45 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயம்!

ராகேஷ் சர்மா சொன்ன விண்வெளி ரகசியம்!

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயண வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்துள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள சுபான்ஷு சுக்லா, “ஜெய் ஹிந்த்… ஜெய் பாரத் …” என்ற முழக்கத்துடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குள் நுழைந்திருக்கிறார்.

தனது விண்வெளிப் பயணத்தைப் பற்றி நேற்று விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பேசிய அவர், “நமது பூமியை இப்படி ஒரு நேர்த்தியான இடத்தில் இருந்து பார்க்க முடிந்த ஒரு சில பேரில் நானும் ஒருவனாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நான் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த நிமிடம், இங்குள்ள குழுவினர் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

அடுத்த 14 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதிலும், ஒன்றிணைந்து செயல்படுவதிலும் அற்புதமான அனுபவங்கள் கிடைக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார்.

சுபான்ஷு சுக்லா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பேட்டி கொடுத்த அதே சமயம், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா, பாதுகாப்பு துறையின் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

தனது விண்வெளிப் பயணம் பற்றிய அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் ராகேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளி பயணத்துக்கு பிறகு இந்திய விமானப் படையில் பணியாற்றிய ராகேஷ் சர்மா, அதன்பிறகு இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தின் டெஸ்ட் பைலட்டாக இருந்துள்ளார்.

தேஜஸ் விமானத்தை இந்திய விமானப்படையுடன் சேர்ப்பதற்கான சோதனைகளில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

விண்வெளிக்குச் செல்ல விரும்பும் வீரர்களுக்கு தனது அனுபவங்களைப் பாடமாக நடத்தும் பணிகளையும் அவர் செய்து வருகிறார். 

”இந்தியாவும் சோவியத் யூனியனும் இணைந்து நடத்திய விண்வெளி திட்டத்தின் கீழ் நான் விண்வெளிக்கு சென்றேன்.

விண்வெளிப் பயணத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் டெஸ்ட் பைலட்டாக இருந்தேன். விண்வெளி வீரராவதற்கான தகுதிகளுடன் இளமைத் துடிப்புடனும் இருந்ததால் இந்த விண்வெளிப் பயணத்துக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பு 18 மாதங்கள் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சோவியத் யூனியனில் பயிற்சி பெறுவதற்கு ரஷ்ய மொழி தெரிந்திருப்பது அவசியம் என்று எனக்கு சொல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 மாதங்களில் நான் ரஷ்ய மொழியைக் கற்றேன்.

அதன்பிறகு மாஸ்கோவுக்கு அருகில் உள்ள ஸ்டார் சிட்டியில் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

18 மாத பயிற்சிக்குப் பின்னர் எனது விண்வெளிப் பயணம் தொடங்கியது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்லும் பயணம் மிகவும் இனிமையானதாக இருந்தது.

மேலே இருந்து இந்தியாவைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது.

இமயமலை உள்ளிட்ட ஏராளமான மலைகள், காடுகள், நதிகள், பரவிக் கிடந்த பச்சை நிலப்பரப்பு என்று இந்தியாவை மேலே இருந்து பார்க்கும்போது நிஜமாகவே பிரமிப்பாக இருந்தது.

காடுகளின் பச்சை, கடலின் நீலம் என்று பல்வேறு நிறங்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது” என்றார்.

விண்வெளி ரகசியங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “விண்வெளி மையத்தில் 8 நாட்கள் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டேன். விண்வெளியில் இருக்கும்போது இரவும் பகலும் அசாதாரணமாக இருக்கும். 45 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்க முடியும்” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் பல சாதனைகளைப் படைக்கும்.

இந்த விஷயத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது“ என்றார்.

விண்வெளியில் இந்தியா எத்தனை சாதனைகள் படைத்தாலும், அங்கு சென்ற முதல் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளும் ராகேஷ் சர்மா, சுபான்ஷு சுக்லாவை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்.

அவர் மட்டுமா, 2 விண்வெளி வீரர்களை ஒருசேர பார்க்க ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருக்கிறது.

– பி.எம். சுதிர்

You might also like