எழுத்தாளர் சாம்ராஜினுடைய மிக அற்புதமான ஒரு கவிதை இருக்கின்றது. ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். அந்தப் பெண்ணைப் பற்றியான கவிதையை இப்படி ஆரம்பிக்கின்றார்.
‘ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று யாரும் அவளைக் கிண்டல் செய்ய ஒருபோதும் அனுமதித்ததில்லை.
முழங்காலில் பட்ட அடியை அப்பாவிடம் கூட காண்பித்ததில்லை. கணவனே ஆனாலும் பகலில் அனுமதித்ததில்லை.
உடை மாற்றும்போது அம்மாவைக் கூட அறையில் அனுமதிக்காதவள். நேற்றிரவு அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
பிணவறையில், அவளுடைய பிணம் அம்மணமாய்க் கிடக்கின்றது.
ஈக்களும் கண்களும் அங்கே மொய்க்க அம்மணமாய்க் கிடக்கின்றாள் அன்னலட்சுமி.
இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், தற்கொலையே செய்து கொண்டிருக்கமாட்டாள் அன்னலட்சுமி’ என்று அந்தக் கவிதை முடிகின்றது.
இந்தக் கவிதை எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியும், மனநடுக்கமும் வாழ்நாளுக்கும் நீடிக்கும்.
- பவா செல்லதுரையின் ‘சொல்வழிப் பயணம்’ என்ற நூலில் இருந்து.