிறது என்றாலும், அதற்கான பிரச்சாரங்கள் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபுறமும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னொரு புறமும் தங்கள் பயணத்தைத் துவக்கி இருக்கிறார்கள்.
இதில், தென்தமிழகத்தில் தன்னுடைய பிரச்சாரத்தைத் துவக்கிய எடப்பாடி பழனிசாமி, பிரச்சாரத்தின்போது பேசின ஒரு கருத்து, வெவ்வேறு ஊடகங்களில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.
அவர் பேசியதற்கு எதிராகப் போராட்டங்களும் நடந்திருக்கின்றன அல்லது நடத்தப்பட்டிருக்கின்றன.
அப்படி என்ன பேசிவிட்டார் எடப்பாடி பழனிசாமி?
அறநிலையத்துறையின் கீழ் நடத்தப்படும் கல்லூரிகளைப் பற்றி எடப்பாடி பேசியிருப்பது தான் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.
கோவிலுக்கு வருகிறவர்கள் கொடுக்கிற பணத்தை வைத்து கல்லூரிகளை நடத்தலாமா என்கின்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் எடப்பாடி.
இத்தகைய கேள்வியை எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருப்பதுதான் பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
கல்விக்கு ஒதுக்கீடு செய்வதை எப்படி திராவிட இயக்கத்தின் வழிவந்ததாகத் தன்னை காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி எப்படி இத்தகைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இதே எடப்பாடி பழனிசாமி, அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அறநிலையத்துறையின் கீழ் பழநியில் ஒரு கல்லூரியைத் துவக்கி வைத்திருக்கிறார்.
அதற்கு முன்பே பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோதிருந்தே அறநிலையத்துறைக்குக் கீழ் கல்லூரியை நடத்துவது என்பது முடிவாகி அதில் சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போதே இத்தகைய செயல்பாடுகள் துவங்கிவிட்டன.
அதிலும் குறிப்பாக, கோவிலுக்கு வரும் நிதியிலிருந்து, அதிலும் உபரியாக வரும் நிதியிலிருந்து மட்டுமே இத்தகைய கல்விக்கூடங்களை நடத்தலாம் என்பதும், அதே சட்டவிதியின் கீழ் சொல்லப்பட்டிருக்கிறது.
நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பு வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி இந்தக் குறைந்தபட்ச வரலாறு தெரியவில்லை.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததுமே, ஜெயலலிதா பாணியில் சொன்னால் ‘செலெக்ட்டிவ் அம்னீசியா’ தோற்றுவிட்டதா?
தான் துவக்கி வைத்த கல்லூரி பற்றிய நினைவுகூட கூட்டணி மகிமையில் அவருக்கு ஏன் மறந்து போனது?
அதே சமயத்தில் அறநிலையத்துறையை அரசுப் பொறுப்பிலிருந்து விடுவித்து, அதை பழையபடியே தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.
அதிலும், அடிக்கடி ஊடகங்களுக்கு முன் காரசாரமாக பேசுவதில் வல்லவரான எச்.ராஜா இதே அறநிலையத்துறை செயல்பாடு பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார்.
தற்போது, பிரச்சாரப் பயணத்தில் இந்துத்துவா அமைப்புகள் முன்னிறுத்தக்கூடிய அதே கருத்தைத்தான் எடப்பாடி பழனிசாமியும் முன்னிறுத்தி இருக்கிறார்.
ஆக, இந்துத்துவ மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கள் வலியுறுத்தி வரும் அதே கோரிக்கைக்கு வலுசேர்க்கவா பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார் எடப்பாடி?
என்னதான் பாஜகவுடன் சேர்ந்தாலும் தன்னுடைய கட்சியில் தனக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்கள் வழியைப் பின்பற்றுவதிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டு பாஜகவின் கொள்கைப்படி தன்னை காவிமயமாக மாற்றிக்கொள்ள தொடங்கி விட்டாரா எடப்பாடி பழனிசாமி? என்பதுதான் அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஒரு கூட்டணி இத்தகைய ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துமா என்ன?
– யூகி